சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்ட அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் கொழும்பு, கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும், குறித்த கொடூர தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த அஹமட் மில்ஹான் என அறியப்படும் 30 வயதான ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அத்துடன் குறித்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மிக அவசியமான, பயங்கரவாதி சஹ்ரானுக்கு மிக நெருக்கமான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் அனுராதபுர மாவட்ட தலைவராக கருதப்படும் அபுசாலி அபூபக்கர் உள்ளிட்ட மேலும் நால்வரையும் , அஹமட் மில்ஹானுடன் சேர்த்து குற்றப் புலனாய்வுப் பிரிவு சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து கைதுசெய்து இலங்கைக்கு அழைத்து வந்தது.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் சவுதியின் ஜித்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல்.282 எனும் விமானத்திலேயே இவர்கள் சி.ஐ.டி.யினரால் அழைத்து வரப்ப்ட்டனர்.
இதனிடையே 21/4 அன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்கள் தொடர்பில், பிரதான விசாரணைகள் வெற்றிகரமாக சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி அவ்விசாரணைகளில் இன்று நண்பகல் வரை 102 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.