முஸ்லிம்களின் பள்ளிவாசலில் இந்து மத ஜோடிக்கு இந்துமத முறைப்படி திருமணம் நடைபெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில் செயற்பட்டு வருகிறது சேரவல்லி முஸ்லிம் ஜமாத் கமிட்டி. சேரவல்லி ஜமாத்துக்கு கடந்த நவம்பரில் ஒரு இந்துப் பெண்ணிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.

அதில், கணவரை இழந்த “பிந்து” என்ற பெண் ஒருவர், தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க உதவி தேவைப்படுவதாகவும், அதற்கு ஜமாத் கமிட்டி உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

 ddef02b421ade0f285ef76454a63de3a

இதனையடுத்து, பிந்துவின் மகள் அஞ்சுவுக்கு மசூதியிலேயே திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டு, திருமணத்தை ஜனவரி 19ம் திகதி இன்று நடத்த திட்டமிட்டது ஜமாத்.

திட்டமிட்டபடி அஞ்சுவுக்கும், சரத் சசி என்பவருக்கும் ஜமாத் கமிட்டியின் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது.

பள்ளிவாசலில் நடைபெற்றாலும், இந்து முறைப்படியே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக, பிந்துவின் மகள் அஞ்சுவுக்கு பத்து சவரன் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபாய் பணம் பரிசாகக் கொடுத்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளனர் இஸ்லாமியர்கள்.

தங்களிடம் உதவி கோரிய பிந்துவுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவரது மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்திருக்கும் இஸ்லாமியர்களை நாடு முழுவதுமுள்ள மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மணமக்களுக்கும், திருமணத்தை நடத்தி வைத்து ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இஸ்லாமிய பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சேரவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி அஞ்சு மற்றும் சரத் ஆகியோரின் திருமணத்தை இந்து மத முறைப்படி நடத்தி வைத்துள்ளது.

புதுமணத் தம்பதிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், மசூதி நிர்வாகத்தினருக்கும், சேரவல்லி மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version