கடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக பங்குகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் இரா.சம்பந்தனும் பங்கு கொண்டிருந்தார். அதே போன்று டக்ளஸ் தேவானந்தா உட்பட ஏனைய சில அரசியல் தலைவர்களும் பங்குகொண்டிருந்தனர்.

அடிப்படையில் இது பாதுகாப்பு தரப்பினரை முதன்மைப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வு எனினும் மகிந்த ராஜபக்சவை முதன்மைப்படுத்தி அழைத்திருப்பதானது அரசியல் ரீதியில் முக்கியமான ஒன்று.

இந்த நிகழ்வில் சம்பந்தனும் பங்கு கொண்டிருப்பதை வழமையான ஒன்று என்றும் எடுத்துக் கொள்ளலாம்

அதே வேளை திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் பதிவேற்றியிருக்கிறார். மகிந்த, சம்பந்தன், கோத்தபாய ஆகியோர் நெருக்கமாக இருந்து உரையாடும் படங்களையே மகிந்த பதிவேற்றியிருக்கிறார்.

மகிந்த – சம்பந்தன் உரையாடும் காட்சிகளை பார்க்கும் ஒருவரிடம் ஒரு கேள்வி எழலாம் – இது தற்செயலான ஒன்றா அல்லது திட்டமிடப்பட்ட ஏற்பாடொன்றின் விளைவா? அல்லது விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் சம்பந்தன்; நிகழ்வில் சிக்கிவிட்டாரா?

அன்மைக்காலமாக இலங்கைக்குள் சீனாவின் செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

அனைத்து விடயங்களிலும் சீனா தலையீடு செய்து வருகிறது. பொதுவாக ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தாம் தலையிடாக் கொள்கையை பின்பற்றிவருவதாக சீனா கூறிக் கொண்டாலும் கூட, இலங்கை விடயத்தில் அதனை சீனா உண்மையிலேயே பின்பற்றுகின்றதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், எதிர்வரும் 2020 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது, 2015 இல் இடம்பெற்ற தேர்தலைவிடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கப் போகிறது.

இந்த நிலையில் 2020 ஜ னாதிபதித் தேர்தலில் நிச்சயம் சீனாவின் தலையீட்டை எதிர்பார்க்கலாம்.

சில தினங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தேர்தலிலும் சீனாவின் தலையீடு இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைப் போன்றே, பாக்கிஸ்தானிலும் சீனா அதனுடைய செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.

அமெரிக்கா 2011இல், பாக்கிஸ்தானின் இராணுவ அரனாக விளங்கும் அபோட்டபாட் நகரில் வைத்து, ஒஸாமா பின்லேடனை கொலைசெய்தது.

இதன் பின்னர்தான் பாக்கிஸ்தான் சீனாவின் வலைக்குள் விழுந்ததாக கணிக்கப்படுகிறது.

இதனையொத்த ஒரு நிலைமையை இலங்கையிலும் பார்க்கலாம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை இராணுவத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் வீழ்சியடைந்த பின்புலத்தில்தான், சீனா இலங்கை;குள் ராஜபக்சவின் வரவேற்புடன் காலூன்றியது.

இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் ஒரு மேலாதிக்கமாக எழுச்சியுற்றுவரும் சீனா, அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்வது ஆச்சரியமான ஒன்றல்ல.

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் 2020 தேர்தல் தொடர்பில் மாறுபட்ட முடிவுகளை அனுமானிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், எண்ணிக்கையில் சிறுபாண்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் விலைமதிப்பற்ற வாக்குகளாக கணிக்கப்படுகின்றன.

பெங்ளுரை தளமாகக் கொண்டியங்கிவரும் ‘தக்கஸீல’ என்னும் சிந்தனையாளர் குழாம், (The Takshashila Institution) நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒரு மூலோபாய மதிப்பீட்டைச் செய்திருக்கிறது (POLITICAL DEVELOPMENTS IN SRI LANKA A – Strategic Assessment) அதன்படி தற்போதுள்ள மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமானது, 2020 இல் மீளவும் வெற்றிபெற முடியும் ஆனால் அதற்கு சிறுபாண்மையின் வாக்குகள் அவசியம்.

குறிப்பாக, தமிழ் மக்களின் ஆதரவு அவசியம் என்பது மேற்படி நிலையத்தின் மதிப்பீடு. ஆனால் தமிழ் மக்களது ஆதரவை பெற வேண்டுமாயின், ரணில் – மைத்தரி அரசாங்கம், சிறுபாண்மையினருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறித்த சிந்தனையளர் குழாம் மதிப்பிட்டிருக்கிறது.

ஆனால் அவர்களது மதிப்பீட்டில் இல்லாத விடயம், ரணில் – மைத்திரி கூட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதுதான்.

ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் கூட, தமிழ் மக்களின் வாக்குளை வஞ்சகமாக ஆளும் தரப்பிற்கு கொண்டு சேர்பிக்கும் சம்பந்தனின் வல்லமையையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

2020இல் சிறுபாண்மையினரின் முக்கியமாக, தமிழ் மக்களின் வாக்குகள் மீளவும் தீர்மானிக்கவல்ல வாக்குகளாக இருக்கப் போகின்றன.

அவ்வாறானதொரு சூழலில், அதனை பெறுவதற்கான வழி என்ன என்பதில் தற்போது மகிந்த தரப்பு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறானதொரு சூழலில்தான் மேற்படி நிகழ்வில் சம்பந்தனும் – மகிந்தவும் நீண்ட நேரம் பேசியிருக்கின்றனர்.

ஒரு வேளை தமிழர்களின் முழுமையாக ஆதரவை பெற முடியாது விட்டாலும் கூட, தமிழர் தரப்பின் எதிர்ப் பிரச்சாரங்களை ஒரு வரையறைக்குள் வைத்துக் கொண்டால் போதுமானதென்றும் மகிந்த தரப்பு கணிப்பிடலாம்.

இந்த சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது தொடர்பில் சம்பந்தன் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால் மகிந்தவின் பக்கத்திலிருந்து வெளியானதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகை ஒன்று சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, தங்களோடு இணைந்து செயற்பட வருமாறு சம்பந்தனை தான் அழைத்ததாகவும், அதன் மூலம் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு முன்வருமாறு குறிப்பிட்டதாகவும் அந்தப் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

அவ்வாறில்லாது, தமிழ் மக்களை தவறான வழியில் கொண்டு சென்றால், வடக்கு கிழக்கில் புதிய சக்திகள் உருவாகும் சூழல் ஏற்படும், அதன் பின்னர் கவலையடைய வேண்டிவரும் என்றும் மகிந்த, சம்பந்தனிடம் தெரிவித்தாக அந்தச் செய்தி அமைகிறது.

ஆனால் வேறு சில தகவல்களின்படி, இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் உங்களது எந்தவொரு திட்டத்திற்கும் தாம் அதரவு வழங்க மாட்டோம் என்றும் மகிந்த தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை சம்பந்தன் புதிய அரசியல் யாப்பு விவகாரம் தொடர்பில் பேசியபோது அதற்கான பதிலாக மகிந்த அப்படித் தெரிவித்திருக்க அதிக வாய்ப்புண்டு.

2020 இல் மீளவும் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சியில் இருக்கும் மகிந்த, இன்றைய அரசாங்கத்தின் நிழலில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்களையும் ஆதிரிக்கமாட்டார் என்பதை விளங்கிக் கொள்வதில் என்ன சிரமம்?

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் ஆச்சிரியம் தரும் அரசியலுமல்ல. சந்திரிக்கா குமாரதுங்க ஒரு முன்மொழிவை கொண்டு வந்த போது, இதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சிதான் அந்த தீர்வு நகலை எரித்து, எதிர்ப்புத் தெரிவித்தது.

இது சிங்கள அதிகார அரசியலின் வாழையடி வாழை. எனவே இதனை மகிந்த கைக்கொள்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு வேளை மகிந்த அவ்வாறு நடந்து கொள்ளாது விட்டால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

2020 தேர்தல் தொடர்பில் அமெரிக்க, இந்திய ராஜதந்திரிகள் எவ்வாறு ஆர்வம் காண்பித்து வருகின்றார்களோ, அதற்கு எந்த வகையிலும் குறையாத கரிசனையை சீனாவும் கொண்டிருக்கலாம்.

இதனைக் கருத்தில் கொண்டே, மகிந்த – சம்பந்தன் – கூடவே – கோத்தபாயவுடனும் நெருங்கிப் பேசுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்விற்குள் ஒரு உப நிகழ்வை சீனத் தூதரகம் திட்டமிட்டிருக்கலாம்.

இதனை விளங்கிக் கொள்ளாமல் சம்பந்தன் இதற்குள் சிக்குப்பட்டிருக்கலாம். ஆனால் இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டின் போது, பல நாடுகளின் ஆதரவுடன்தான் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜரோப்பிய ஒன்றியமே அவை.

ஆனால் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியில் சீனாவின் இராணுவ உதவிக்கு பிரதான பங்கிருந்தது. அதே போன்று பாக்கிஸ்தானின் இராணுவ தளபாட உதவிகளும் பிரதானமானது.

பாக்கிஸ்தானின் இராணுவ உதவிகளுக்கு பின்னாலும் சீனா இருந்தது. ஆனால் சம்பந்தனோ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு உதவியவர்களின் வரிசையில் முதன்மையான நாடான சீனா தொடர்பில் குறிப்பிடவில்லை.

இது சம்பந்தனின் நினைவு மறதியின் விளைவு என எவராவது கூறக் கூடும். ஆனால் கேள்வி – அப்படியானால் அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகள் எப்படி அவரது நினைவில் இருந்தன?

– யதீந்திரா
Share.
Leave A Reply

Exit mobile version