சென்னை தேனாம்பேட்டையில் திருடர்களுக்குப் பயந்து பழைய துணியில் 11 லட்சம் ரூபாய் வைத்திருந்தார் சுசிலா.

அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பழைய துணிகளை வாங்க வந்த பெண்ணிடம் சுசிலாவின் மகன், பணத்தோடு துணிகளைக் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த சுசிலா பணத்தைக் காணாமல் பரிதவித்தார். அந்தப் பணத்தை போலீஸார் மீட்டு திரும்ப சுசிலாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை, கார்ப்பரேஷன் காலனி ‘ஏ’ பிளாக்கில் குடியிருப்பவர் ரவி.

அயர்னிங் கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சுசிலா. வீட்டு வேலை செய்துவருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 13-ம் தேதி காலை வழக்கம்போல ரவியும், சுசிலாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் பிள்ளைகள் மட்டும் இருந்தனர்.

இந்தச் சமயத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரவியின் வீட்டுக்கு வந்தார். அவர், ரவியின் மகனிடம் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் ‘அம்மா டிரஸ்ட்’ என்ற பெயரில் அநாதை ஆசிரமம் நடத்தி வருவதாகவும் அங்குள்ளவர்களுக்கு பழைய துணிகள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

dress_2_12542

இதனால் மனமிறங்கிய ரவியின் மகன், பீரோவில் இருந்த பழைய துணிகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.

அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அந்தப் பெண் சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சுசிலாவிடம் ரவியின் மகன் விவரத்தைக் கூறினார்.

உடனே அவசர அவசரமாக பீரோவை சுசிலா பார்த்தார். அவர் துணியில் வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் இல்லை. பழைய துணியோடு 11 லட்சம் ரூபாய் போய்விட்டதால் சுசிலா மகனைத் திட்டினார்.

இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுசிலா புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தினார்.

சுசிலாவின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. கேமரா பதிவுகளை போலீஸார் முதலில் ஆய்வு செய்தனர். அப்போது பழைய துணிகளை வாங்கிய பெண், ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

உடனடியாக அந்த ஆட்டோவின் பதிவு எண்ணைக் கண்டறிந்த போலீஸார் அதுதொடர்பாக விசாரித்தனர்.

அப்போது அந்த ஆட்டோ, செங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் மணிகண்டனைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் துணி வாங்கிச் சென்ற பெண் செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி எனத் தெரியவந்தது.

அவரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் மகாலட்சுமியைப் பிடித்தனர். அவரிடமிருந்து 11 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் மகாலட்சுமியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகார் கொடுத்த சுசிலா போலீஸாரிடம், சார், நான் வீடு கட்ட குருவி சேர்த்தாற் போல கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சேர்த்து வைத்திருந்தேன்.

அந்தப் பணம் திருட்டு போய்விடக்கூடாது என்பதற்காக பழைய துணிகளில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன்.

ஆனால், என் மகன் பழைய துணியில் பணம் இருப்பது தெரியாமல் அந்தத் துணிகளை ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டான். வாங்கிச் சென்றவர்கள் திரும்ப வந்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

ஆனால், அவர்கள் வரவில்லை. எனவே, பணத்தை மீட்டுத் தாருங்கள்” என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

மகாலட்சுமி போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில், “சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் பழைய துணிகளை ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி வாங்குவோம்.

அந்தத் துணிகளை செங்குன்றத்தில் உள்ள அரவிந்தன் என்பவரிடம் குடோனில் கொடுப்பேன். பழைய துணிகளைக் கொடுத்தால் எனக்கு கமிஷனாக அவர் பணம் கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.

11 லட்சம் ரூபாய் திரும்ப வீட்டுக்கு வந்த அதிர்ஷ்டத்தில் ரவியும் சுசிலாவும் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version