இலங்கைக்கும், உலகத்துக்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல்  காணப்படும் நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக ஒரு முஸ்லிம் நபரை ஏன் நியமித்தார்கள்? தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா என சபையில் கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் நெருக்கத்தின் காரணமாகவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தினார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டு நாட்கள் விவாதம் நேற்று (07) சபையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இந்த காரணிகளை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

sarath-fonsekaஇன்று நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாது இராஜாங்க அமைச்சர் ஒருவருடன் மட்டுமே அரசாங்கம் பயணிக்கின்றது. அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. இது பாரிய பிரச்சினை.

இவையெல்லாம் அரசாங்கத்தின் குறைபாடாகும். சிறுபிள்ளைகள் தீர்மானம் எடுப்பதை போல் அரசியல் தீர்மானம் எடுக்க முடியாது.

அத்துடன் இன்று வீரர்கள் போன்றும் பௌத்தர்கள் போன்றும் பேசும் நபர்கள் அன்று பிரபாகரன் இருந்த காலத்தில் வெளியில் வரவில்லை.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறினார்.

அதற்கு முதலில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும். அதேபோல் தகுதியான நபர்களை பதவிக்கு நியமிப்பதாகக் கூறி இருவரை நியமித்தார்.

ஒருவர் தேசிய புலனாய்வு அதிகாரி, இன்னொருவர் அரச புலனாய்வு அதிகாரி. இந்த இருவரும் பொறுப்புக்கு தகுதி இல்லாத நபர்கள்.

இன்று முழு உலகத்திலும், இலங்கையிலும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் அரச புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்து எவ்வாறு சேவையை முன்னெடுக்க முடியும்.

ஆனால் இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் என்ற காரணத்தினால் அவர்களை இந்தப் பதவிகளுக்கு நியமித்துள்ளார்.

தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா? அது அவர்களின் பொறுப்புக்களை சரியாக கையாள முடியாத நிலைமைக்கு கொண்டு செல்லும்.

அதேபோல் இப்போது முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்துள்ள நிலையில், அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது.

அவரது குடும்பம், வதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் நியமிக்க இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார் .

Share.
Leave A Reply

Exit mobile version