சென்னை சேப்பாக்கத்தில் தங்கிய காதல் ஜோடி, சைனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலி இறந்துவிட, காதலன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மியான் சாஹிப் தெருவில் உள்ள விடுதியில், காதல் ஜோடி அறை எடுத்துத் தங்கியது.

அந்த அறை இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், விடுதியின் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால், எந்தவித பதிலும் இல்லை. இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மேலாளர் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீஸார் விடுதிக்குச் சென்றனர்.

இதையடுத்து, அவர்களை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், காதலி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ வடசென்னையைச் சேர்ந்த  சுமர் சிங் (23), காஜல் (21) ஆகிய இருவரும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

காஜல், கல்லூரியில் படித்துவந்தார். சுமர் சிங், அந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறார்.

சுமர் சிங்கும் காஜலும் சில ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர். இந்த நிலையில், காஜலுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதனால், காதல் ஜோடி மனவேதனையடைந்தது. இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தனர்.

அதன்படி, நேற்று இருவரும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இரவில் சைனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் காஜல் இறந்துவிட்டார். சுமர்சிங் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

சுமர் சிங்கிடம் விசாரித்தபோது, ”நானும் காஜலும் உயிருக்கு உயிராகக் காதலித்தோம். ஆனால், எங்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது என்றுதான் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்” என்று கூறினார்.

ஆனால், காஜலின் உறவினர்கள், காஜலை சுமர்சிங் கடத்திச் சென்றதாகக் குற்றம் சுமத்தினர். இதனால், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது, இருவரும் சேர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனால், தற்கொலை முடிவை இருவரும் சேர்ந்துதான் எடுத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். சுமர்சிங்கிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே அறையில் என்ன நடந்தது என்று தெரியவரும்” என்றார்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், 250-க்கும் மேற்பட்ட விடுதிகள், மேன்ஷன்கள் உள்ளன.

இதனால் வெளியூர்களிலிருந்து வருபவர்கள், மேன்சன்களில் தங்கி தவறான முடிவுகளை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தந்த்ரா மாஸ்டர் ஜெகத் பிராங்கிளின், தன்னுடைய குடும்பத்தினரோடு சரண்யா என்ற பெண்ணோடு திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கினார்.

அனைவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில், ஜெகத் பிராங்கிளின் இறந்துவிட்டார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் தற்கொலை சம்பவங்கள் நடப்பதால், போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இதனால்,  சம்பந்தப்பட்ட மேன்ஷன், விடுதிகளின் நிர்வாகத்தினருடன் இணைந்து, தற்கொலைச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சேப்பாக்கத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், காதலி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலி காஜலின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காதலன் சுமர்சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமலிருக்க, போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version