ஏ.சி. இயந்திரத்துக்குள் 3 மாத காலமாக குடியிருந்த சாரைப் பாம்பை, வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர்.
இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை; புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் (11ம் தேதி) இரவு தனது வீட்டு படுக்கை அறையில் உள்ள ஏ.சி-யை இயக்கியுள்ளார். அப்போது, ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்துள்ளது.
நேற்று (12ம் தேதி) காலை ஏழுமலை வீட்டுக்கு வந்த மெக்கானிக், படுக்கை அறைக்குள் இருந்த ஏ.சி. இயந்திரத்தை கழற்றி பார்த்தபோது, உள்ளே 2 பாம்பு தோல்கள் இருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழுதுபார்த்தவர், ஏ.சி.யின் கீழ் பகுதியில் ஒளி அடித்து பார்த்துள்ளார். அங்கு, மறைவான பகுதியில் ஒரு பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணி நேர போராட்டத்தின் முடிவில், ஏ.சி.க்குள் பதுங்கி இருந்த 2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு பிடிபட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “ஏ.சி.யின் வெளிப்புறம் உள்ள பகுதியில் இயந்திரத்துக்கு வரும் குழாய் சரியாக அடைக்காமல் விடப்பட்டுள்ளது.
அந்த வழியாக வந்த பாம்பு, ஏ.சி.க்குள் புகுந்துள்ளது. அத்துடன், சுவற்றின் துளைக்கு அருகிலேயே மரம் ஒன்று உள்ளது.
இது, பாம்பு வெளியில் சென்று இறையெடுத்துவிட்டு மீண்டும் இயந்திரத்துக்குள் வந்து தங்குவதற்கு வசதியாக அமைந்து விட்டது. ஏ.சி. இயந்திரத்துக்குள் 2 முறை பாம்பு தோல் உரித்துள்ளது.
எனவே, இந்த பாம்பு குறைந்த பட்சம் 3 மாத காலம் ஏ.சி.க்குள் இருந்திருக்கலாம்” என தெரிவித்தனர். பிடிபட்ட பாம்பை, பத்திரமாக கொண்டுசென்று வனப்பகுதியில் விட்டனர்.