சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல.

அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை ஆகும்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு ஆதரவானதெனவும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இப்போது தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக, முன்னெப்பொழுதையும் விட, மிகுந்த முனைப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றது என்ற பொய்களின் சாயம், வெளுத்துக் காலம் கடந்து விட்டது.

ஆனாலும், இன்னமும் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லும் செயலைப் பலரும் தொடர்ந்து செய்கிறார்கள்.

சர்வதேச ரீதியாக, மனித உரிமைகள் பற்றி எவ்வளவுதான் பேசப்பட்ட போதும், நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையான உறவு என்பது, அரசுக்கும் அரசுக்கும் இடையேயான உறவே ஆகும்.

அதில், மக்களின் நியாயமான கோரிக்கைகள், அதிகமாக இரண்டாம் பட்சமானதாக்கப்பட்டு விடும். இந்த உண்மை, இப்போதாவது விளங்கியிருக்க வேண்டும்.

சுயநிர்ணய உரிமைக்கு, சர்வதேச சமூகம் எப்போதும் துணைபுரிவதில்லை. அது, தன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு, அதற்கு ஆதரவு போன்று காட்டிக்கொள்ளும்.

இறுதியில், எப்போதும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே, சர்வதேச சமூகம் எடுக்கும். இந்தப் படிப்பினையையே, உலக வரலாறு கற்றுத்தந்துள்ளது. இங்கு சில கேள்விகளை நாம், எம்மிடமே கேட்க வேண்டும்.

எம்மில் எத்தனை பேர், தமிழர் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்? 

தமிழர் போல், உலககெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களோடு, நாம் எம்மைத் தொடர்புபடுத்தி இருக்கின்றோமா?

ஆண்ட பரம்பரைக் கனவுகளிலிருந்து நாம், இன்னமும் விடுபடவில்லை. எமது தொன்மைகளின் பெருமைகளிலும் மூழ்கியிருக்கும் வரை, எமக்கு விடிவில்லை.

உரிமைகளுக்கான போராட்டம், விடுதலைக்கான போராட்டமாக வளர்ந்து, இப்போது இருப்புக்கே போராட வேண்டிய நிலை உள்ளது.

இதற்கான பழியை, எவர் மீதும் சுமத்துவது சரியாகாது. தமிழ்ச் சமூகம், தனது விடுதலைக்கான பொறுப்பை, முற்றிலும் தன் தோள்களில் சுமக்காதவரை, தவறுகள் தவிர்க்க இயலாதவை.

image_276e51358fஇன்று, உலகெங்கும் பரந்து விரிந்துள்ள விடுதலைப் போராட்டங்களில், எவற்றை தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள்? ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் நிறைந்திருக்கின்ற உலக அரசியல் அரங்கில், தமிழர்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள்? உலகில் மிகவும் நீண்டகாலமாகத் தொடருகின்ற பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில், தமிழர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்?

இந்த வினாக்கள் பிரதானமானவை. இருப்புக்காகப் போராடுகின்ற இனம், தனக்கான ஆதரவுத் தளத்தை, உலகளாவிய ரீதியில் தேடுவது தவிர்க்க இயலாதது. ஆனால், அந்த ஆதரவுத் தளத்தின் அடிப்படை, என்ன என்பது அனைத்திலும் பிரதானமானது.

விடுதலை என்பது, அறஞ்சார்ந்த ஒரு பிரச்சினை ஆகும். அது, யாருடைய அறம், எத்தகைய அறம் என்பன பற்றிய கேள்விகள், எப்போதுமே உள்ளன.

இதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், தமிழ்த் தேசியவாதம், தமிழ் மக்களை இன்னோர் அவலத்துக்குள் தள்ளிவிடும்.

தனது இருப்பையன்றி, வேறு எதைப்பற்றியும் அக்கறை செலுத்தாத மக்கள் மீது, நம்பிக்கை வைக்காத தமிழ்த் தேசியவாதத்தால் வேறெதையும் செய்ய இயலாது.

‘தமிழ் மக்களால், தனித்துநின்று போராட இயலாது; எனவே, அந்நிய அரசுகளின் ஆதரவு தேவை’ என்று விவாதிப்போர், பழைய பிழைகளையே திரும்பும் செய்யுமாறு தூண்டுகிற காரியத்தைச்  செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் சுயநலன் சார்ந்ததும்  மக்கள் விரோதமானதும் கூட.

அந்நிய ஆதரவு என்பது, ஒடுக்கப்பட்ட சமூகம், அந்நிய அரசுகளிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதல்ல. அரசுகளிடையே நடக்கிற காய்நகர்த்தல்களை ஒரு விடுதலை இயக்கமோ, ஒடுக்கப்பட்ட சமூகமோ தீர்மானிக்க முடியாது.

எங்கள் அனுபவங்களில் இருந்து, நாங்கள் கற்றவை அனைத்தையும் மறுக்கின்ற விதமாக, எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. இது குறித்து, நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின், அதற்கான பலன்களை அனுபவிக்கப்போவது, மக்களே அன்றி, வித்தை காட்டுகின்ற தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அல்ல.

Share.
Leave A Reply

Exit mobile version