ilakkiyainfo

கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறை? – யதீந்திரா (கட்டுரை)

தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைவதன் மூலம் ஒரு வலுவான தேர்தல் கூட்டை உருவாக்க முடியுமென்னும் நம்பிக்கையும் பலரிடம் இருந்தது.

அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. ஆனால் இறுதியில் கஜன் தனியாகவும் சுரேஸ் தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான வலுவானதொரு கூட்டு தொடர்பில் பேசியும் எழுதியும் வந்தவர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

இப்போதும் பலரும் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைவதன் மூலம்தான், கொள்கைநிலைப்பட்ட வலுவானதொரு தேர்தல் கூட்டை உருவாக்கலாமென்று வாதிட்டுவருகின்றனர்.

சிலர் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டவர்களிடம் பேசுகின்ற போது அவர்கள் மத்தியில் சலிப்பைத்தான் அவதானிக்க முடிகிறது.

இதற்கு என்ன காரணம் என்று எவரைக் கேட்டாலும் கஜன் ஒத்துவருகிறார் இல்லை என்னும் பதிலே கிடைக்கின்றது. கஜேந்திரகுமாரின் பிரச்சினைதான் என்ன?

Kajenthirakumar

கஜேந்திரகுமார் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறிய பின்னணியில், கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு அரசியல் அணியை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

ஆனாலும் தமிழ் மக்கள் அவரது தலைமையை ஒரு மாற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அவரது கட்சி கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தகு வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

ஆனாலும் அது ஒரு முக்கியமான வெற்றியல்ல. யாழ்ப்பாணத்திற்கு வெளியில் கஜனால் பெரிய வாக்குவங்கியை நிரூபிக்க முடியவில்லை.

இந்த பின்புலத்தை முன்னிறுத்தி சிந்தித்தால் இப்போதும் கஜன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு வலுவான அணியென்று கூறமுடியாது.

ஏனெனில் கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்கு வங்கியை நிரூபித்திருக்கிறது.

எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்புக்கு எதிரான மாற்று என்று கூறமுடியுமானால், டக்களஸ் தேவானந்தாவையும் கூற முடியும்.

இந்த பின்புலத்தில் நோக்கினால், இதுவரை வடக்கு கிழக்கில் கூட்டமைப்பிற்கு எதிரான வலுவானதொரு மாற்றுத் தலைமை இதுவரை உருவாகவில்லை என்று கூறுவதே சரியானது.

ஏனெனில், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுக்கள் ஒரிடத்திற்குள் திரட்சி கொள்ளாமல், சிதறிக்கிடக்கின்றனர்.

இதன் காரணமாகவே கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டும் என்னும் முயற்சியில் மாற்றுக்கள் என்று தங்களை அடையாளம் காட்ட ஆசைப்படுவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இப்போதிருக்கின்ற நிலைமையின்படி ஒரு தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தால், நிச்சயமாக கூட்டமைப்பின் கையே ஓங்கிநிற்கும்.

உண்மையில் இது கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடல்ல மாறாக, கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு சரியான அணியை மக்கள் இன்னமும் காணவில்லை.

அப்படியானதொரு கவர்ச்சிகரமான கூட்டை இதுவரை உருவாக்க முடியவில்லை. மாற்று என்று தங்களை அடையாளம் காட்டுபவர்களின் பலவீனங்கள்தான், கூட்டமைப்பின் பலமாக இருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில்தான் முன்னைநாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், சம்பந்தனது தலைமைக்கு சவால்விடுக்கக் கூடிய ஒருவராக வெளித்தெரிகின்றார்.

சம்பந்தனுடனான முரண்பாடுகளின் பின்னர்தான், விக்கினேஸ்வரன் தமிழ் தேசிய அரசியலில் ஒரு ஆளுமையாக இனம்காணப்பட்டார்.

விக்கினேஸ்வரனுக்கு எப்போது அவ்வாறானதொரு அடையாளம் கிடைத்ததோ, அப்போதே கூட்டமைப்பிற்கான மாற்று தொடர்பில் சிந்தித்தவர்களின் பார்வையும் விக்கினேஸ்வரன் மீது திரும்பிவிட்டது.

விக்கினேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கான தலைவராக அதிகம் அதிகம் வெளித் தெரியத் தொடங்கிய போது, அதுவரை தங்களை ஒரு மாற்று அணியாக அடையாளப்படுத்தி வந்த கஜன் அணியினர் ஒரு மாற்று என்னும் நிலையில் பலவீனமடைந்.து சென்றனர்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும், கஜன் தலைமையிலான அணியினர் தமிழ் தேசியப் பேரவை என்னும் பெயரிலேயே தேர்தலை எதிர்கொண்டனர்.

பேரவை என்று எங்கு பெயர் வந்தாலும் அதன் சொந்தக்காரர் விக்கினேஸ்வரன் ஆவார்.

அந்த வகையில் நோக்கினால், விக்கினேஸ்வரன் தொடர்சியாக கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகள் மீது முன்வைத்து வந்த விமர்சனங்களின் காரணமாக, கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு அலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்தது.

அந்த அலையே கஜனுக்கான வாக்குவங்கியாக மாறியது. இந்த விடயங்களை முன்னிறுத்தி கஜன் சிந்தித்திருக்கின்றாரா?  கஜன் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வரும் கருத்துக்களை உற்றுநோக்கினால் அவர் அவ்வாறு சிந்தித்ததற்கான அடையாளங்களை காண முடியவில்லை.

இன்று விக்கினேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கான தலைவராக வெளித்தெரிகின்றார். அவரை தவிர்த்து ஒரு மாற்றை நிறுவலாம் என்று கஜன் எண்ணினால் அதன் பொருள், தான் கூறிவந்த மாற்றை அவரே பலவீனப்படுத்த முற்படுகின்றார் என்பதுதான்.

விக்கினேஸ்வரன் அவரது அண்மைய அறிக்கையில் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிரு;கின்றார்.

அதாவது, ஈ.பி.டி.பி தவிர்ந்த, கொள்கை அடிப்படையில் இணைய விரும்பும் எவரும் தன்னோடு இணையலாம்.

தனது தலைமையிலான மாற்று என்பது பரந்தளவான தேர்தல் கூட்டாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புவதாக தெரிகிறது.

உண்மையில் தமிழரசு கட்சியின் வாக்கு பலத்தை சிதைக்க வேண்டுமாயின் அவ்வாறானதொரு பரந்தளவான கூட்டு ஒன்றுதான் இன்றைய தேவை. கஜன் என்னதான் கொள்கை தொடர்பில் விவாhதம் செய்தாலும் அதற்கான ஆதரவு மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதை கூறுவதற்கு வாக்குகள்தானே தேவைப்படுக்கின்றன.

அதுதானே கூட்டமைப்பின் பலமாகவும் இருக்கிறது. கஜன் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

எங்களின் நோக்கம் தமிழரசு கட்சியை தோற்கடிப்பதல்ல மாறாக கொள்கை அடிப்படையிலான கூட்டுத்தான் எங்களுக்கு முக்கியமானது.

கொள்கை முக்கியம் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இந்தப்பத்தியாளருக்கு இல்லை. ஆனால் நீங்கள் முன்னிறுத்தும் கொள்கை தேர்தல் அரசியலில் தோல்வியடைந்தால் அந்தக் கொள்கையின் பெறுமதி என்ன? தொடர்ந்தும் கூட்டமைப்பிடம் தேர்தலில் தோல்விடைந்து கொண்டு, வெறுமனே கொள்கை தொடர்பில் விவாதம் செய்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? கூட்டமைப்பு பிழையாக செயற்படுகின்றது, அதனால்தான் தமிழர் தேசத்தின் இருப்பு சிதைகின்றது என்றால், தமிழர் தேசத்தின் இருப்பை சிதைக்கும் தமிழரசு கட்சியை தோற்கடிக்காது எவ்வாறு முன்நோக்கி பயணிக் முடியும்? இதற்கு கஜனிடம் பதில் இருக்கிறதா?

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டுதான் மாற்று தொடர்பில் சிந்திக்கும் அனைவரும் விக்கினேஸ்வரன் தலைமையில் ஓன்று சேர வேண்டிய தேவை உணரப்படுகிறது.

ஆனால் கஜனின் தந்திரோபாயங்களற்ற அரசியல் அணுகுமுறைகளால், அவர் அதிகம் விக்கினேஸ்வரனிலிருந்து விலகிச் செல்வதான ஒரு தோற்றமே தெரிகிறது.

அவ்வாறு விலகிச் செல்வது மாற்று தொடர்பில் சிந்தித்துவருபவர்களை நிச்சயமாக பலவீனப்படுத்தும். கஜன் அதிகம் புவிசார் அரசியல் தொடர்பில் பேசுகின்ற ஒருவர்.

ஆனால் அண்மைக்காலமாக அவர் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் அவருக்கு அது தொடர்பில் உண்மையிலேயே தெளிவு இருக்கிறதா என்னும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.

புவிசார் அரசியலை கையாளும் திறன் கொண்டவர்கள் அல்லது ஆகக் குறைந்தது அது தொடர்பில் தெளிவான பார்வையுள்ளவர்கள் சதிக்கோட்பாடுகளில் (Conspiracy theories) தங்களது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள். கஜனுக்கு வயதிருக்கிறது.

பொறுமையாக, தந்திரோபாய அணுகுமுறையுடன் செயற்பட்டால் இன்னும் சில வருடங்களில் தமிழர் தேசத்தின் தலைமை கூட அவரிடம் வரலாம்.

ஆனால் அதற்கு வெறும் கொள்கைவாதம் ஒரு போதும் கைகொடுக்காது. சதிக்கோட்பாடுகளும் கைகொடுக்காது.

சூழ்நிலை கருதி தீர்மானங்களை எடுக்க முடியாதவர்கள் தங்களை நோக்கிவரும் தலைமையை தாங்களாகவே உதறித்தள்ளுகின்றனர். கஜனின் நிலையும் அப்படியான ஒன்றுதான்.

கஜன் ஒரு வேளை எண்ணியிருக்கலாம் – அதாவது, சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பொற்றுவிட்டால் போதும். அதுதான் கஜனின் இலக்கு என்றால் அதற்கு மாற்றுத் தலைமை தொடர்பான கோசங்கள் எதற்கு?

-யதீந்திரா-

Exit mobile version