உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவரது பெண் குழந்தை டுவிங்கிள் சர்மா (வயது 3) கடந்த மே மாதம் 31ம் தேதி மாயமானது.

இதையடுத்து குழந்தையின் தாய், தந்தை இருவரும் அருகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தேடியுள்ளனர். கிடைக்கவில்லை. டப்பால் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ரம்ஜான் அன்று பன்வாரிலால் வீட்டின் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களிடம் கூறியுள்ளனர்.

பின்னர் குப்பை தொட்டியினை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் காணாமல் போன டுவிங்கிளின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் வருவதற்குள், தகவலறிந்த டுவிங்கிளின் உறவினர்கள் குழந்தையின் சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் வந்தவுடன் குழந்தையின் உறவினர்களுடன் பேசி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் குழந்தை கொல்லப்பட்ட விதம் தான் கொடூரமானது. குழந்தையின் ஒரு பக்க கண் தோண்டப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் கொன்றுள்ளனர்.

இதற்கான காரணம் என்ன என்பதை போலீசார் விசாரித்தபோது, பன்வாரிலால் ஒருவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.30 ஆயிரம் திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால், ரூ.10 ஆயிரம் மீதமுள்ள பணத்தை தராத காரணத்தினால் அவரது குழந்தையை கடத்தி கொடூரமாக கொன்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கொலையில் தொடர்புடைய சாகித், அஸ்லாம் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அலிகார் வழக்கறிஞர்கள் பார்கவுன்சில் தலைவர் அனோப் கவ்சிக் கூறியதாவது:-

அலிகாரில் டுவிங்கிள் எனும் 3 வயது சிறுமி பண விவகாரத்தில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் சார்பாக அலிகார் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகி வாதாடமாட்டார்கள். வேறு பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடவும் அனுமதிக்கபட மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version