சுகந்தா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. ஆனால் எங்களைத் தேடி என்றோ ஒருநாள் அவள் வருவாள்’ நம்பிக்ைகயுடன் காத்திருக்கும் குடும்பத்தினர்
தனது 16 வயது சகோதரியை விடுதலைப் புலிகள் கடத்திக் கொண்டு சென்ற தினத்தை செல்வரட்ணம் சுபிதா எப்போதும் மறக்க மாட்டார். 15 நிமிடங்களில் எல்லாமே முடிந்து விட்டது.
விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் ‘கவுராண’ பெண்களைப் போல் அவர்களது வீட்டுக்கு வந்து மரிசலின் சுகந்தாவை இழுத்துக் கொண்டு சென்றனர்.
சுகந்தா நன்றாகப் படிப்பாள். கணித பாடத்தில் அவளுக்கு அதிக ஆர்வமும் திறமையும் இருந்தது. தனது தாய்க்கு உதவியாக வீட்டைப் பெருக்குவதும், வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டு வருவதும், அவள் எப்போதுமே செய்யும் வீட்டுப் பணிகள். ஆனால் இப்போது எல்லாமே வெறும் ஞாபகத்தில் மட்டுமே இருந்தது.
குடும்பத்தில் கடைக் குட்டி என்பதால் சுகந்தா அனைவருக்கும் செல்லமாக இருந்தாள். சுகந்தாவுக்கு இடியப்பம் மற்றும் தின்பண்டங்களில் அதிக விருப்பம் இருந்தது.
சுகந்தாவின் சகோதரி சுபிதாவுக்கு இப்போது முப்பது வயதாகிறது. அத்துடன் அவள் ஒரு தாயும் கூட. ஆனால் சுகந்தா கடத்தப்பட்ட அந்த நாள் அடிக்கடி அவரது நினைவில் வந்து போகிறது.
அது யுத்தத்தின் இறுதிக் கட்டம். 2009 மார்ச் மாதம். சுகந்தாவின் கேப்பாப்புலவு கிராமத்தில் ஷெல் மழை பொழிந்தவாறு இருந்தது.
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகந்தாவின் குடும்பம் முடிந்தவரை போராடியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையே தீவிர யுத்தம் நடைபெற்றது.
சுகந்தாவைத் தேடி விடுதலைப் புலிகள் வந்த போது சுதா வீட்டில் இருக்கவில்லை. அவர் அடுத்த வீட்டில் இருந்தார்.
அவரது தாயின் கூக்குரலைக் கேட்டுத்தான் சுபிதா தனது வீட்டுக்கு விரைந்தார். ஆனால் அப்போது ‘நாங்கள் இவளைக் கொண்டு போகிறோம்’ என்று கூறிக் கொண்டு பெண் புலிகள் சுகந்தாவை இழுத்துச் சென்றார்கள். அக்காட்சியை சுபிதாவினால் காண முடிந்தது.
‘அம்மா… அக்கா…’ என்று சுகந்தா அலறினாள். ஆனால் அம்மாவுக்கும் சுபிதாவுக்கும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆடு, மாடுகளை இழுத்துச் செல்வதைப் போல்தான் அவர்கள் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் இழுத்துச் சென்றனர்.
யுத்தம் இறுதிக் கட்டத்தில் இருந்ததால் அவர்களுக்கு போராளிகள் தேவைப்பட்டனர். அதனால் அவர்கள் சிறுவர் போராளிகளைத் தேடினர். ‘ஒரு குடும்பத்தில் இருந்து இரு பிள்ளை’ என்ற ரீதியில் அவர்கள் வீடுகளுக்கு வந்து சிறுவர்களை பிடித்துச் சென்றனர்.
2004 இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி 2002 பெப்ரவரி முதல் புலிகள் 3500 சிறுவர் போராளிகளைச் சேர்த்துள்ளனர்.
ஐ. நா போன்ற சர்வதேச அமைப்புகள் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சிறுவர் போராளிகளை விடுவிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் கூறிய போதிலும் அவ்வாறு அவர்கள் சிறுவர் போராளிகளை விடுதலை செய்யவில்லை.
யுத்தம் முடிவுற்றபோது சுமார் 12 ஆயி ரம் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள். இவர்களில் 594 சிறுவர் போராளிகள் இருந்தனர். அதில் 364 பேர் சிறுவர்கள், 230 பேர் சிறுமியர்.
குடும்பங்களில் இருந்து சிறுவர்களை கொண்டு செல்வதற்கு புலிகள் இயக்கத்தினர் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். அச்சத்தில் இருந்த பல குடும்பங்கள் குழிகளை ேதாண்டி அதில் தமது பிள்ளைகளை ஒளித்து வைத்தனர்.
சுகந்தாவின் குடும்பமும் அது போன்ற ஒரு நடைமுறையைப் பின்பற்றியது. அவர்கள் வீட்டின் நடுவே ஒரு ‘பங்கர்’ உருவாக்கப்பட்டது. சுகந்தாவின் சகோதரர்களே இந்த பங்கரை உருவாக்கியிருந்தனர்.
அந்த பங்கர் சிறியதாக இருந்த போதிலும் சுகந்தா படுத்திருக்கப் போதுமானதாக இருந்தது. எப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் சிறுவர்களைத் தேடி வருவது பற்றி தெரிய வருகிறதோ அப்போதெல்லாம் சுகந்தா பங்கருக்குள் சென்று படுத்துக் கொள்வாள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் திடீரென்று வந்ததால் சுகந்தாவுக்கு பங்கருக்குள் சென்று படுப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை.
பதின்ம வயதில் உள்ள சிறுவர் அல்லது சிறுமியை தேடியே விடுதலைப் புலிகள் இயக்கம் வருவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் தெரிந்திருந்தது.
அவ்வாறு வரும் போது விடுதலைப் புலிகள் சரியான திட்டத்துடனேயே வருவார்கள். பதின்ம வயதினர் அதிகமாக உள்ள கிராமங்களை முதலில் விடுதலைப் புலிகளின் ஆண் உறுப்பினர்கள் சுற்றி வளைப்பார்கள். அதற்குப் பின்னர் சிறுவர்களை ஆண் புலிகளும், சிறுமியரை பெண் புலிகளும் பலவந்தமாக இழுத்துக் கொண்டு செல்வார்கள்.
பிரதான வீதி வரை சிறுவனை அல்லது சிறுமியை இழுத்துச் சென்று அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் அவர்களை ஏற்றிக் கொள்வார்கள்.
தனது சகோதரி சுகந்தா வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை சுபிதா கண்டார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. தான் பல்கலைக்கழகத்துக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றப் போவதாக சுகந்தா அடிக்கடி கூறுவார். இப்போது அனைத்தும் வெறும் கனவாகப் போய் விட்டது என்கிறார் சுபிதா.
“சுகந்தாவைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எல்லா இடங்களில் அவளைத் தேடினோம். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் சுகந்தா எங்களைத் தேடி வருவாள்” என்று 62 வயதான சுபிதாவின் தாயும் சுபிதாவும் நம்புகின்றனர்.
“எங்கள் வீடு எங்கே இருக்கிறது என்பது சுகந்தாவுக்கு ஞாபகம் இருக்கும். ஒருநாள் அவள் எங்களைத் தேடி வரத்தான் போகிறாள்” என்று சபிதா கூறுகிறார்.
“எங்கள் வீட்டில் சுகந்தாவின் ஒரு படம் கூட இல்லை. இருந்தால் அதைப் பார்த்து கவலையை குறைத்துக் கொள்ளலாம்” என்று சுபிதா கூறினார்.
விருப்பத்துடன் சேர்ந்தனர்:
ஞானேஸ்வரன் மயூரனுக்கு 39 வயது. இவர் தொண்டமானாறு கிழக்கைச் சேர்ந்தவர். 1995 இல் இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.
அப்போது அவருக்கு 15 வயதாக இருந்தது. மயூரனும் அவரது தாயாரும் மிகவும் அச்சத்தில் இருந்தனர். அவர்களது கிராமத்தின் மீது இராணுவம் அடிக்கடி தாக்குதல் நடந்ததாலேயே அவர்கள் அச்சத்துடன் இருந்தனர்.
ஆனால் அவர்களுடைய அடுத்த வீட்டில் ஒரு சிங்களப் பெண் வசித்து வந்தார். அவரை ‘லங்கா அக்கா’ என்றே அனைவரும் அழைத்தனர். லங்கா அக்கா ஒரு தமிழரையே திருமணம் செய்திருந்தார்.
ஆனால் லங்கா அக்கா இப்போது எங்கே இருக்கிறார் என்று தனக்குத் தெரியவில்லை என்று மயூரன் கூறுகிறார்.
பதின்ம வயதில் மயூரனுக்கு இலங்கை இராணுவத்தின் மீது கோபமும் அச்சமும் இருந்தன. இராணுவத்தினரை நேரில் சந்தித்த ஒரு சம்பவம் அவருக்கு இப்போதும் ஞாபகத்தில் உள்ளது.
மயூரனும் அவரது தாயாரும் அன்று கடும் பசியில் இருந்தனர். வழக்கத்தைப் போலவே மயூரனின் அம்மா அன்றும் கஞ்சி தயாரித்திருந்தார்.
பெரும்பாலான வீடுகளின் இந்த கஞ்சிதான் அவர்களது பசியை ஆற்றும். உப்பு போடாமலேயே இந்தக் கஞ்சியை அவர்கள் அருந்துவர். கஞ்சி அடுப்பில் வெந்து கொண்டிருந்தபோது அங்கே இராணுவத்தினர் வந்தனர்.
அடுப்பில் இருந்த பானையை ஒரு இராணுவ வீரர் எட்டி உதைத்தார். அது தரையில் உருண்டோடியது. இராணுவம் வீட்டுக்குள் நுழையும் முன்னரே மயூரனும் அவரது தாயாரும் காட்டுக்குள் ஓடி விட்டனர்.
அன்று இரவு முழுவதும் காட்டுக்குள் பசியுடன் அவர்கள் ஒளிந்திருந்தனர். அதன் பின்னர் ஒரு நாள் பாடசாலையில் காட்டப்படும் ஒரு படத்தைப் பார்க்க செல்வதாகக் கூறி விட்டு மயூரன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.
“எமக்கு ஒரு வாளையும் டீ சேர்ட் ஒன்றையும் தந்தனர். மூன்று மாத கால ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின்னர் வெவ்வேறு இடங்களில் நாம் நிலைநிறுத்தப்பட்டோம்.
நான்கு வருடங்களின் பின்னர் ஒரு நாள் ஆனையிறவு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது எனது இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக இப்போதும் என்னால் சரியாக நடக்க முடியாது” என்று மயூரன் கூறுகிறார்.
அரைகுறையாக கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் மயூரன் இப்போது தங்கியிருக்கிறார். அவரது ஊன்றுகோல் பக்கத்திலேயே உள்ளது.
வாடகைக்கு எடுத்த முச்சக்கரவண்டியொன்றை அவர் இப்போது ஓட்டுகிறார். “யாசகம் செய்யாது ஏதோ ஒரு அளவு உழைக்க முடிகிறது.
எனக்கும் எனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் அது போதுமானதாக உள்ளது” என்று மயூரன் கூறுகிறார்.
பூசா முகாமில் அவர் மூன்று வருட கால புனருத்தாரண நிகழ்ச்சியில் ஈடுபட்டார். கையில் பணம் இல்லாததால் அவருக்கு வேலையொன்றை தேடிக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது.
வெளிநாட்டு தொண்டர் நிறுவனமொன்று அவருக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தையும் வீடுகட்ட ஒரு துண்டுக் காணியையும் கொடுத்தது. ஆனால் அந்த காணிக்கான உரிமை கொடுக்கப்படவில்லை.
முன்னாள் விடுதலை இயக்க போராளிகள் குறிப்பாக பெண்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை பிரசாரகரான அப்துல் சரூர் கூறுகிறார். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும், முன்னாள் புலிகள் இயக்க போராளிகளை சமூகத்தில் இணைத்துக் கொள்வது மிகுந்த சவாலான விடயம் என்று அவர் கூறுகிறார்.
‘திருமணம் செய்து கொள்வது அவர்களுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. வயதான ஒருவரை அல்லது ஏற்கனகே மனைவியை இழந்தவர் அல்லது உடல் ஊனமுற்ற ஒருவரைத்தான் அவர்கள் அநேகமாக திருமணம் செய்ய வேண்டியுள்ளது’ என்று அவர் கூறுகிறார்.
அனன்யா