ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக, விடியோ ஆதாரமொன்றையும் அந்த நாடு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, வாஷிங்டனிலுள்ள அமைச்சரக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓமன் வளைகுடா பகுதியில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோம்.
அந்த ஆய்வுகளில், எண்ணெய்க் கப்பல் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஈரான்தான் ஏற்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
அந்தத் தாக்குதல்களை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள், அந்தத் தாக்குதல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வேண்டிய நிபுணத்துவம், உளவுத் துறை தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வளவு துல்லியமான தாக்குதலை நடத்துவதற்குரிய சக்தியும், திறனும் ஈரானைத் தவிர அந்தப் பகுதியில் செயல்படும் வேறு எந்த அமைப்புக்கும் கிடையாது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அண்மைக் காலமாக ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்றார் மைக்கேல் பாம்பேயோ.
விடியோ ஆதாரம்: இதற்கிடையே, ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியது ஈரான்தான் என்பதை நிரூபிப்பதற்காக விடியோ ஆதாரமொன்றை அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அந்த கருப்பு வெள்ளை விடியோவில், தாக்குதலுக்கான எண்ணெக் கப்பலின் பக்கவாட்டிலிருந்து வெடிக்காத கடல் கண்ணிவெடியை ஈரான் ராணுவத்தினர் நீக்கும் காட்சி இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் அருகே கடல் பகுதியில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரு கப்பல்கள் உள்பட 4 எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் கடந்த மாதம் தாக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உலகின் ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா மிகப் பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்வதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
தனது பொருளாதார, ராணுவ வலிமையைப் பயன்படுத்தி அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேசக் கட்டுப்பாடுகளை மீறி வருகிறது.
அந்த நாட்டின் இந்த முரட்டுத்தனமான அணுகுமுறையால் வளைகுடா பிராந்தியம் மட்டுமன்றி உலகின் ஸ்திரத்தன்மைக்கே கடும் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றார் அவர்.
அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஈரான் அச்சுறுத்தல்
அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஈரான் அச்சுறுத்தல் விடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் மேற்கொண்டுள்ள பதிவுகளில், “அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஈரான் விடுத்து வரும் அச்சுறுத்தலை உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது.
அந்த நாட்டை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே முயன்றாலும், இப்போதைய நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் தயாராக இல்லை; அமெரிக்காவும் அதற்குத் தயாராக இல்லை’ என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.