மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது,
மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் 50 வருட சிறைதண்டனையும் , ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலே மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
குறித்த கைதி சுகயீனம் அடைந்திருந்ததுடன் , அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்தார். 44 வயதுடைய இவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையியே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் , உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.