உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின் நீட்சியாக நிகழும் விடயங்கள் இனங்களுக்கிடையிலான விரிசல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து வருகின்ற நிலையில் மிகவும் உணர்வு பூர்வமான விடயமொன்று திருகோணமலை மூதூரில் நிகழ்ந்துள்ளது.

மூதூர் கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலயத்தின் பிரதான குருவுக்கு உதவியாளராக செயற்பட்டு வந்த நபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி பொலிஸார் சந்கேத்தின் பேரில் கைது செய்தனர். அதனையடுத்து அவர் முஸ்லிம் நபர் என்றும் அவர் குறித்து பல்வேறு விதமான தகவல்களும் வெளியாக ஆரம்பித்தன.

இவர் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் வெளியான தகவலொன்றினையடுத்தே சந்தேகத்தின் அடிப்படையில் மூதூர் பொலிஸார் இவருக்கு வலைவிரித்திருந்தனர்.

புலனாய்வுத்துறையினரின் பின்தொடர் நடவடிக்கைகளை அடுத்து இந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்துகொடுத்தார் என்ற செய்தியொன்று காட்டுத்தீயாள் பரவியது. இதனால் மூதூர் மட்டுமல்ல முழு நாடுமே கலங்கி நின்றது.

மறுபக்கத்தில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் முன்னுக்குப்பின்னர் முரணான தகவல்கள் பரவ ஆரம்பித்தமையால் மூதூர் முழுவதும் பதற்றமான நிலைமைகள் நீடிக்க, ஆலய பிரதம குரு அருணாசலம் ஐயர் சிவானந்த குருக்களிடமும் ஆலய நிர்வாக சபையினரிடமும் கடந்த சனிக்கிழமை இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

sulannnaகைதானவர் யார்?

கைதாகியுள்ள நபர் யார் என்பது குறித்து தற்போது வரையில் விசாரணையளின் பிரகாரம் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைவாக, அவரது பெயர் புஹாரி முகமது லாபிர் கான் என்பதாகும்.

783505371 V  என்னும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினையுடைய அவர் 1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார்.

ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட அவர் மாவடிச்சேனை வாழைச்சேனை என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

அவர் 7ஆம் ஆண்டு வரையே கல்வி கற்றிருந்தார். எனினும், அவர் தனியார் கல்வி நிறுவனமொன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது அறையிலிருந்து மீட்கப்பட்ட நாட்குறிப்பேட்டின் பிரகாரம், சிங்கள, ஆங்கில மொழிகளிலும் பரீட்சயம் உள்ளவராகவும் காணப்படுகின்றமை உறுதியாகின்றது.

கடந்த காலம்

குறித்த நபரின் பின்புலம் இவ்வாறு இருந்தாலும் இவரது நடத்தையில் ஒழுக்கமின்மையால் குறித்த நபரின் முதல் மனைவியான அபுல் ஹாசன் சுபாஹனி அவரிடமிருந்து பிரிந்து சென்றுள்ளார்.

அதனையடுத்து குறித்த நபர் குருணாகலில் கடை ஒன்றில் பணி புரிந்து வந்த நேரம் அங்கு பிறிதொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இருப்பினும் அப்பெண்மணியுடனும் திருமண வாழ்வும் நீடித்திருக்காத நிலையில் அவரைப்பிரிந்த குறித்த நபர் இறுதியதாக தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

புதிய அடையாளம்

அதன் பின்னர் தனது புஹாரி முகமது லாபிர் கான் என்ற பெயரை மாற்றி தன்னை சிவா என அடையாளப்படுத்திய அவர் நரிப்புல் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடனேயே கிளிவெட்டி பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளார்.

முதன் முதலாக பாரதிபுரம் சிவன் ஆலயத்திற்கு முன்னால் வந்திறங்கிய அவர் ஆலயத்திற்குள் சென்று தனக்கு உதவியாளர் வேலை வேண்டும் எனக் கேட்க அப்போது அந்த ஆலயத்திலிருந்த குரு எங்களது ஆலயத்திற்கு உதவியாளர் இருப்பதாகக் கூறி அவரை திருப்பி அனுப்பியுள்ளார்.

பின்னர் அவர் கிளிவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சென்றும் தனக்கு வேலை தருமாறு கோரவும் ஆலய குரு அருணாசலம் ஐயர் சிவானந்த குரக்கள் அவரை உதவியாளராக இணைத்துள்ளார்.

இரண்டு வருடகாலமாக மேற்படி ஆலயத்தில் கடமையாற்றி வந்திருந்த நிலையிலேயே தற்போது அந்நபர் சந்தேகத்தின் பேரில் கைதாகியிருக்கின்றார்.

தற்போது குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ள குறித்த சம்பவம் தொடர்பில் அந்நபரை அறிந்திருந்த சிலரை நேரில் சந்தித்து கலந்துரையாடி கருத்துக்களைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் கிட்டியிருந்தது.

அதனடிப்படையில் பகிரப்பட்ட தகவல்கள் வருமாறு,

உதவிக்கு அமர்த்திய ஆலய பிரதம குரு சிவானந்த குருக்கள் கூறுகையில்,

‘என்னைப்பற்றி பலராலும் பல வகையிலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இச்செயலானது ஆலயத்திற்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனது பெயர் எவ்வாறு போனாலும் பரவாயில்லை.

ஆனால் 25 வருடங்களாக எனது சொந்த ஆலயத்தைப் போல் பராமரித்து வந்த இவ் ஆலயத்தின் பெயருக்கு இவ்வாறானதொரு  களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை எண்ணும் போதே மிகவும் மன வேதனையாக உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் என்னிடம் வந்து வேலை கேட்கும் போது முஸ்லிம் என்ற விடயம் எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நான் அப்போதே அவரை இங்கிருந்து அனுப்பியிருப்பேன்.

கஷ்டத்தின் மத்தியில் வந்து வேலை கேட்டார். அந்த வகையிலேயே நான் அவருக்கு வேலை வழங்கினேன்.

இருந்தாலும் அவன் என்னிடம் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டார். அவ்வாறிருந்தும் அவர் முஸ்லிம் என்ற விடயத்தை ஏன் என்னிடமிருந்து மறைத்தார் என்பதுதான் தெரியவில்லை.

எது எவ்வாறிருந்தாலும் இந்த ஆலயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அவதூறுக்கு ஒரு வகையில் நானும் காரணமாகிவிட்டேன்.

காரணம் அவரை நானே வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். அதனால் நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

நான் கடந்த 25 வருடங்களாக இவ்வாலயத்தில் பணி புரிந்து வருகின்றேன். அவரும் இரண்டு திருவிழாக்கள் சுமார் இரண்டு வருடங்களாக என்னுடன் பணிபுரிந்து வந்தார்.

அவர் வந்து சேர்ந்ததிலிருந்து சம்பளத்திற்கு வேலை செய்யவில்லை. தொண்டு செய்வது போன்று சம்பளம் இல்லாமலேயே பணி புரிந்து வந்தார்.

அவர் திருமணம் செய்து மனைவியை விட்டு பிரிந்ததன் காரணமாக அவரது  மனைவிக்கு நீதிமன்றத்தில் பணம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

அதனை கருத்திற்கொண்டு எனக்கு வரும் தட்சணைப் பணத்தின் மூலம் சிறு தொகையினை வழங்கி வந்தேன். இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்தே அவருக்கு நிர்வாகம் சம்பளம் வழங்கியது.

அவர் முஸ்லிமாக இருந்தாலும் ஏழைகளுக்கு உணவளித்தான். அவர் எல்லோர் மீதும் அன்பாக செயற்பட்டார்.

உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். அவருக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளது. என்னிடமிருந்து பல புத்தகங்கள் வாங்கிப் படித்துள்ளார்.

அவரது அறையில் புத்தக மேசை ஒன்றையும் வைத்திருந்தார். அந்த மேசையிலே அனைத்து மதம் சம்பந்தமான புத்தகங்களையும் காணக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் பகவத்கீதை, அல் குர் ஆன், பைபிள், திருக்குறள், பஞ்சாங்கம் போன்ற பலவிதமான புத்தகங்களும் இருக்கும்.

அவருக்கும் அம்மா இருப்பதாக அடிக்கடி கூறுவார். அம்மாவை மாதாந்தம் கண்டிக்கு கிளினிக் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அதற்காகவே தான் சென்று வருவாதகவும் என்னிடம் கூறிச் செல்வார். முகவரி கூறவில்லை மட்டக்களப்பில் இருப்பதாகவே என்னிடம் கூறியிருந்தார்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வைகாசி விசாகப் பொங்கல் விழா எங்களுடைய ஆலயத்தில் இடம்பெற்றது.

அன்று இங்கேயே இருந்தார். 21ஆம் திகதி காலையில் அம்மாவுக்கு கிளினிக் உள்ளது கண்டிக்கு போக வேண்டும் எனக் கூறிச் சென்றார். 24 ஆம் திகதி மாலை 3 மணியளவிலே வந்து சேர்ந்தார்.

மாஸ்டர் என்றே அவரை எல்லோரும் அழைப்பார்கள். சிவா மாஸ்டர் என்ற பெயரின் மூலமாகவே அவர் மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தார்.

அனைவரிடமும் நன்றாகப் பழகுவார். ஆலயத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் சரி யாரும் அவரை கேட்காமல் சென்றதேயில்லை. அந்தளவிற்கு மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவார்” என்றார்.

பஞ்சாமிர்த்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றனவல்லவா? எனக் கேட்டபோது, ‘அது பொய் என்றே நான் குறிப்பிடுகின்றேன்.

ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி நான் மதிய பூசையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன்.

இங்கு நான் இருந்த நேரத்தில் எந்த சோதனை நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை.

மாலை நான்கு மணிக்குப் பின்னரே ஆலய நிர்வாக சபையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எவரும் எனக்கு அறிவிக்கவில்லை.

அந்த சோதனை நடவடிக்கையின் போது கருத்தடை மாத்திரைகள் மூன்று அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்கள்.

இருந்தும் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் பொலிஸார் அவரை கைதுசெய்ய வந்த வேளை அனைத்து இடங்களையும் சோதனையிட்டுள்ளனர்.

அந்த சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்படாத மாத்திரைகள் இப்போது எங்கிருந்து வந்திருக்கும் என்பதை எண்ணும் போதே எனக்கு சந்தேகம் எழுகின்றது. சில வேளைகளில் ஒரு சிலரின் சோடிக்கப்பட்ட நாடகமாகக் கூட இருக்கலாம்” என்றார்.

“அத்துடன் தொழுகை நடத்தியதாகவும், மாட்டிறைச்சி சமைத்ததாகவும் கூட கூறப்படுகின்றது. நடந்தது எல்லாமே அம்பாளுக்குதான் தெரியும்.

அவர் போய் சிறையில் இருக்கின்றார் நான் இன்று தலை குனிந்த நிலையில் இருக்கின்றேன். எங்களது வீடு மரண வீடு போன்றே இருக்கின்றது.

பிள்ளைகளும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கின்றனர். நிர்வாகம் இது தொடர்பில் என்னிடம் எதுவும் பேசவில்லை.

இவ்விடயத்தில் ஏதோ பின்னணி இருக்கின்றது என்றே நான் எண்ணுகின்றேன்” என்றும் குருக்கள் கூறினார்.

ஆலய நிர்வாக சபை தலைவர் இராசலிங்கம் குறிப்பிடுகையில், 

“ அந்த நபர் இங்கு வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். நன்றாக வேலை செய்வார். எந்த விதமான குற்றங்களும் சொல்லக் கூடிய அளவிற்கு அவர் நடந்து கொள்ளவில்லை. நாங்கள் அவதானித்த வகையில் நன்றாக படித்தவர் போன்றே செயற்படுவார்.

சில நாட்களுக்கு முன்னர் அவர் தொடர்பில் முகநூலில் வெளியான தகவல்களுக்கு அமையவே இவர் மீது சி.ஐ.டி யினருக்கு சந்தேகம் எழுந்து அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தனது தாயைப் பார்ப்பதற்காக ஊருக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளான்.

நான்கு நாட்களாக தனது ஊரில் இருந்த அவர் 24ஆம் திகதி வெள்ளிக்கழமை பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையிலும் ஈடுபட்டுள்ளார். இதை அவதானித்த சி.ஐ.டி யினர் மீண்டும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி அவர் மீண்டும் கிளிவெட்டியை வந்தடைந்துள்ளார்.

நான் எனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மாலை 7 மணியளவில் ஆலயத்திற்குள் சென்றேன். நான் அங்கு சென்ற போது சி.ஐ.டி யினர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆலயத்திற்குள் நின்றனர்.

என்னை அவர்கள் அழைத்து நாங்கள் ஆலயத்தை சோதனையிடப் போகின்றோம் நீங்களும் எங்களுடன் இருங்கள் என்று கூறினார்கள். அவ்வாறு அவர்கள் சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் அவர் அறையிலிருந்து அல் குர் ஆன் மற்றும் முஸ்லிம்கள் அணியும் தொப்பியும் அவர்களால் கைப்பற்றப்பட்டது.

இவற்றையெல்லாம் எதற்காக வைத்திருக்கின்றாய் நீ முஸ்லிமா என பொலிஸார் அவரை கேட்டபோது அவர் இல்லை என மறுப்புத் தெரிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்திலே அவரை பின்தொடர்ந்த சி.ஐ.டி யினர் எதற்காக நீ இன்று பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தாய் என்ற கேள்வியை கேட்டபோதே அவன் அவர்களிடம் மாட்டிக் கொண்டான்.

பின்னர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரின் விசாரணைகளிலே அவன் முஸ்லிம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளான்.

அது வரையில் அவர் முஸ்லிம்தான் என்பது எங்களுக்குத் தெரியாது. எனக்கு அதை எவ்வாறு சொல்வதென்று தெரியவில்லை அதாவது தடுக்கி விழுந்தால் கூட முருகா அம்மாளே தாயே என்றே அழைப்பார்.

அவர் முஸ்லிம் என்பதற்கான அடையாளம் அவரிடம் எள்ளளவும் இல்லை. அவ்வளவு அழகாக திருகோணமலை மக்கள் பேசுவது போன்றே பேசுவார்.

இப்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவராகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்துள்ளது.

காரணம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயம் எமது நிர்வாக சபை இளைஞர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் ஆலய சமையலறையிலிருந்து கருத்தடை மாத்திரை என சந்தேகிக்கப்படும் மாத்திரைகள் அடங்கிய மூன்று அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவே அவர் மீது அவ்வாறான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

சிறந்த முறையில் சிங்களம் பேசக்கூடியவர் எழுதக்கூடியவர். அவர் கைது செய்யப்பட அன்று அவரது அறையில் இருந்து எடுக்கப்பட்ட நாட்குறிப்பில் முழுவதுமாக சிங்களத்திலேயே எழுதியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் மூன்று மொழிகளும் சரளமாகத் தெரிந்தவர். பஞ்சாமிர்தத்தில் மாத்திரை கலந்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. அது எந்தளவிற்கு உண்மை என்பது எங்களுக்குத் தெரியாது.

அதை நாங்கள் காணவில்லை. அவ்வாறு நடந்ததாக அறிந்திருந்தால் நாங்கள் அதை தடுத்திருப்போம்.

அவ்வாறு நடந்திருக்கலாம் என பொது மக்களே சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆலய பிரதம குரு சிவானந்த ஐயாவுக்கு இது தொடர்பில் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர் இவ்வாறு நடக்க விட்டிருக்கமாட்டார்” என்றார்.

மூதூர் இந்து குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ பாஸ்கரன் குருக்கள் குறிப்பிடுகையில்,

“ ஆலய பிரதம குரு சமய ரீதியாக பல பிழைகளை விட்டுள்ளார். அவர் எங்களது சங்கத்திலும் இல்லை.

இவ்வாறு ஒருவர் தொடர்பில் எந்த விதமான தகவல்களையும் பெற்றுக் கொள்ளாது ஒருவருக்கு ஆலயத்தில் வேலை வழங்கியது முதவாவது பிழையாகும். அந்த வகையில் நிர்வாகம் தனது கடமையைச் செய்ய தவறியுள்ளது.

இரண்டு வருடங்களாக ஒரு மாற்று மதத்தவரை தன்னுடன் உதவியாளராக வைத்துக் கொண்ட செயற்பாடானது எங்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

பொலிஸாரினால் அவரது தொலைபேசியை சோதனைக்குட்படுத்திய வேளை தொலைபேசியிலிருந்து ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் அந்த தொலைபேசியில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் விசாரித்த போது அவர் முஸ்லிம் என்று தாம் அறிந்திருந்ததாகவே தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆலய குருவும் ஆலய நிர்வாக சபையினருமே இதை மறுக்கின்றதன் மர்மம் புரியவில்லை” என்றார்.

இவ்வாறான கருத்துக்களுக்கு மத்தியில் மூதூர் பிரதேச வாசிகள் பதற்றத்துடன் இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் நடந்த உண்மைகள் தீரவிசாரிக்கப்பட்டு தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

மேலும், குறித்த வழக்கு விசாரணை கடந்த மூன்றாம் திகதி மூதூர் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த வழக்கானது எதிர்வரும் பத்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் சந்தேக நபர் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு பதற்றமான சூழல் மாற்றப்பட்டு பிரதேச அமைதி மீண்டும் திரும்புமா என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக உள்ளது?

Share.
Leave A Reply

Exit mobile version