யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினரான இருவர் வீட்டின் பாதுகாப்புக் கருதி வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டுச் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து மேற்படி வீட்டுக் கிணற்றடியில் வாளியுடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை எடுத்துக் கட்டி உள்ளிறங்கிய கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இளைஞன் மற்றும் நடுத்தர வயதுடையவரை வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.
அதிகாலை ஒரு மணி முதல் 02.30 மணி வரை குறித்த வீட்டில் தங்கிநின்ற கொள்ளையர்கள் வீட்டின் பாதுகாப்புக்காக நின்றிருந்த இருவர் மீதும் தாலிக்கொடி எங்கே? எனக் கேட்டும் வேறு சில கேள்விகள் கேட்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அயல் வீட்டுக்காரர் தொடர்பில் கொள்ளையனில் ஒருவன் வீட்டில் நின்றவர்களிடம் விசாரித்துள்ளான்.
அப்போது “இரண்டு பெடியன்கள் தானே இருக்கிறார்கள் ” எனக் கூறியவாறே கொள்ளையர்களில் ஒருவன் அந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன்போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி, கைச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட தங்கநகைகளையும், ஒருதொகை வெளிநாட்டுப் பணத்தையும், பெறுமதி வாய்ந்த மூன்று நவீன கைத்தொலைபேசிகளையும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் “இப்போது சத்தம் போடக் கூடாது, வெளியே வரக் கூடாது” எனத் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சுமார் ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பலே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கொள்ளையிட வந்தவர்கள் கறுப்புத் துணிகளால் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.