ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியை சேர்ந்தவர் சுலோச்னா. இவரது மகன் பவன் (வயது 1½). சம்பவத்தன்று குழந்தை பவன் வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டு இருந்தது.
அப்போது அந்த பகுதியில் டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த டிராக்டரில் சாவியை வைத்து விட்டு அதன் உரிமையாளர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரபாகர் டிராக்டரில் ஏறி விளையாடினான். அப்போது அவன் சாவி மூலம் டிராக்டரை இயக்கினான். இதனால் டிராக்டர் பெரும் சத்தத்துடன் கிளம்பியது.
இதைப் பார்த்த சுலோச்னா ஓடி வந்து டிராக்டரில் இருந்த பிரபாகரை கீழே இறக்கி காப்பாற்றினார்.
ஆனால் வேகமாக தறிகெட்டு ஓடிய டிராக்டர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுலோச்னாவின் ஒன்றரை வயது மகன் பவன் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பவன் பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.
இதை பார்த்த சுலோச்னா மயங்கி விழுந்தார். வேறு ஒருவரின் குழந்தையை காப்பாற்றிய தாய்க்கு நேர்ந்த சோகம் பார்ப்போர் நெஞ்சை உருக்கியது.
இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் மீது பொலிஸார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.