படம் ஓடினால் ஹிட் என்பது தாண்டி வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு ‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா என்று பேசப்பட்டு, பல ட்விஸ்ட்களுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிற படம் ‘இது நம்ம ஆளு’

ரெண்டு காதலில் தோற்றவன், மூன்றாவது காதலிக்கு மூணு முறை தாலிகட்டும் ஜாலியான காதல் படம்! ஏன், எதற்கு, எப்படி என்பது திரைக்கதை.

சிம்புவின் நடிப்புக்கு ‘விடிவி’ கார்த்திக் கேரக்டரை மட்டுமே சிலிர்த்துக் கொண்டு பேசிய ரசிகர்களுக்கு, இன்னொரு சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்திருக்கிறார்  சிம்பு. விடிவி எலைட் வெர்ஷன் என்றால் இது பொலைட் வெர்ஷன்.

சண்டை இல்லை, பன்ச் இல்லை, விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை. அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம் அடிக்கவில்லை. எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு.

நயன்தாரா வெறுப்பேற்றும் போதெல்லாம் பொங்கி எழாமல் அடக்கி வாசித்து அடக்கி வாசித்து நயன்தாராவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர முயற்சித்து ஓரளவு அதில் வெற்றியும் பெறுகிறார்.

‘சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளாஎன நயன் சிலாகிப்பது போல், நம்மையும் எண்ண வைத்துவிடுகிறார் பாண்டிராஜ். ஆனால் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எல்லா வசனத்தையும் மெதுவாகவே பேசுவது ஏன் ப்ரோ?

நயன்தாரா! இந்த மாதிரிப் பொண்ணு கடுப்பேத்தினா எத்தனை வேணா தாங்கிக்கலாம்யா என்பதுபோல வருகிற ஒவ்வொரு காட்சியிலும் அப்படி மின்னுகிறார்.

அந்தக் குட்டியூண்டு உதட்டில், சில்மிஷ சிரிப்பை உதிர்த்துக் கொண்டே சிம்புவுக்கு இவர் வைக்கும் டெஸ்ட்கள் ஒவ்வொன்றும் ஓஹோ.

அழைப்பை எடுக்காமல் கடுப்பேற்றும்போதும், அழைத்துக் கோபப்படும்போதும், ஆக்ஸிடென்ட் பற்றிச் சொல்லும்போது சண்டை போடும்போதும், பேச்சை வளர்த்து வளர்த்து முத்தம் கேட்பதாகட்டும் அம்மணிக்கு க்யூட்னஸ் ஓவலோட்!

அதில் காஸ்ட்யூமரின் பங்கு குறிப்பிடவேண்டியது!

ஆர்யா தமன்னா இந்தப் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் இடைவேளையோடு நடையைக் கட்டியிருப்போம்.

படத்தின் ஸ்பெஷலே, சிம்பு – நயன் உடனான ரியல் லைஃபை ஒட்டிய கதையையே ரீலிலும் காட்டிய இயக்குநர் பாண்டிராஜின் புத்திசாலித்தனம்தான்.

ஆரம்பத்திலிருந்து படம் முடியும் போது ‘உங்களை வெச்சு ஒருவழியா படத்தை முடிச்சுட்டேன்யா’ என்பது வரை தொய்வில்லாமல் நிஜ கலாய்ப்புகளாய் ரசிகனை ஒன்ற வைத்ததில் ஜொலிக்கிறார் பாண்டிராஜ்.

ஆண்ட்ரியா, சிம்புவின் ப்ரேக் அப் ஆன காதலியாக வந்து, படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் சிம்பு – நயன் சேர உதவுகிறார்.

அவருக்கும்  சிம்புவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் அந்த டிபார்ட்மென்டல் காட்சியும், அதை வைத்துக் கொண்டே விளம்பர லீட் எடுக்கும்  ஐடியாவும் செம்ம!

கால், மெசேஜ்கள் வரும்போது திரையில் அதைக் காண்பிப்பதும், அதே போல சிம்பு நயன் பெயரையும், நயன் சிம்பு பெயரையும்  காண்டாக்டில் சேமிப்பதிலேயே அவர்கள் கெமிஸ்ட்ரி வளர்வதையும், தேய்வதையும் இந்த ஜெனரேஷன் டிரெண்டுக்கு ஏற்ப காண்பித்ததற்கும் சபாஷ்!

சிம்பு பேசிக் கொண்டே இருக்க அதற்கு கவுன்டர் கமெண்ட் கொடுக்கும் வேலையை முழுநேரமாகச் செய்து வருகிறார் சூரி. சூரியின் குறிப்பிடப்படக்கூடிய சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

மனதில் நிற்கவில்லையென்றாலும், படம் பார்க்கும்போது சூரியின் காமெடிகள்தான் கொஞ்சம் எனர்ஜி ஏற்றுகிறது.

mnaநயன்தாரா 1000 முறை சிம்புவிடம் ‘ஸாரி’ சொல்லச் சொல்ல, அதை எண்ணும் சூரியின் அட்ராசிட்டி செம!

லவ் பண்ணும்போது ஓகே. நிச்சயம் ஆன பொண்ணுகூட பேசறப்பவும் ஃப்ரெண்ட் கேக்கறா மாதிரியேவா பேசிட்டிருப்பாங்க? அதுவும் சூரியே ‘ரொம்ப பேசி U சர்ட்டிஃபிகேட் படத்துக்கு A சர்ட்டிஃபிகேட் வாங்க வெச்சுடாதீங்கடா’ என்னும் அளவுக்கு!

அப்பாக்கள் என்றாலே அன்பானவர்கள்தான் என்ற ‘பாண்டிராஜ் தியரி’தான் ஜெயப்பிரகாஷ் கேரக்டருக்கும். அன்பான அப்பாவாக அல்லாமல், சிம்புவுக்கு அருமையான நண்பனாக வந்துபோகிறார் இந்தப் ‘Buddy’.

ஜெயப்ரகாஷுக்கும் நயன்தாராவின் அப்பாவாக வரும் உதய் மகேஷ் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

குறளரசன் இசை என்பதை டைட்டிலில் காட்டிய அளவுக்கு படத்தின் பின்னணியிலும் காட்டியிருக்கலாம்.

ஆஃபீஸ், வீடு, பைக், கார் என்று சீரியலுக்கான லொகேஷனிலேயே படமும் பயணிப்பது கொஞ்சம் போரடிக்கிறது. அதே போல அத்தனை அந்நியோன்ய சம்பந்திகள் இதற்கெல்லாம் கல்யாணத்தை நிறுத்துவது.. ம்ஹும்.

தயாரிப்பு டி.ஆர் என்பதால் ‘அந்த டயலாக் ஷீட்டை எங்கிட்ட குடு’ என்று பாண்டிராஜிடமிருந்து வாங்கி ரீ ரைட் பண்ணிக் கொடுத்துவிட்டாரோ எனுமளவு கொரியர் / கேரியர், சரித்திரம் / தரித்திரம், கவுச்சி / கவர்ச்சி என்று ஒவ்வொரு வரிக்கும் ரைமிங்கோ ரைமிங்.

‘ஆறு மணி நேரமா பேசறாங்க’ என்று சூரி சொல்வதை நாமே உணருமளவு நயனும், சிம்புவும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எகெய்ன், அது நயன் – சிம்பு என்பதாலும் அவர்களின் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை நாம் அறிந்தவர்கள் என்பதாலுமே ரசிக்க முடிகிறது.

அது தெரியாமல் படம் பார்த்தால்..என்ன இது இவ்வளவு மெதுவாக கதை நகர்கிறது என யோசிக்க வைத்து இருக்கும்.

சாதாரண, ட்விஸ்ட்கள் அற்ற, எதிர்பார்க்கிற காட்சியமைப்புகள் கொண்ட கதைதான். ‘எனக்கு நடிக்கத் தெரியாதுங்க’ என்று சிம்பு தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ள, ‘நீ ஏன் பப்ளிசிட்டிக்கு என்ன வேணா பண்ற?’ என்று நயன் சிம்புவைக் கேட்க, ‘அவன் கான்ட்ரவர்ஸி மன்னன்.

சொன்ன நேரத்துக்கு வராம அவன் நெனைச்ச நேரத்துக்குதான் வருவான்’ என்று சூரி சிம்புவின் மைனஸ்களைச் சொல்ல என்று   ஒரு என்று படம் முழுக்க நிஜத்தைத் தூவியிருப்பதில் ரசிக்க வைக்கிறான் இந்த, இது நம்ம வாலு.. ச்சே.. இது நம்ம ஆளு!

டெய்ல் பீஸ்: இந்தக் கால இளைஞர்கள், ஏற்கனவே சென்சிடிவ். இந்த லட்சணத்தில், காதல் சேர்வதற்காக, நயன்தாரா எடுக்கும் அந்த முடிவு.. இந்த அழகான படத்திற்கு அபத்தமான திருஷ்டிப் பொட்டு!

Share.
Leave A Reply

Exit mobile version