விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன், இலங்கையை விட்டு வெளியேறுவதை வரும் ஜுலை மாதம் 26-ஆம் தேதி வரை தடை செய்யும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவொன்றை முன் கொண்டு ஆராய்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது கருத்துக்களை தெரிவித்த சட்ட மா அதிபர், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள குமரன் பத்மனாதனுக்கு எதிராக போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, இந்த மனுவை முன்கொண்டு விசாரணை செய்யும் அவசியம் ஏற்படாதென்று கூறிய சட்ட மா அதிபர், அதனை தள்ளுப்படி செய்யமாறு வேண்டுகோள் விடுத்தார்.

போலீசார் மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்து தங்களுக்கு திருப்தியில்லாத காரணத்தால், மனுவை முன்கொண்டு விசாரணை செய்யுமாறு தங்களது வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக மனுவை சமர்ப்பித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு சர்வதேச போலீசார் பிடியாணை பிறப்பித்துள்ளதாக கூறிய விஜித்த ஹேரத், குமரன் பத்மநாதன் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராகவும் சிறிது காலம் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம், குமரன் பத்மநாதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற காரணத்தினால் போலீஸ் விசாரணைகள் திருப்தி தரவில்லை அவர் கூறினார்.

எனவே, குமரன் பத்மனாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை, தாங்கள் சமர்ப்பித்துள்ள மனுவை முன்கொண்டு விசாரணை செய்வது அவசியமென்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அந்த வேண்டுகோளை ஆராய்ந்த நீதிமன்றம், வரும் ஜுலை மாதம் 26-ஆம் தேதியன்று மனு முன்கொண்டு ஆராயப்படுமென்று தீர்ப்பளித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version