அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நால்வரும், அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் வைத்து, துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த தென்கொரியா பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது, கிம் ஜோங் உன்னின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஷின் ஹே யாங் என்கிற பெண், தனது பணியை சரியாக செய்யாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச நாடுகளை அதிரவைத்து வந்த, வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், சர்வதேச நாடுகளுடன் சுமூகமான உறவை தொடர வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு மிகவும் இணக்கமாக நடை பெற்றதால் இருநாட்டு உறவில் நீடித்த விரிசல் விலகியது. இதையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு அமைதி பாதைக்கு திரும்பியது.

இந்த நிலையில் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2ஆவது முறையாக சந்தித்து பேசினர்.

இதன்போது, வடகொரிய தலைவர் கோரிக்கையை ஏற்க மறுத்து, ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறியதனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த நிலையில் வடகொரிய தலைவர், இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version