ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு குறி தவறியதால் 21 வயதான தேரர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (19) மு.ப. 11.00 மணியளவில், ஹுங்கம, ஹாதாகல, தெணிய வீதி பகுதியில் பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், குறித்த நபர் அதனை பொருட்படுத்தாது தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபரை பின்தொடர்ந்த பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்த வேளையில் இடம்பெற்ற கைகலப்பில், பொலிஸாரின் கையிலிருந்த துப்பாக்கி தற்செயலாக செயற்பட்டதில், அருகில் சென்ற வேனொன்றில் பயணித்த தேரரை தாக்கியுள்ளது.

இதனையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த தேரர் அகுணுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

  Hungama-Thero-Shot-Dead-Police-Misfire-1

 

குறித்த தேரர், 21 வயதான, ஹாதாகல பிரதேச விகாரையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்டவர், ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுபவர் என, இதற்கு முன்னர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

தங்காலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரத்னவீர எல் அடஸ்சூரியவின் கண்காணிப்பின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version