07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன்.
அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள்.
மனதில் கவலை ஏறியது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன். அங்கே ஒரு கூட்டம் அமர்க்களமாக நின்றது. இரண்டாவது தடவையும் வெடியைக் கொழுத்தினார்கள்.
இது மேலும் கூட்டம் சேர்ந்ததால் நடந்தது. இங்கே பதிவிட விரும்பாத சில வார்த்தைகளைச் சொல்லி கருணாநிதியைத் திட்டினார்கள். திட்டித்திட்டிப் பாடினார்கள்.
கிட்ட நெருங்கி, யாராக இருக்கும் என்று பார்த்தேன். பலரையும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இளைஞர்கள். ஒரு இருபது பேர் வரையில் இருந்தார்கள்.
என்ன நடக்கிறது என்று அறிவதற்காக கொஞ்ச நேரம் அந்த இடத்திலேயே நின்றேன். அப்பொழுது இரண்டு தெரிந்த முகங்கள் அங்கே நின்றன.
அதில் ஒன்று, ஒரு காலம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று இவற்றோடு அல்லும் பகலும் அரசியலாகவே திரிந்த கந்தையரின் மகன் நகுலன்.
நகுலனைக் கண்டதும் எனக்குச் சிரிப்பும் கவலையும் ஒன்றாகவே வந்தன.
அந்த நாட்களில் கந்தையர் தமிழரசுக்கட்சியின் துண்களில் ஒருவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் என்றாலும் அவருடைய வீட்டில் அண்ணாத்துரை, கருணாநிதி இருவரின் படங்களும் முன் விறாந்தையில் இருந்தன.
தமிழரசுக் கட்சியைப் பற்றிக் கதைப்பதை விட தி.மு.கவைப் பற்றியும் அதனுடைய தமிழைப்பற்றியுமே கதைப்பார் கந்தையர். அண்ணாத்துரை மீதும் கருணாநிதி மேலும் பெரிய மரியாதையும் பற்றுமிருந்தன கந்தையருக்கு.
இருவரைப்பற்றியும் இருவருடைய பேச்சுகளைப் பற்றியும் எனக்கே பல தடவை சிலிக்கக் கதைகள் சொல்லியிருக்கிறார்.
அப்படியான கந்தையரின் வழி வந்த அவருடைய மகன் இப்பொழுது கருணாநிதியின் மரணத்தை வெடி கொழுத்திக் கொண்டாடுகிறார்.
நகுலன் மட்டுமல்ல ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் கருணாநிதியின் மரணத்தைக் கொண்டாடுகின்றனர். கிளிநொச்சிக்கு அப்பால் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப் பார்க்கிறோம்.
இந்த நிலைக்குக் காரணமென்ன? எங்கே நடந்தது தவறு? யார் தவறிழைத்தார்கள்? அதாவது யார் குற்றவாளிகள்?
கருணாநிதியின் அரசியற் பங்களிப்புப் பெரியது. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார்.
இதில் சாதனைகளும் உண்டு. பலவீனங்களும் உண்டு. அவை பற்றிய விமர்சனங்களும் மதிப்பீடுகளும் கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே – பதவி, அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் முன்வைக்கப்பட்டுள்ளன.
மிச்சம் மீதியும் இப்பொழுது அவருடைய மரணத்தைத் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் அவை தொடரும்.
வேறு எவரையும் விட மிக நீண்ட காலம் தமிழக – இந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தியவர் என்ற வகையில் இந்த விமர்சனங்களின் நீட்சி நிச்சயமாக இருந்தே தீரும். வரலாறு எல்லாவற்றையும் தன்னுடைய தராசில் வைத்து மதிப்பீட்டு உரிய அடையாளத்தைத் தரும்.
இதற்கப்பால் கருணாநிதியின் இன்னொரு அரசியல் பங்களிப்பும் உண்டு. அது ஈழவிடுதலை அரசியலில். இதிலும் கருணாநிதியின் வரலாறு சிறப்படையக்கூடிய பங்களிப்புகளும் உண்டு. அதேவேளை சிறுமைக்குரிய விசயங்களும் உள்ளன. இதையும் சேர்த்தே வரலாறு கருணாநிதியை மதிப்பிடும்.
ஆகவே அதற்கிடையில் யாரும் அவசரப்பட்டு, தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை முதன்மைப்படுத்தி, தி.மு.கவையோ கருணாநிதியையோ முழுதாகக் குற்றம் சாட்ட முடியாது. அதுவும் அவருடைய மரணச் சேதியறிந்து வெடிகொழுத்திக் கொண்டாடும் அளவுக்கு.
அப்படிச் செய்தால் அது அரசியல் மூடத்தனமன்றி வேறில்லை. ஒன்று, கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களை – அதில் தி.மு.கவும் கருணாநிதியும் செய்த பங்களிப்புகளை அறிந்திராத மடத்தனம். அறியாமை.
இரண்டாவது, எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் அரசியலுக்கு தி.மு.கவும் புதிய தலைமையும் செய்ய வேண்டிய பங்களிப்புகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது.
இந்தத் தவறு, இத்தகைய மூடத்தனம் ஈழத்தமிழரின் அரசியலில் பல வகையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே ஈழத்தமிழரின் தொடர்ச்சியான அரசியல் பின்னடைவுகளுக்கான காரணங்களுமாகும்.
கருணாநிதியை நோக்கி குற்றம் சாட்ட நீளும் விரலுக்கு நிகரானது ஈழத்தமிழர்களின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தவறுகளை நோக்கி நீள வேண்டிய விரல்கள்.
ஆனால், 1958 இல் இலங்கையில் தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்கா அறிவித்ததைக் கண்டித்து தி.மு.கவின் சிதம்பரம் மாநாட்டில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியவர் கருணாநிதி. அப்பொழுது கருணாநிதிக்கு வயது 34.
பிறகு 1961 இல் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் விடுதலையை வலியுறுத்திப் பேரணி ஒன்றை நடத்தியது. இவ்வளக்கும் அப்பொழுது கருணாநிதியோ தி.மு.கவோ ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட பெருந்தரப்பல்ல.
தொடர்ந்து 1983 இல் இலங்கையில் நடத்தப்பட்ட இன வன்முறையைக் கண்டித்து கருணாநிதியும் அன்பழகனும் தங்களுடைய பதவிகளை ராஜினமாச் செய்திருந்தனர்.
தொடர்ந்து ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடன் இயக்கங்களுக்கான ஆதரவை வழங்கினார் கருணாநிதி. இதனை அன்று பல வழிகளிலும் தொடர்பாக இருந்தவர்களின் பதிவுகள் கருணாநிதியின் மரணத்தையொட்டி சாட்சியமாகப் பகிரங்கத்தளத்தில் பகிரங்கப்பட்டுள்ளன.
இதேவேளை துரதிருஷ்டவசமாக ஆயுதப்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்த தமிழகச் சூழல் அப்பொழுதிருந்த தி.மு.க – அ.தி.மு.க (கருணாநிதி – எம்.ஜி. ஆர் ) என்ற போட்டி அரசியலின் விளைவால் கெடுத்துக் கொண்டது.
எம்.ஜி. ஆர் விடுதலைப் புலிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டார். கருணாநிதி ரெலோவை அரவணைத்தார். ரெலோவுக்கு ஆதரவாக ஈழப்போராட்ட ஆதவு என்ற பேரில் டெஸோ என்ற மாநாட்டை மதுரையில் நடத்தினார் கருணாநிதி.
இந்த மாநாட்டில் வாஜ்பேய், தேவகௌடா, என். டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அன்று இலங்கை இனப்பிரச்சினையும் ஈழப்போராட்டத்தின் அவசியமும் இந்திய அளவில் உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்புண்டானது.
இதற்கிடையில் 1981 இல் பாண்டிபஜாரில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் சுடுபட்ட சம்பவம் தொடக்கம், சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் சூட்டுச் சம்பவம் தொடர்ந்து பத்மநாபா அணியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் படுகொலை என ஏராளம் நெருக்கடிகள் ஈழத்தமிழ்த்தரப்பிலிருந்து உண்டாக்கப்பட்டது.
தமிழகத்தை முழுதான அளவில் இந்தச் சம்பவங்கள் நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால் ஒரு கட்டத்தில் தி.மு.கவும் கருணாநிதியும் பதவியை இழந்தன. பின்னாளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.
இதற்குப் பிறகு கருணாநிதியின் ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவு – அணுகுமுறை போன்றவற்றில் தளம்பல்களும் தவறுகளும் நிகழத்தொடங்கின.
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழக மற்றும் இந்தியச் சூழலில் அவர் செய்யத் தொடங்கியிருந்த அரசியல் சமரசங்களும் புதிய பொருத்தமற்ற கூட்டுகளுமாகும்.
இதனால் இந்தச் சக்திகளை மீறி, அவரால் தனித்துச் சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியவில்லை. மற்றவர்களின் முகத்தைப் பார்த்து எதையும் தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
இரண்டாவது, ஈழவிடுதலை ஆதரவினால் அவருக்குண்டான நெருக்கடிகளும் விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள், அரசியல் முரண்பாடுகள், இயக்கங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் போன்றவற்றினால் எழுந்த வெறுப்பும் நம்பிக்கையீனமும் அவரை ஈழ அரசியலில் இருந்து இரண்டாம் பட்சமாக்கியது.
இதனால் பின்னாளில் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைப்பாடும் ஈழ விடுதலைக்கான பங்களிப்பும் ஏதோ என்ற அளவில் சம்பிரதாயமானதாக மாறியது. விசுவாசத்தன்மை குறைந்தது.
ஆனாலும் ஒருபோதுமே அவர் ஈழப்போராட்டத்துக்கு எதிர்த்திசையில் நின்றதாக இல்லை என்பது வரலாற்று ஆதாரம். அந்தளவுக்கு தெளிவான அரசியல் புரிதலும் உச்ச சகிப்புத்தன்மையும் கொண்டிருந்தவர்.
இருந்தாலும் மத்தியில் வைத்திருக்கும் கூட்டுக்கு ஏற்பவும் மாநிலத்தில் அவருடைய நிலைக்கேற்பவும் ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்த விளைந்தது உண்மை. பின்னாளில் இதைத் தன்னுடைய ஒட்டுமொத்த அரசியலுக்குமாகப் பயன்படுத்தினார்.
இதனால் 1995 இல் நடத்திய ஈழ ஆதரவுப் பேரணி, 2009 இல் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றையெல்லாம் பலரும் கேள்வியோடும் கேலியோடும் நோக்கத் தொடங்கினர்.
இன்று கருணாநிதியைப் பற்றி ஈழத்தமிழ் இளைய தலைமுறையினரிடத்தில் எழுந்துள்ள வெறுப்புணர்வும் தவறான புரிதலும் கருணாநிதி உண்டாக்கிய பின்கால அரசியலின் பாற்பட்டது.
ஆனால், இதில் கருணாநிதி ஒரு போதுமே முழுக்குற்றவாளி கிடையாது. அவரை கேள்வி கேட்கும் அளவுக்கும் எதிரி – துரோகி என்று கூறும் அளவுக்கும் அவர் எதிரியும் அல்ல. துரோகியும் அல்ல. ஆனால், சிலவற்றை அவர் செய்திருக்க முடியும். அதுவொன்றும் தமிழீழத்தைப் பெறுவதாக இல்லை.
அதற்கு எளிய உதாரணம் வடக்குக் கிழக்கு மாகாணசபையை அவர் 1990 இல் கலைக்கச் சொன்னது. அந்தக் கட்டளை புலிகளினால் முன்மொழியப்பட்டது. அதை கருணாநிதி ஈ.பி.ஆர்.எல்.எவ்விடம் சொல்லி அதை நிறைவேற்ற முயற்சித்தார்.
அப்பொழுது வடக்குக் கிழக்கு மாகாணசபையின் பொறுப்பிலிருந்தது ஈ.பி.ஆர்.எல்.எவ். இது ஈ.பி.ஆர்.எல. எவ்வுக்கும் இடையில் சிறுமுரணையே உண்டாக்கியது. ஆனாலும் கருணாநிதியின் இயல்புப் படி அவர் தான் நினைத்ததைச் செய்து முடித்தார்.
ஆனால் ஒட்டு மொத்தத்தில் ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் கொண்டிருக்கும் அத்தனை குழறுபடிகளும் கருணாநிதியையும் ஒரு வகையில் பலவீனப்படுத்தின. இதனால் அவர் ஒரு எல்லைக்குட்படுத்தியே தன்னுடைய பிற்காலத்தைய அரசியலை மேற்கொண்டார். அல்லது அந்த நிலைக்கு ஈழத்தமிழர்களால் – இயக்கங்களால் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் எப்படி அவருடைய மரணத்தை நாம் கொண்டாட முடியும்? அதற்காக நாம் வெட்கப்பட வேண்டுமே தவிர, ஒரு போதுமே மகிழ முடியாது.
தி.மு.க என்பது மாபெரும் மக்கள் அமைப்பு. அது ஒரு காலத்தில் செய்த காத்திரமான பங்களிப்பை இத்தகைய அபத்துவமான கொண்டாட்டங்கள் கேலிப்படுத்தும் போது அவ்வளவு மக்கள் திரளையும் நாம் அவமதிக்கிறோம். அவர்களுடைய பங்களிப்பை நிராகரிக்கிறோம். மறந்து விடுகிறோம்.
இது எதிர்கால ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு ஒரு போதுமே நல்லதல்ல.
இந்தத் தவறுக்கு அடிப்படையாக சில காரணங்களுண்டு. மாதிரிக்கு அவற்றில் ஒன்றிரண்டைப் பார்த்தால் இது இலகுவில் புரியும்.
திராவிட இயக்கப்பாரம்பரியத்திலிருந்து வந்த கருணாநிதி, பெரியார், அண்ணாத்துரை ஆகியோரின் அரசியல் சித்தாந்தங்களையும் செயற்பாட்டுத்திட்டங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்தவர்.
தேர்தல் அரசியல் நிர்ப்பந்திக்கும் சமரசங்களை முடிந்தவரை ஒதுக்கி விட்டு திராவிடச் சிந்தனையை செயல்வடிவமாக்க முயன்றவர். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட – வலுவூட்டப்பட்ட திட்டங்களின் பட்டியலைப் பார்த்தால் இது சுலமாகப் புரியும்.
ஈழத்தமிழர்களின் பெரும்போக்கு அரசியல் ஈழ விடுதலை அரசியலின் குறைபாடுகளை அல்லது அதன் மாற்றுச் சிந்தனையை புரிந்து கொண்டவர்கள் கருணாநிதியின் மீது மதிப்பையே கொண்டுள்ளனர். அவர்களிடத்திலும் விமர்சனங்கள் இருந்தாலும் கருணாநிதியை மறுப்பதோ நிராகரிப்பதோ அவர்களிடம் இல்லை.
ஈழத்தமிழர்களின் பொதுப்போக்கு அரசியல் எப்போதும் சமூக அக்கறை கொண்டதாக இல்லை. சமூக மாற்றத்தைக் குறித்ததாக இருந்ததில்லை.
இனவாதத்தைக் கட்டமைத்ததாக – அதில் உயிர்வாழ்வதாகவே இருந்திருக்கிறது. இதனால் அது எப்போதும் உட்சுருங்கியதாகவே இருந்துள்ளது. இன்றைய நிலையும் அதுவே.
ஆனால் கருணாநிதியின் திராவிட இயக்க அரசியலில் முற்போக்கான கூறுகளே அடிப்படையாக இருந்தன. அது சமூக நீதி , மாநிலத்தின் உரிமைகள், பால் சமத்துவம், மத மூட நம்பிக்கைகள் தொடர்பான கரிசனை, மொழிவளர்ச்சி போன்றவற்றை வலுவாகக் கொண்டது.
திராவிட இயக்கப்பாரம்பரியத்தை – அந்தச் சிந்தனையை வலுப்படுத்துவதற்குரிய அரசியல் அறிவுப் பண்பாட்டை உருவாக்கியதில் பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோருக்குப் பெரும் பங்குண்டு. அவர்கள் அதைச் செய்தே தமது அரசியலை முன்னெடுத்தனர்.
இன்றைய தமிழகத்தின் அடையாளம் என்பது அவர்கள் உருவாக்கியதே. இதற்காக அவர்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் சமூகவியலையும் படித்து தமக்கான அரசியல் சிந்தனையையும் செயற்பாட்டு வடிவத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.
பெரியாரும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் இதற்காக எழுதிய பக்கங்கள் ஏராளம். படித்தது ஏராளம். இந்தளவுக்கு ஈழ அரசியலில் எவருமே செய்யவில்லை.
உருப்படியாக இரண்டு புத்தகங்களைக் கூட இலங்கைத்தமிழ் அரசியல் வாதிகள் எழுதியிருக்க மாட்டார்கள். மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பால் அவர்கள் நாடகத்துறையிலும் சினிமாவிலும் ஊடகத்திலும் இலக்கியத்திலும் மொழி மற்றும் பண்பாட்டுத்துறையிலும் பெரும் ஆளுமைகளாக இருந்தனர்.
தவிர, சமூக எற்றத்தாழ்வுக்கு எதிரான நிலைப்பாடு, பகுத்தறிவு போன்றவற்றைத் தன்னுடைய அரசியலில் உள்ளடக்கமாகக் கொண்ட தி.மு.க, இடதுசாரிகளை ஒரு போதுமே எதிரிகளாகப் பார்த்ததில்லை.
ஆனால், ஈழத்தில் இதற்கு எதிர்மாறாகவே நிலைமை இன்னும் இருக்கிறது. மூட நம்பிக்கைகள் பற்றி வாயே திறக்காத நிலை. சமூக மாற்றம் பற்றியோ அதற்கான கலைவடிவங்களைப் பற்றியோ தமிழ்த்தேசியத்தை வலயுறுத்துவோர் பொருட்படுத்துவதே இல்லை.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுகு சிறிதரன் குறிப்பிடுவதைப்போல தி.முகவினர், பொது உடைமை வாதிகளுடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்பட்டார்கள். இவர்கள் (ஈழ அரசியல் தலைமைகள்) தீண்டாமை பாராட்டினார்கள்.
அவர்கள் தமிழக மக்களுக்கென சாதித்திருக்கிறார்கள். இங்கு தொடர் வாய்ச்சவாடல். இவர்கள் நாவலர், இராமனாதன் பாரம்பரியம் என்ற பாரம்பரியத்தினராகவும் இன்னும் சிலர் பிரேமாநந்தாவின் சீடப்பிள்ளைகள் என்பதிலும் பெருமை கொள்பவர்கள். அவர்கள் பெரியாரின் வாரிசுகள் என்பதில் பெருமிதம் கொள்பவர்கள்.
எனவே இத்தகைய அரசியல் வேறுபாடுகளே கருணாநிதியின் மரணத்தின்போதும் பிரதிபலித்துள்ளன. தவறாகக் கணக்கைச் செய்தால் தவறாகவே விடையும் கிடைக்கும். ஆனால், இதைக் கடந்தே வரலாறு நிற்கும்.
கருணாநிதி விட்ட தவறை விட பலமான தவறுகளை ஈழத்தமிழ்ச்சமூகம் விட்டுக்கொண்டிருக்கிறது. வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கருணாநிதியின் மறைவைக் குறித்து விட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கருணாநிதியையும் அவருடைய தி.மு.கவையும் நேரடியாகக் குற்றம் சுமத்துகின்றன.
இதாவது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏனைய தமிழ்த்தலைவர்களோ கட்சிகளோ கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக இல்லை.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் வேறு ஒன்றிண்டு தரப்புளும் மட்டும் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. மற்றும்படி கருணாநிதி எதிர்ப்புள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.
கருணாநிதி என்பது தனிப்பட்ட ஒரு மனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். அதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே கவனிக்க வேண்டியது.
இந்தப் பத்தியாளருக்கும் அவருடைய அரசியலில் பல விடயங்கள் ஏற்புடையவை அல்ல. ஆனால், அதற்காக அவரை எதிர்ப்புள்ளியில் நிறுத்துவதற்கு இடமளிக்க முடியாது.
நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை. ஆம் அவர் தன் தந்தை கந்தையிருக்கும் அவருடைய நம்பிக்கைகளுக்கும் அதற்கான மாண்புக்கும் வைத்த வெடியாகும்.
ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனின் வார்த்தைகளில் கேட்டால், 2009 புலிகளின் வீழ்ச்சியை பாற்சோறு கொடுத்துக் கொண்டாடிய சிங்கள மனநிலைக்கும் கருணாநிதியின் இழப்புச் சேதியறிந்து வெடி கொளுத்திய மனநிலைக்கும் இடையில் என்ன வேறுபாடு?
– கருணாகரன்