அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது.

ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது.

இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான்.   

ஏனென்றால், அடுத்து இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. அது, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா, இல்லையா என்பது.

பிரதமர் பதவிச் சர்ச்சை, நீதிமன்றப் படிகளில் ஏறித்தீர்க்கப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவி மாத்திரமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கூடத் தப்பிக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இது சட்ட, அரசமைப்புச் சிக்கல்கள் நிறைந்த விவகாரமாகவே தெரிகிறது.  

மஹிந்தவின் பதவி விலகல், ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை அடுத்து, அரசியல் நெருக்கடிகள் ஓரளவுக்குத் தணிந்த நிலையில், நாடாளுமன்றம் கடந்த செவ்வாய்கிழமை கூடியபோது தான் இந்தப் பிரச்சினைக்கு பூதாகாரமாக வெடித்தது.

அதற்கு முதல் நாள், ஜனாதிபதி செயலகத்தில் நடந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்குமாறு, சபாநாயகரைக் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சபாநாயகருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்பாராத வகையில், இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர், அறிவித்தார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்தே பிரச்சினை உருவானது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சட்டரீதியான இரண்டு கேள்விகளை எழுப்பி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தினார்.

sri-lanka-president-maithripala-sirisena

அவர் எழுப்பிய முதல் கேள்வி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக மாத்திரமன்றி, மூன்று அமைச்சுகளுக்கும் பொறுப்பாக இருக்கின்ற நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும்?   

கடந்த காலங்களில், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.

டி.பி. விஜேதுங்க ஜனாததிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது, அதேகட்சியின் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.

எனவே, இப்போதும், அதேபோல இருக்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வாதிட்டார் எனினும், அவையெல்லாம் நடந்தது 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் அடுத்த கேள்வி இன்னும் சிக்கலானது. மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரமன்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்குக் கூட, தகைமை உள்ளவரா என்பதே அந்தக் கேள்வி.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர், கடந்த நவம்பர் 11ஆம் திகதி, மஹிந்த, நாமல் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், கட்சி தாவினால் பதவி பறிபோய்விடும் என்ற ஆபத்து இனி இல்லை என்று உறுதியானதும் தான், மஹிந்தவும் அவரது சகாக்களும் பொதுஜன பெரமுனவுக்குச் சென்றிருந்தனர்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, மஹிந்த உறுப்புரிமை அட்டையைப் பெற்றுக்கொண்டார்.

தன்னுடன் வந்தவர்களுக்கும் அவரே உறுப்புரிமையை வழங்கினார். 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவியவர், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும்.

அதுபோலவே, சுதந்திரக் கட்சி யாப்பும் கூட, வேறொரு கட்சியில் இணைந்தவர் சுதந்திரக் கட்சியில் இருந்து நீங்கியவராகி விடுவார்.

இந்தவகையில், மஹிந்த இப்போது நாடாளுமன்ற உறுப்பினரா, அவ்வாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உரிமை அவருக்கு உள்ளதா? என்பதைத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் சுமந்திரன்.  

சுமந்திரனின் இந்த உரையை அடுத்து, குழம்பிப்போன சபாநாயகர் கரு ஜெயசூரிய, இதுபற்றி ஆராய்ந்து, வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாகக் கூறியிருந்தார். இன்று அவர், தனது முடிவை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தன்னைச் சபாநாயகர் நீக்கியதாக அறிவிக்காமல், மஹிந்தவை நியமித்திருக்கக் கூடாது என்று சம்பந்தனும் கூறியிருக்கிறார்.

இதனால் இப்போது, இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்தப் பிரச்சினை சிக்கலானது. சட்டரீதியாக, பல நியாயமான கேள்விகளைக் கொண்டது. அதனால்தான் சபாநாயகரும் குழம்பிப் போனார்.

எவ்வாறாயினும், சுமந்திரன் பற்ற வைத்த நெருப்பு இப்போது, மைத்திரி- மஹிந்த அணிகளைப் பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது.

அவர்கள் இப்போது, சுமந்திரனின் முதலாவது கேள்வியை விட இரண்டாவது கேள்வியின் மீதே கவலையடைந்துள்ளனர். அது ஒரே கல்லில், இரண்டு காய்களை வீழ்த்தக் கூடியது.

மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கூட பறிபோய் விடும்.அதனால்தான், அவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவில் இணையவில்லை என்றும், அவர் இன்னமும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறார் என்றும் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறார்கள்.

ஒழுங்காக சந்தாப் பணம் செலுத்துகிறார், கட்சியின் போசகராக இருக்கிறார் என்றெல்லாம் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

தான் ஒருபோதும் சுதந்திரக் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்றும், கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறமாட்டேன் என்றும் அவர் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை.  எந்த சுதந்திரக் கட்சியை உதறிவிட்டு அதன் பெரும்பாலான உறுப்பினர்களுடன் வெளியேறினாரோ, அதே கட்சியிடம் சரணாகதி அடைய வேண்டிய நிலை மஹிந்தவுக்கு வந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி, இப்போது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொதுஜன பெரமுனவில் சேர்ந்து கொண்டதற்கான தடயங்களையும் அழிக்க முனைந்திருக்கிறார்கள். உறுப்புரிமை பெற்றது பற்றிய சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்குகிறார்கள்.  

இவற்றின் மூலம், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தாலும், மக்கள் மத்தியில் அது எத்தகைய பாதகமான கருத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.

பிரதமர் பதவி சர்ச்சை வெடித்த போது, மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டேன்; அதற்கு முன்னர் பிரதமராகவும் இருந்திருக்கிறேன். பதவி எனக்கு ஒரு பொருட்டல்ல. அது முக்கியமும் இல்லை” என்று கூறியிருந்தார்.

அது உண்மையாயின், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக இந்தளவுக்கு அல்லாட வேண்டியதோ, தில்லுமுல்லுகளைச் செய்ய வேண்டியதோ இல்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ, கட்சியா -பதவியா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் பதவியைத் தான் தெரிவு செய்தார்.

அதனால் தான். அவர் பொதுஜன பெரமுனவை உதறிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓடினார். இப்போது அங்கும் இருக்க முடியுமா என்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

கெளரவமாக அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறி விட்டு, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்று, கட்சியை் பலப்படுத்த முயன்றிருந்தால், அண்மையில் இழந்துபோன செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவேனும் அது உதவியிருக்கும்.

மாறாக இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் இழுபறி நடத்துகின்றவராக, அதற்காகப் பொய்களை கூறி, உண்மைகளை மறைக்கின்ற ஒருவராக, தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறார்.

இந்தச் சர்ச்சைகளின் முடிவு, எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பெரியதொரு விம்பமாக கட்டியெடுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, இது அவமானத்தையும் செல்வாக்கு இழப்பையும் தான் ஏற்படுத்தும்.

– கே. சஞ்சயன்

 

Share.
Leave A Reply

Exit mobile version