ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று அமெரிக்கா ஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும் எனத் தெரிவித்தது. ஒஸ்ரேலியா ஐந்து கண்கள் என்னும் உளவுத்துறை அமைப்பின் ஓர் உறுப்பு நாடாகும்.
அதில் உள்ள மற்ற நாடுகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், நியூசீலாந்து, கனடா ஆகியவையாகும். அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதல் செய்தால் தாக்குதல் செய்யப்படவேண்டிய இடங்களை இனம் காணும் பணியில் ஒஸ்ரேலியா முக்கிய பங்கு வகிக்கும்.
அந்த அடிப்படையில் ஒஸ்ரேலியாவிற்கு ஈரான் தொடர்பான படை நடவடிக்கைகள் பற்றி முன் கூட்டியே தகவல் அறியும் வாய்ப்பு அதிகம்.
அதை அந்த ஒஸ்ரேலிய ஊடகம் வேவு பார்த்து அறிந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு தாக்குதல் நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்கின்றார் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ்.
அமெரிக்கா ஒழிய வேண்டும்
தற்போது ஆட்சியில் இருக்கும் மதவாதிகள் 1979 ஈரானில் மதவாதப் புரட்சி ஆரம்பித்ததில் இருந்தே தமது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக உறுதியாக நம்புகின்றனர்.
அமெரிக்கா அழிய வேண்டும் என்பது அவர்களின் பிரதான சுலோகம். மேற்காசியாவில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் யாவும் ஈரானிய மதவாத ஆட்சியை ஒழிக்கவே இருக்கின்றன எனவும் ஈரானிய மதவாத ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.
பராக் ஒபாமா தமக்கு ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை என ஈரானிய மதவாதிகளுக்கு உணர்த்த எடுத்த முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.
ஈரானியர்கள் அமெரிக்காவை நம்பாமல் இருக்க டொனால்ட் டிரம்ப் தான் ஈரானை நம்பமாட்டேன் அது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தவில்லை என்றார்.
ஈரானின் போர்ப்பயிற்ச்சி
2018 ஓகஸ்ட் 5-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கடந்த சில நாட்களாக தாம் ஹோமஸ் நீரிணையில் செய்த போர்ப்பயிற்ச்சி முடிவிற்கு வந்ததாக ஈரான் அறிவித்துள்ளது. பன்னாட்டுக் கடற் போக்குவரத்தைப் பாது காக்கும் நோக்கத்துடன் தமது படையினர் பயிற்ச்சியில் ஈடுபட்டதாக ஈரான் அறிவித்தது.
ஈரானுடன் போர் தவிர்க்க முடியாததா?
1979-ம் ஆண்டு நடந்த ஈரானிய மதவாதப் புரட்சியில் இருந்தே அமெரிக்காவுடன் ஒரு மோதல் நிலையை ஈரானிய மதவாத ஆட்சியாளர்கள் உருவாக்கியிருந்தார்கள்.
2015-ம் ஆண்டு ஈரானியப் புரட்சி மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரப்பப்படும் என ஈரானியப் படைத்துறை பகிரங்கமாக அறிவித்தது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதில் ஈரான் என்றும் உறுதியாக இருக்கின்றது.
சிரியப் போரில் ஈரான் தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகக் காட்ட முயன்றது. சிரியா, ஈராக், லெபனான், யேமன், லிபியா ஆகிய நாடுகளில் ஈரான் தன் ஆதிக்கத்தை அல்லது ஆதிக்க ஆவலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஒரு புதிய வல்லரசாக ஈரான் உருவெடுக்க முயல்கின்றது. Thucydides’s Trap தத்துவப்படி ஒரு புதிய வல்லரசு உருவாகும் போது ஏற்கனவே இருக்கும் வல்லரசுடன் போர் என்பது தவிர்க்க முடியாததாகும்.
வார்த்தைப் போர் தொடங்கி விட்டது
ஏற்கனவே டொனால்ட் டிரம்பிற்கும் ஈரானில் ஆட்சியில் உள்ளவர்களுக்கும் டுவிட்டர் மூலம் போர் ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவுடன் போர் நடந்தால் அது எல்லாப் போர்களின் தாய்ப் போராக அமையும் என உரையாற்றினார் ஈரானிய அதிபர் ஹஸன் ரௌஹானி.
அதற்குப் பதிலடியாக டிரம்ப் இனி எப்போதும் அமெரிக்காவை மிரட்ட முயல வேண்டாம் அப்படி மிரட்டினால் அமெரிக்கா செய்யும் தாக்குதல் உலக வரலாற்றில் சிலர் மட்டும் பார்த்த மோசமான தாக்குதலாக இருக்கும் என்றார்.
ஈரானின் கட்ஸ் படையின் தளபதி காசிம் சொலெய்மனி அமெரிக்கா போரைத் தொடக்கலாம் ஆனால் போரை எப்படி முடிப்பது என்பதை நாம்தான் தீர்மானிப்போம் என்றார்.
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஈரானின் ஒவ்வொரு பேரரசுகளின் வரலாற்றுக் காலம் அமெரிக்காவினது முழு வரலாற்றுக் காலங்களிலும் நீண்டது எங்களை எவராலும் அழிக்க முடியாது என்றார்.
ஆனால் ஒரு வாரத்துக்குள் டிரம்ப் ஈரானிய அதிபரை தான் சந்திக்கத் தயார். அதுவும் நிபந்தனை இன்றிய சந்திப்பு என்கின்றார். நடக்கும் நகர்வுகளைப் பார்த்தால் கிட்டத்தட்ட வட கொரியாவிற்கு எதிரான போர்க் கூச்சல் போல இருக்கின்றது.
கொரியாவிற்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டிற்கும் ஈரானிற்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டிற்கும் இடையில் இரு பெரும் வித்தியாசங்கள் உள்ளன.
முதலாவது வட கொரியாவால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லை. ஈரானால் இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தல் உண்டு. இரண்டாவது வட கொரியாவால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் உள்ளது.
ஈரானால் அமெரிக்காவிற்கான நேரடி அச்சுறுத்தல் கரிசனைக்கு உரியதல்ல. ஆனால் உலக எரிபொருள் போக்கு வரத்திற்கு ஈரானால் பெரும் அச்சுறுத்தல் விடுக்க முடியும்.
வட கொரியாவில் தனி ஒருவர் முடிவுகளை எடுக்க முடியும். ஈரானில் பல அதிகார மையங்கள் உண்டு. வேறுபட்ட சிந்தனை கொண்டவர்கள் உண்டு.
டிரம்ப்பின் பேச்சு வார்த்தை அழைப்பும் போர் அறை கூவலும் அங்கு உள் முறுகலைக் கூட உருவாக்கலாம்.
அப்படி ஓர் உள் முறுகலை உருவாக்கும் சதிதான் அமெரிக்க அதிபரில் போர் மிரட்டலாக இருக்கவும் கருதலாம். ஏற்கனவே ஈரானில் பல உள்நாட்டு கிளர்ச்சிகள் உருவாகியுள்ளன அல்லது வெளி வலுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
2018 ஜூலை மாத இறுதியில் ஈரானின் என்ற படைத்துறையின் கட்டளை அதிகாரி மொஹமட் அலி ஜஃபாரி ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் அதிபர் எதிரிகளையிட்டுக் கவலைப்படுவதிலும் பார்க்க பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் பெரிய சாத்தானாகிய அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்பது அவரது கருத்தாக கடிதத்தில் இருந்தது. ஈரானியர்கள் அமெரிக்காவை மிரட்டல்கார நாடகப் பார்க்கின்றனர்.
ஈரானின் மோசமடையும் பொருளாதாரம் மக்கள் மீது பல சுமைகளைச் சுமத்துகின்றது. அதனால் பல நகரங்களில் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானிய மதவாதிகள் அடிக்கடி சொல்லும் வாசகம் DEATH TO AMERICA. அதை மாற்றி DEATH TO INFLATION, DEATH TO UNEMPLOYMENT என ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்புகின்றனர்,
அதிபர் ரௌஹானிக்கு உயர் மத குருக்கள் ஒன்று கூடி எழுதிய கடிதத்தில் ஊழலை ஒழிக்கும்படி வேண்டு கோள் விடுத்துள்ளனர். ஈரானின் பொருளாதாரம் மோசமடைந்தமைக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமல்ல எனக் காட்ட ஈரானிய மதவாதிகள் முயல்கின்றனர்.
பொருளாதாரப் போரும் ஆரம்பித்து விட்டது
ஏற்கனவே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பல பொருளாதார நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. எரிபொருள் தடை: எல்லா நாடுகளையும் ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவைத் தவிர மற்றப் பல நாடுகள் ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்குவதைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
வர்த்தகத் தடை: ஐரோப்பிய நிறுவனங்களையும் நிதி நிறுவனங்களையும் ஈரானுடனான வர்த்தகத்தை நிறுத்தும் படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதை மீறும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் எனவும் மிரட்டப்பட்டுள்ளது.
அரசுறவியல் நகர்வுகள்: புட்டீனுடனான டிரம்பின் பேச்சு வார்த்தையின் போது ஈரான் விவகாரம் விவாதிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் இரசியாவிற்கும் இடையில் முன்பு எப்போதும் இல்லாத அளவு ஒத்துழைப்பு தற்போது நிலவுகின்றது. இஸ்ரேலுக்கு அண்மையாக ஈரானியப் படைகள் இருக்கக் கூடாது என்பதை இரசியா பகிரங்கமாக ஆதரிக்கின்றது.
ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஈரானியர்கள் தமது சொத்துக்களின் மதிப்பில் பாதியை இழந்து விட்டார்கள்.
2018 ஜூலின் ஈரானிய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் 1300 பொருட்களுக்குத் தடை விதித்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை இரசியாவும் சீனாவும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அமெரிகாவின் தனக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைக்களைத் தவிர்க்க பிரெஞ்சு எரிபொருள் நிறுவனமான டோட்டல் ஈரானில் செய்ய விருந்த 47மில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டை நிறுத்தவுள்ளது,
2018இல் ஈரானியப் பொருளாதாரம் 1.8 விழுக்காடு மட்டும் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்பு அது 4.3 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஈரானுக்கு தடா
ஈரான் ஜேமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரங்கள் மற்றும் காகிதங்களைக் கொண்டு யேமன் நாணயத்தைப் போல போலி நாணயங்களை அச்சிட்டு அதை தனக்கு ஆதரவான யேமன் கிளர்ச்சிக்காரர்களுக்கு விநியோகித்ததை அமெரிக்க உளவுத்துறை அறிந்து ஈரானுக்கு அது போன்ற இயந்திரங்களை ஜேர்மனி விற்காமல் நிறுத்தியுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயற்படும் ஈரானியர்கள் நடத்திய மாநாட்டில் ஈரானிய உளவாளிகள் குண்டு வெடிக்கச் செய்ய எடுத்த முயற்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் ஈரானிய உளவாளிகள் பற்றிய தகவல்களை பல் வேறு நாடுகளின் அரசுகளுக்கு வழங்கிவருகின்றது.
அமெரிக்காவுடன் யார் இணைவார்கள்
தற்போதைய பிரித்தானியப் பாராளமன்றத்தில் ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டுமா என்ற பிரேரணை தோற்கடிக்கப்படலாம்.
பிரித்தானியா ஒரு போரில் ஈடுபட முடியாதவாறு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரச்சனை முற்றிப் போய் உள்ளது.
பிரித்தானியா, ஒஸ்ரேலியா, உட்படப் பல நாடுகள் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவிற்கு உதவியாகச் செயற்படலாம். இஸ்ரேல் நேரடியாகப் போரிடுமா அல்லது மறைமுகமாகப் போரிடுமா என்பதுதான் கேள்வி.
போர் இஸ்ரேலுக்கானது. உலகெங்கும் உள்ள யூத செல்வந்தர்களின் செயற்பாடுதான் ஈரானுடனான யுரேனியப் பதப்படுத்தல் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை ஒரு தலைப்பட்சமாக விலகச் செய்தது.
சவுதி அரேபியாவின் பணமும் களத்தில் இறங்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஈரானுடனான யுரேனிய ஒப்பந்தத்தில் இருந்து விலகாத படியால் அவை ஈரானுக்கு எதிரான போரில் இறங்க வாய்ப்பில்லை.
ஏற்கனவே ஈரானுக்கு எதிரான நேட்டோ என அழைக்கப்படும் The Middle East Strategic Alliance (MESA) படைத்துறைக் கூட்டமைப்பை பாஹ்ரேன், குவைத், ஓமான், காட்டார், சவுதி அரேபியா, ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகளை இணைத்து அமெரிக்கா உருவாக்கும் எண்ணத்தை முன்வைத்துள்ளது. இவை ஈரானை எதிர் கொள்ள என இணைக்கப்பட்டவை.
படைத்துறை ஒப்பீடு
அமெரிக்கா தனது மொத்தத் தேசிய உற்பத்தியின் 2.4 விழுக்காட்டைப் பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ளது. அதன் பாதுகாப்புச் செலவு ஆண்டொன்றிற்கு 664பில்லியன் டொலர்கள்.
ஈரான் தனது மொத்தத் தேசிய உற்பத்தியின் 6 விழுக்காட்டை பாதுபாப்பிற்கு செலவு செய்தாலும் அதன் பாதுகாப்புச் செலவு 17.1பில்லியன் டொலர்கள் மட்டுமே.
அமெரிக்காவின் செலவு வெறும் பாதுகாப்புச் செலவல்ல அதன் உலக ஆதிக்கத்திற்கான செலவாகும். ஐக்கிய அமெரிக்காவின் செயற்படும் படையினரின் எண்ணிக்கை 1.4மில்லியன்.
ஈரானின் படையினரின் எண்ணிக்கை 545,000. அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் போர் நடக்கும் போது ஈரானால் மொத்த 545000 படையினரையும் அமெரிக்காவிற்கு எதிராகப் போர் புரிய வைக்க முடியும். அமெரிக்காவால் தன் மொத்தப் படையினரையும் ஈரானில் களமிறக்க முடியாது.
போர் விமானங்கள் என்று பார்க்கும் போது அமெரிக்காவின் 13444 விமானங்களின் எண்ணிக்கைக்கும் செயற்திறனுக்கும் ஈரானின் 479 விமானங்கள் மலையும் மடுவும் போன்றன.
ஆனால் ஈரானின் கடற்கலன்கள் எண்ணிக்கை அடிப்படையின் அமெரிக்காவிற்கு அண்மையில் நின்றாலும் சுடு திறனில் பாரிய வேறுபாடு உண்டு.
அமெரிக்காவிடம் 5100 அணுக்குண்டுகள் உள்ளன. ஈரானிடம் ஏதும் இல்லை. அமெரிக்காவிடம் 8800 தாங்கிகலும் ஈரானிடம் 1700 தாங்கிகளும் உள்ளன. ஈரனிலும் பார்க்க 30 மடங்கு கவச வாகனங்கள் அமெரிக்காவிடம் உள்ளன.
அனுபவமும் அர்ப்பணிப்பும்
அமெரிக்கா தனது வரலாற்றின் 93விழுக்காடு போரில் ஈடுபட்டு வருகின்றது. உலகின் பல பகுதிகளில் பல்வேறு படையினருடன் போர் செய்த அனுபவம் உள்ளவர்கள்.
ஆனால் ஈரானியப் படையினரால் அர்ப்பணிப்புடன் போர் புரிய முடியும் என்பதை அவர்கள் ஈராக்குடனான போரின் போது நிரூபித்துள்ளனர்.
கடந்த நூறு ஆண்டுகளாக ஈரான் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. அது சமாதானத்தை விரும்பும் ஒரு நாடாகவே இருக்கின்றது.
ஈரானில் உள்ள மதவாத ஆட்சியை காப்பாற்ற ஈரானிய மதகுருக்கள் முன்னின்று செயற்படுவர். அவர்களால் ஈரானிய மக்களையும் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களையும் அமெரிக்காவிற்கு எதிராகக் கிளர்ந்து எழும்பச் செய முடியும்.
.
அபரிமிதமான அமெரிக்கப் படைவலு
ஈரானுக்கு எதிராக உலகில் பல போர் முனைகளில் சிறந்த விமானம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான F-22வில் பலவற்றை அமெரிக்கா களத்தில் இறக்கும்.
அத்துடன் எந்தப் போர்களத்திலும் பரீட்சிக்கப்படாத F-35 போர் விமானங்களையும் அமெரிக்கா களத்தில் இறக்கலாம். ஈரானால் களத்தில் இறக்கக்கூடிய மிக வலிமையுடைய போர் விமானங்கள் Mig-29, SU-24 ஆகிய இரசியத் தயாரிப்பு விமானங்களாகும்.
பாஹ்ரேனில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவில் உள்ள அணுவலுவில் இயங்கும் நிமிட்ஸ் வகை விமானம் தாங்கிக் கப்பல் உட்பட பலவிதமான கடற்படைக் கலன்களை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவால் களமிறக்க முடியும். 333 மீட்டர் நீளமான இந்த விமானம் தாங்கிக் கப்பலில் 60 போர் விமானங்கள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை F-18 போர் விமானங்களாகும். ஒரேயடியாகப் பல அணுக்குண்டுகளை தாங்கிச் சென்று வீசக் கூடிய Multiple independently targetable reentry vehicleஎன்னும் ஏவுகணைகள் ஈரானை நிர்மூலம் செய்யக் கூடியவை.
மேலும் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் ஒஹியோ வகை நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் ஈரான் இல்லை எனச் சொல்லலாம்.
உலகெங்கும் வாழும் யூதப் பெரும் செல்வந்தர்கள் ஈரானை அடக்குவதற்கு முன்னின்று உழைக்கின்றார்கள். அவர்களால் இரசியர்களை ஈரானுக்கு ஆதரவு கொடுக்காமற் செய்ய முடியும்.
சீனா ஈரானுக்கு மறைமுகப் பின்புல ஆதரவை மட்டுமே கொடுக்க முடியும். தனிமப் படுத்தப்பட்ட ஈரான் சில கொள்கை மாற்றங்களைச் செய்து போரைத் தவிர்க்கலாம்.