விஜயன்  வரவுக்கு முன்பு  இலங்கை தீவின்   மூத்தகுடிகள், யக்கர் நாகர் என வரலாறு  குறிப்பிடும்  அதேவேளை, யாழ்பாடி வெகுமதியாய் பெற்ற வட பகுதியில் வாழ்ந்தவர், தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால் , அங்கு அய்யாத்துரை முதன்மை பெறுகிறார்.

பின் தெற்கில் விஜயன் கரை ஒதுங்கி குவேனியை கரம் பற்றி உருவான , சிங்கள இனத்தில் அப்புகாமி உதயமானார்.

கடல் வணிகம் செய்து வந்த அரேபியர், காலி துறைமுகத்தில் கரை ஒதுங்கியதும், அவர்கள் வழிவந்த அபூபக்கர் தன் காலடி பதித்தார்.

நாடு பிடிக்க  அலைந்த போத்துகீசர்,  டச்சுக்காரர்,  ஆங்கிலேயர் வரவின் பின் மதம் மாறியவர் சூசை, அல்பேட் , அந்தோனி ஆகினர்.

அய்யாத்துரை  இந்து, அப்புகாமி பௌத்தம், அபூபக்கர் இஸ்லாம், அந்தோனி கிறிஸ்தவம் என தமது மதங்களை வகுத்துக்கொண்டனர்.

புத்தரின் வெள்ளரசு மர ஞானம் பௌத்த மதம்.

அரேபியர் மதத்தை தழுவியவர் இஸ்லாமியர்கள், ஜெரூசலத்தை ஆராதிப்பவர்கள் கிறிஸ்தவர்கள் என மத அடிப்படையில் அய்யாத்துரை,  அப்புகாமி,  அபூபக்கர், அந்தோனி என இலங்கை தீவில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் பறங்கியர் என இன/மத பரிணாம வளர்ச்சி ஏற்ப்பட்டது.

மூலம் ஒன்று பிரிவுகள் பல.  மூன்று  மதங்கள் நான்கு இனங்கள். மேலும் மேமன், போறா எனவும் பல உப, இன மத பிரிவுகள் இன்றளவும் இந்த அழகிய தீவில் நிலைத்து நீடிக்கின்றது.

அய்யாத்துரை , அப்புகாமி கிறிஸ்தவராக மதம் மாறினாலும் அபூபக்கர் இஸ்லாம் விட்டு மாறவில்லை.

அய்யாத்துரை மதம் மாறினால்  ஹண்டி, ஆணல்ட், புரூடி என புது அடைமொழி பெறுவார்.

அப்புகாமி மதம் மாறினால் டொன், சொலமன், சொய்சா ஆவர்.  ஆனால்  அபூபக்கர் “அல்லாகு அக்கபர்” என என்றுமே மதம் மாறமாட்டார்.

இந்துக்களையும் பௌத்தர்களையும் மதம் மாற்றிய கிறிஸ்தவம் இஸ்லாத்திடம் நெருங்கமுடியாது போனதால், உலகின் பெரும்பான்மை  மக்களின்  மதம் என்ற   நிலையை இஸ்லாம் பெறுவதை   தடுக்க, தமக்குள் இருந்த பல பிரிவுகளையும் கிறிஸ்தவம் ஒரு முகப்படுத்தியே முன்னிலை பெறுவதே வரலாறு.

இலங்கையின் கடைசி மன்னர்களாக யாழில் சங்கிலியன், வன்னியில் பண்டாரவன்னியன், கண்டியில் ராஜராஜசிங்கன், கோட்டேயில் தர்மபால என தனித்துவமாக ஆட்சி செய்த போதும், அன்னியர் தம் ஆட்சி வசதிக்காக நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை அறிமுகமாக்கிய பின்பு,  சேனநாயக்கா  எதிர் பொன்னம்பலம், பண்டாரநாயக்கா – செல்வநாயகம், ஜெயவர்த்தனா – அமிர்தலிங்கம், மகிந்த – சம்மந்தர் என தொடர்ந்து  இன்று மைத்திரி ரணில்   சந்திரிகா  எதிர் சம்மந்தர் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் என விரிவடைந்து,  ய்யாத்துரை,  அப்புகாமி,  அபூபக்கர்,  அந்தோனி பதவி மோதல் அரசியல் குடுமிப்பிடி சண்டை தொடர்கிறது.

இதுவே தீர்வு என அய்யாத்துரை அடம்பிடிக்க, அது ஒற்றை ஆட்சி முறைமைக்குள் மட்டுமே என அப்புகாமி முறுக, கிழக்கு மாகாண இணைப்புக்கு  தயாரில்லை என அபூபக்கர் பின் வாங்க, சர்வதேசம் தலையிட வேண்டும் என அந்தோனி பிரார்த்திப்பார்.

இது அவரவர் தனிப்பட்ட விருப்பு தேர்வல்ல. திரை மறைவில்  அவர்தம் தலைமைகள் எடுத்த முடிவு.

மாத்தறையில் மூலைக்கடை வைத்திருக்கும் அய்யாத்துரைகளும், நெடுந்தீவில் மீன் வாடி அமைக்கும் அப்புகாமிகளும், காத்தான்குடியில் பேரீச்சை மரத்தை நட்டு வளர்க்கும் அபூபக்கர்களும், மடு தேவாலயத்தில்  தோத்திரம் சொல்லும்  அந்தோனிகளும்  அவரவர் வேலைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஆனால் அரசியல் என்று வரும்போது, தமது தலைமைகளின் தாளத்துக்கு ஏற்பவே ஆடுகின்றனர்.

எந்த தலைமையில்  எதுவரை தீர்வு அமையலாம் என்ற வரையறை இல்லாது, இழுபறி  நிலையை தொடரவிட்டு, எங்களின் மக்களின் ஆணையை நாம் மீற இயலாது என அறிக்கைகள் விடுவதே அரசியல் ஆகிவிட்டது.

தேர்தல் காலத்தில் வெற்றி வாய்ப்புக்காக  இஸ்டத்துக்கு அறிக்கை விடுவதும் அதை ஆதரிக்கும்படி வாக்காளரை கேட்பதும், வென்ற பின் மக்கள்  ஆணை எமக்கு உண்டு என நெஞ்சை நிமிர்த்துவதும், எதிர் தரப்பும் தன் மக்கள் தந்த ஆணையை உயர்த்திப் பிடிப்பதும் தொடர் நிகழ்வாகி நீண்டு செல்கிறது.

jaf
இவர்களின் தேர்தல் கோசங்கள் வாக்குகளை தரும். தீர்வைத் தருமா?…

இவர்களின் வெற்றுக் கோசங்கள் உணர்ச்சியை தூண்டியதால் கிடைத்த அதன் பெறுபேறுகள், மக்கள் ஆணையாகுமா?.. நாட்டின் சகல பகுதிகளிலும் பரந்து வாழும் இனங்களிடையே, முறுகல் நிலையை தொடரச் செய்யாதா?

…அரசியல்  தலைமைகளின்  தேவை  பாராளுமன்ற  கதிரை என்றால்,   மக்களின் கதி அதோ கதி தானா?…வாக்களித்த மக்களின் விருப்பை நாம் மீற மாட்டோம் என்பவர், அந்த வாக்காளரை உணர்ச்சி என்ற மயக்கத்தில் ஆழ்த்தியபின்தானே, வாக்குகளை வாரிக்குவித்தனர். சுய சிந்தனை அற்றவர் செயல் ஏற்புடையது என பறை அடிக்கலாமா?…

அடுத்த தேர்தல் வரை எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை என புலம்பும் வாக்களர், புதுப்பறைகள் கேட்டதும் கடந்ததை மறந்து, மீண்டும் சுயநினைவு இழந்து அளிக்கும் வாக்குகள் ஆணையாகுமா?…

வாக்களிக்கும் நாள் தவிர நாட்டு நடப்பு பற்றி பேசி விவாதிக்கும் நிலை, பெரும்பான்மை பொது மக்களுக்கு உண்டா?.. அய்யாத்துரைகளும், அப்புகாமிகளும், அபூபக்கரும், அந்தோனியும் ஒன்றாய் கூடி பேச தலைமைகள் விரும்புமா?… அனுமதிக்குமா?...ஆங்கிலேய எஜமானிடம் கற்ற பிரித்தாளும் தந்திரம் தான் நாட்டில் உள்ள அரசியல் தலைமைகளின் சூத்திரம்.

தலைமைகள் மாட்டுமே கூடிப்பேசும். சூழ்நிலைக்கு ஏற்ப குலவும், கும்மியடிக்கும். ஆனால் மக்களை எட்டவே வைத்திருக்கும்.

முடிந்தவரை பகைமையை தூண்டிவிட்டு, அதில் மூண்டு எளும் தீயில் தமது எதிர்கால தேர்தல் வெற்றிக்கு அத்திவாரம் போடுவார்கள்.

இறுதிவரை தீர்வு என்ற கட்டடம் கட்டி எழும்ப இவர்கள் விடவே மாட்டார்கள். புண் இருக்கும் வரை தான் பிச்சை கேட்பவனுக்கு பிளைப்பு. அதே போல பிரச்சனை தொடரும் வரைதான் இவர்களுக்கு பதவி சுகம். மக்களை சுமை தாங்கி ஆக்கிவிட்டு தாம் சுகபோகம் காண்பர்.

ஒவ்வொரு தேர்தல் காலங்களின் போதும் இவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள், இவர்களாலேயே மீறப்படும் செயல் மீண்டும் மீண்டும் நடந்தேறினாலும், அதனை வாக்காளர் மறக்கச்செய்யும் புதுப்புது பிரச்சனைகளை இவர்கள் கையிலெடுப்பர்.

இனங்களிற்கு இடையே இவர்களால் உருவாக்கப்பட்ட முரண்நிலை என்றுமே தீரக்கூடாது என்ற நோக்கில் மட்டுமே, இவர்களால் தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்படும்.

தலைமைகள் தம்மை முற்போக்கானவர் போல காட்ட முன்வைக்கும் தீர்வுகளை எதிர்க்க என்றே, அவர்களின் வழிநடத்தலில் ஒரு அணி செயல்ப்படும்.

தொட்டிலை ஆட்டும் போதே பிள்ளையை கிள்ளி விடுவார்கள்.

மூடிய அறைக்குள் தீர்வு எட்டப்பட்டு கதவை திறந்ததும், வெளியே தீர்வை குழப்பும் ஆணி எதிர்ப்பு கோசங்களுடன் காத்திருக்கும். எல்லாமே இவர்களின் முன்னேற்பாடு.

பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை இந்திய ஒப்பந்தம் எல்லாமே, கலந்து கொண்டவர் எதிர் செயற்ப்பாட்டால் தான் பயனற்று போனது.

ஆனால் தாம் நிரந்தர தீர்வுக்கு இறுதிவரை உறுதியுடன் செயல்ப்பட்டது போலவும், மாற்று அணியினர் தான் அதனை நிறைவேற்ற முடியாது செயல்ப்பட்டதாகவும் மாறி மாறி குற்றம் சாட்டுவார்கள்.

தலைமைகளின் இந்த அரசியல் சித்து விளையாட்டு பற்றிய புரிதல் இன்றியே வாக்களிப்பு தினத்தில் அய்யாதுரை, அப்புகாமி, அபூபக்கர், அந்தோனி தம்முள் பிளவுபட்டு, உணர்ச்சி பிளம்புகாய் தனித்தனி தீவுகளாக செயல்ப்படுவர்.

இதில் யதார்த்தம் என்னவென்றால் தேர்தல் முடிந்தபின் மறுவாரமே அய்யாத்துரை நாலாம் குறுக்குதெரு கடையிலும், அப்புகாமி நெடுந்தீவு மீன்வாடியிலும் தங்கள் வழமையான தொழிலை தொடர்வர்.

அபூபக்கர் முதல் அனைத்து வாக்காளரும் அடுத்த தேர்தல் வரை நிகழ்வுகள் பற்றி அலட்டிக் கொள்ளமாட்டார்கள். காரணம் அவர்களின் தலைமைகள் தான் தீர்வு பற்றி கூடிக் கூடி பேசுகிறார்களே!.

– ராம் –

Share.
Leave A Reply

Exit mobile version