– மஹாசங்கத்தினர் யதார்த்தத்தை புரிந்துகொண்டதனால் மீளப்பொறுப்பேற்க முடிவு
– எம்மவரே எங்களை விமர்சிக்கின்றனர்

அமைச்சுப் பதவிகளை தற்காலிகமாக இராஜினாமாச் செய்த ஒன்பது பேரில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ. ஹலீம். கபீர் ஹாஷிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கமுடிவு செய்துள்ளனர்.

மஹாசங்கத்தினர்கள் எமது நிலைப்பாட்டை புரிந்து கொண்டதன் காரணமாகவே நாம்  அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்குத் தீர்மானித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஹலீம் கூறினார்.

“முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதியே நாம் கூட்டாக பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தோம் ஆனால் இன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு குழப்பகரமான நிலை தோன்றியிருக்கும் நிலையில் முஸ்லிம்  அரசியல்வாதிகள் சிலரும் எம்மை விமர்சித்து வருவதன் காரணமாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து அந்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியபோதிலும், முஸ்லிம் தலைவர்களின் கூட்டுத் தீர்மானத்திற்கு மதிப்பளித்த தமக்குச் சமூகத்திலிருந்து உரிய வரவேற்பும் மரியாதையும் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கடந்த வியாழக்கிழமை மாலை ஜம் இய்யத்துல் உலமா சபையினரின்  தலைமையில் முஸ்லிம் அரசியல்  தலைவர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது, பதவி விலகிய அமைச்சர்கள் தொடர்பில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும்    முன்வைத்தது பற்றிக் கவலை  தெரிவித்து அவர் இந்தப் போக்குத் தமக்குப் பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்நிலை தொடருமாயின் தமக்குச் சிங்கள மக்களின் வாக்குகளும் இல்லாமல் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இல்லாமல் அரசியலில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்வது பற்றித் தங்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.

நாம் இருவரும் விரைவில் தத்தம் அமைச்சுப் பொறுப்புகளை மீள ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. பௌத்த மஹா சங்கத்தினரின் ஆலோசனைக் கேற்ப நடந்துகொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.

தங்களது இந்த முடிவு தொடர்பாக மேலும் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் கூறியதாவது:

முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகள் இராஜினாமா செய்ததன் பின் மஹா சங்கத்தினர் மட்டுமன்றி நாட்டிலுள்ள அநேகமான தரப்பினர் மீண்டும் பதவியை ஏற்கவேண்டுமென இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்களது இராஜினாமா சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்த இடமுண்டு.

இதனால் நாட்டுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படலாம். இதில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம் , நான் உட்பட இருவரும் கணிசமானளவு சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்குகளைக் கொண்டு இருப்பவர்கள்.

எனவே இது தொடர்பில் எங்களை ஆதரித்த சிங்கள ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து மீண்டும் பதவியைப் பொறுப்பேற்று நாட்டுக்கு தம் பிரதேசத்துக்கும் சேவைகள் செய்ய வேண்டும் எனக் கோரி அதிகளவு அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குற்றம் சாட்டப்படாத அமைச்சர் தமது பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்று மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்கள்.

தற்போது முஸ்லிம்கள் மீதான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதற்கு தலைமை தாங்குவதற்கும் பதவி துறந்த குற்றம் சாட்டப்படாத முஸ்லிம் அமைச்சர்கள்கள் மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்ற கருத்து பலமாகப் பேசப்பட்டு வருகிறது.

மத்ரஸா கல்வி விதி முறை, விவாகம், விவாகரத்து சட்டம், ஹஜ் விவகாரம் தொடர்பாக சட்ட மூலம் உட்பட பல விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இச் சந்தர்ப்பத்தில் எங்களுடைய சமுதாயத்திலிருந்து எங்களை விமர்சிப்பதிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதிலும் சிலர் ஈடுபடுவது எமக்கு பெரும் மனவேதனையைத் தருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் கூடிய கூட்டத்தில் நாங்கள் எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவே அனைவரும் பதவியைத் துறந்தோம்.

ஆனால் பாராளுமன்ற தெரிவுக் குழுவிலும் சிங்களப் பத்திரிகையிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்புரை செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று பிந்திக்கிடைத்த செய்திகளின்படி,மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

kasimஅடுத்த வாரம் இந்தக் குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version