நவீன கால வரலாற்றில் முதல் தடவையாக, ஈரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது.
அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் யுத்தம் வெகுவிரைவில் தொடங்கும்.
கவனிக்கவும்: எண்பதுகளில் ஈரான் – ஈராக் போர் நடந்த காலத்தில் கூட இந்தக் கொடி பறக்க விடப் படவில்லை.
ஈரானின் ஷியா மதப்பிரிவினரின் ஆன்மீகத் தலைநகரமான கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜம்கரன் (Jamkaran) மசூதியின் உச்சியில் இந்த செங்கொடி ஏற்றப் பட்டது.
தெஹ்ரான் அரசியல் தலைநகரமாக இருந்த போதிலும், ஷியாக்களின் உயர் மதத்தலைவராக கருதப்படும் ஆயத்துல்லா இந்தக் கோம் நகரில் இருந்து தான் ஆட்சிபரிபாலனத்தை கவனிப்பார்.
ஆகவே இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த சம்பவம் நவீன உலக வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இதில் உள்ள விசேஷம் என்ன?
இஸ்லாமிய ஷியா மதப் பிரிவினரை பொறுத்தவரையில் இந்த செங்கொடி ஒரு வரலாற்று துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறது.
ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் தடவையாக, அவர்களால் முதலாவது இமாம் என மதிக்கப்படும் ஹுசைன் தூக்கிப் பிடித்த கொடி அது.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஆண்ட கலீபாக்களால் இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவன் அலியும் சதி செய்து கொல்லப் பட்டனர்.
அவர்களது மகன் ஹுசைன் குருதியில் நனைந்த செங்கொடி ஏந்தி, ஆட்சியாளரின் அநீதிக்கும், அராஜகத்திற்கும் எதிராக நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடத்தினார்.
அதனால் இந்த செங்கொடி “ஹுசைனின் கொடி” என்றும் அழைக்கப் படுகின்றது. ஷியா இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம்.
இது ஒரு வகையில் நீதியை நிலைநாட்டும் போராட்டத்திற்கான அறைகூவலாகவும், கோழைத்தனமாக படுகொலை செய்த பகைவர்களின் பழி தீர்ப்பதற்கான மதக் கடமையாகவும் கருதப் படுகின்றது.
இன்றைய நிலைமையை புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
இஸ்லாமிய மதம் பரவிய ஆரம்ப காலங்களில், 632 ம் ஆண்டு இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய அகிலத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சினை எழுந்தது.
குறிப்பாக இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வன்முறையில் முடிந்தது. இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப் பதவிக்கு, அதாவது கலீபாவாக முகமதுவின் ஆருயிர் நண்பர் அபூபக்கர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இருப்பினும் முகமதுவின் மருமகன் அலியின் தலைமையை பின்பற்றிய குழுவினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர்கள் ஷியாத் அலி (அலியின் கட்சியினர்) என்று அழைக்கப் பட்டனர். அதிலிருந்து தான் பிற்காலத்தில் ஷியா மதப் பிரிவு உருவானது.
அலி ஆதரவுக் குழுவினர், இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவின் கணவர் என்ற வகையில், அவரது மருகனான அலிக்கு தான் தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
இருப்பினும், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்த அபூபக்கர் காலத்திலும், அதற்குப் பின்னர் ஒரு வருடம் கலீபாவாக இருந்து ஓர் அடிமையால் கொல்லப்பட்ட ஒமார் காலத்திலும், ஆட்சியாளர்களுக்கு அலியின் நிபந்தனையற்ற ஆதரவு இருந்து வந்தது.
உண்மையில் அலி தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கலீபாப் பதவிக்காக பொறுமையுடன் காத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும், ஒமாருக்கு அடுத்ததாக ஒத்மான் கலீபாவாக பதவியேற்றதற்கு பின்னரான காலத்தில் அலியின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்தனர்.
அதற்குக் காரணம், ஒத்மானின் எதேச்சாதிகாரம். அவர் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அரச பதவிகளை கொடுத்து அதிகாரத்தில் வைத்திருந்தார்.
அத்துடன் முன்பு இறைதூதர் முகமதுவை எதிர்த்துப் போரிட்ட குற்றத்திற்காக நாடுகடத்தப் பட்ட இனக்குழுக்களையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டார்.
இதனால் குடிமக்கள் கலகம் செய்தனர். கலீபாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல் ஒத்மானை பிடித்துக் கொன்று விட்டது. அன்று கலீபா ஒத்மானின் கொடுங்கோன்மைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் மத்தியில் ஷியாக்கள் இருந்தனர்.
இன்றைக்கும் ஷியா- இஸ்லாமிய மத நிறுவனமானது அடிமட்ட மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு இயங்கி வருகின்றது.
அதனால் தான், ஈரானில் 1979 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக மாற்ற முடிந்தது.
அன்று பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுத்த பொதுவுடைமைக்கான வர்க்கப் புரட்சியை, ஆயத்துல்லா கொமெய்னி தந்திரமாக சுவீகரித்து மத அடிப்படைவாத இஸ்லாமியப் புரட்சியாக மடைமாற்றியது ஒரு தனிக்கதை. (புரட்சிக்குப் பின்னரும் சில வருட காலம் இடதுசாரிகளும், மதவாதிகளும் கூட்டணி வைத்திருந்தனர்.)
இந்த இடத்தில் சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும், ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும் இடையிலான சமூகப் பின்னணியையும் கவனிக்க வேண்டும்.
சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒரு வகையில் மேலைத்தேய கலாச்சார மரபை பின்பற்றினார்கள் எனலாம். அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதில் நவீன காலத்து குடியரசு முறையை பின்பற்றினாலும், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றில் விட்டுக்கொடாத தன்மையை கொண்டிருந்தனர்.
அதற்கு மாறாக ஷியா முஸ்லிம் பிரிவினர் கீழைத்தேய மரபை பின்பற்றினார்கள் எனலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அரசியல் தலைமைக்கு தகுதியான நபர் அரச பரம்பரை போன்று வாரிசு முறையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.
அத்துடன், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றிற்கு பதிலாக அனைவராலும் அங்கீகரிக்கப் பட்ட ஓர் ஆன்மீகத் தலைவரே, அரசியலுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
அரசியல், மதம் தொடர்பான ஷியாக்களின் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இன்றைய ஈரானில் ஆட்சி நடக்கிறது.
அந்நாட்டில் பாராளுமன்ற முறையிலான அரசமைப்புக்கு சமாந்திரமாக மதத் தலைவர்களும் தனியான அரசு நிர்வாகத்தை நடத்துகின்றனர்.
பொதுத் தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டாலும், உண்மையான அதிகாரம் மதத்தலைவர்கள் கைகளில் இருக்கிறது.
அங்கே இரண்டு இராணுவங்கள் உள்ளன. அரசியல் தலைமைக்கு கட்டுப்படும் தேசிய இராணுவம் ஒரு புறமும், ஆயத்துல்லாவுக்கு விசுவாசமான புரட்சிகர இராணுவம் மறுபுறமும் இயங்கி வருகின்றன.
ஈரானிய தேசிய இராணுவத்தில் யாரும் சேரலாம். ஆனால், புரட்சிகர இராணுவத்தில் கொள்கை அடிப்படையில் விசுவாசமானவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.
அண்மையில் ஈராக்கில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானி, புரட்சிகர இராணுவத்தின் ஒரு பிரிவான அல் குட்ஸ் சிறப்புப் படையணிக்கு தலைமை தாங்கியவர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர் பதவிக்கு வந்தவர்.
பெரியளவு மதப்பற்று இல்லாவிட்டாலும், நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிரியா, ஈராக்கில் நடந்த ISIS எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றியவர்.
ஜெனரல் சுலைமானியின் இராணுவ தந்திரோபாயம் தான் ISIS பயங்கரவாதம் தோற்கடிக்கப் படக் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
பூகோள அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ஈரானிற்கு வரவிருந்த ஆபத்தை சிரியாவிலும், ஈராக்கிலும் எதிர்த்துப் போராடி முறியடித்திருந்தார். உண்மையில் இதுவே அமெரிக்கா அவரைக் குறிவைத்து தீர்த்துக் கட்டக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஆரம்ப கால இஸ்லாமிய சாம்ராஜ்ய வரலாற்றில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (அல்லது சகோதர யுத்தங்கள்) மிக முக்கியமானவை.
உண்மையில் கலீபா ஒத்மானின் மரணத்திற்கு பின்னர், இறைதூதர் முகமதுவின் பேரன் அலிக்கு தான் கலீபா பதவி கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் டமாஸ்கஸ் ஆளுநர் முவாவியா அலியை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவருடன் இறைதூதர் முகமதுவின் இளம் விதவை மனைவி ஆயிஷாவும் சேர்ந்து கொண்டார்.
அவர்களது படையினரும், அலியின் படையினரும் மோதிக் கொண்டமை முதலாவது உள்நாட்டுப் போர் ஆகும். 657 ம் ஆண்டு, உள்நாட்டுப் போரின் இறுதியில் அலி முவாவியாவின் ஆட்களால் படுகொலை செய்யப் பட்டார்.
அடுத்து வந்த சில வருடங்களில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் ஏற்பட்டன. 669 ம் ஆண்டு அலியின் மூத்த மகன் ஹசன் முவாவியாவின் ஆட்களால் நஞ்சூட்டிக் கொல்லப் பட்டார்.
அதை அடுத்து இரண்டாவது மகன் ஹுசைன் ஷியா பிரிவினரின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்றைக்கும் ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஹுசைன் ஒரு மிக முக்கியமான ஆளுமை. பெரும்பாலான ஷியா முஸ்லிம்களின் வீடுகளில் ஹுசைன் படம் மாட்டி வைத்திருப்பார்கள்.
அண்மையில் ஈரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்குகளின் போது, “சொர்க்கத்தில் ஹுசைன் சுலைமானியை ஆரத்தழுவும்” படம் பொறித்த போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.
ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் முறையாக ஹுசைன் தான் செங்கொடி ஏந்திப் போருக்கு சென்றார்.
எதேச்சாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தம்முயிர் ஈந்த தியாகிகளின் இரத்தத்தில் தோய்ந்த படியால் அது சிவப்பு நிறக் கொடி ஆனது.
கொடியின் சிவப்பு நிறமானது வஞ்சகர்களை பழி தீர்க்கும் கடமையை உணர்த்துவதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான விடுதலைப் போரின் எழுச்சியாகவும் கருதப் பட்டது.
இன்றைய ஈராக்கில் உள்ள கர்பலா நகரில், 680ம் ஆண்டு நடந்த போரில் ஹுசைனின் படையினர் சுற்றிவளைக்கப் பட்டனர். இறுதிப்போரில் ஹுசைனும், குடும்பத்தினரும் எதிரிப் படைகளால் கொல்லப் பட்டனர். ஹுசைனின் தலை வெட்டி எடுத்துச் செல்லப் பட்டது.
கர்பலா நகரில் ஹுசைன் படுகொலை செய்யப்பட்ட இடம் இன்றைக்கும் ஷியாக்களின் புனித ஸ்தலமாக பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. அங்கு ஒரு பெரிய மசூதி உள்ளது.
அதற்கு ஒவ்வொரு வருடமும் ஷியாக்கள் புனித யாத்திரை செல்வார்கள். இஸ்லாமியக் கலண்டரில் வரும் அஷூரா நாளன்று ஹுசைன் கொல்லப் பட்ட படியால், வருடந் தோறும் அஷுரா நினைவுதினம் அனுஷ்டிக்கப் படுகின்றது.
அன்றைய தினம் ஷியா மத நம்பிக்கையாளர்கள் தமது தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். சிலநேரம் இரத்தம் வரும் வரை சவுக்கால் அடித்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்கள்.
பிற மதத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியாக்கள் தலையிலும், மார்பிலும் அடித்து அழும் நடைமுறை ஒரு புரியாத புதிராக இருக்கும்.
பலர் இதனை பைத்தியக்காரத்தனம் என்றும் சொல்வார்கள். ஆனால், ஷியாக்களை பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம்.
அநேகமாக இஸ்லாத்திற்கு முன்பிருந்த கீழைத்தேய பண்பாட்டில் இருந்து இந்தப் பழக்கம் வந்திருக்கலாம். எது எப்படியோ, ஹுசைனின் தியாக மரணத்தை நினைத்து ஒப்பாரி வைக்கும் சம்பிரதாயம், அவர்களது மத நம்பிக்கையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.
கர்பலாவில் பறந்த ஹுசைனின் செங்கொடி இறக்கப் பட்டு ஆயிரத்து நானூறு வருடங்களுக்குப் பின்னர், இப்போது தான் மீண்டும் அதே செங்கொடி கோம் நகரில் ஏற்றப் பட்டுள்ளது.
அந்தக் கொடியில் “ஹுசைன் சிந்திய இரத்தத்திற்கு பழி தீர்ப்பவர்களுக்காக…” என்று எழுதப் பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது இனி வருங்காலத்தில் உக்கிரமான போர் நடக்கப் போவதற்கான அறிகுறி. அன்றைய ஈராக்கில் ஈராக்கில் ஷியாக்களின் இராணுவத் தளபதியும், பன்னிரு இமாம்களில் ஒருவருமான ஹுசைன் எதிரிகளால் வஞ்சகமான முறையில் தீர்த்துக் கட்டப் பட்டார்.
வரலாறு திரும்புகிறது என்பது மாதிரி, இன்று ஜெனரல் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தீர்த்துக் கட்டப் பட்டார்.
இந்த ஒற்றுமையானது வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஷியா மத நம்பிக்கையாளர்களுக்கு இது உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு குறிப்பிடத்தக்க விடயம்.
தெஹ்ரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்கில் பல கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியப் புரட்சி நடந்து இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், இந்தளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டது இதுவே முதல் தடவை.
அத்துடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள், அஷுரா தினம் அனுஷ்டிப்பது போன்று தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்தனர்.
அத்துடன், ஈரான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் அல்லது ஆன்மீகத் தலைவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான பழி தீர்க்கும் போருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர்.
அதன் அர்த்தம் ஷியா முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அமெரிக்காவுக்கு எதிரான போரை தமது நீதியான மதக் கடமையாகக் கருத வேண்டும். அதை அவர்கள் ஹுசைனின் செங்கொடி ஏற்றப்பட்ட மறுகணமே புரிந்து கொண்டு விட்டனர்.
கோம் நகரில் உள்ள மஹ்தி மசூதி என அழைக்கப்படும் ஒரு புனித ஸ்தலத்தில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்துக்கள் கலிகாலத்தில் வரும் கல்கி அவதாரத்தை நம்புவது மாதிரி, முஸ்லிம்கள் (கிறிஸ்தவர்களும் கூட) இனிவரப்போகும் ஊழிக் காலம் பற்றிய நம்பிக்கையை கொண்டுள்ளனர்.
அந்தக் காலத்தில் கடவுளின் பிரதிநிதி பூமியில் தோன்றுவார் என்றும் நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்றும் நம்புகின்றனர். இது பற்றிய விவரணைகள் பைபிள், குரான் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் உள்ளன.
ஷியா முஸ்லிம்களுக்கென தனித்துவமான நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறைதூதர் முகமதுவுக்கு அடுத்ததாக பன்னிரண்டு இமாம்களை தமது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த மதத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாரிசு உரிமையின் படி மதத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். ஆனால், 868ம் ஆண்டு பிறந்த பன்னிரண்டாவது இமாம் முஹம்மத் ஹசன் அலி இயற்கை மரணம் அடையவில்லை என்றும், அவர் திடீரென மறைந்து விட்டார் என்றும் சொல்லப் படுகின்றது.
பூமியில் போரும், குழப்பங்களும் அதிகரிக்கும் காலத்தில் பன்னிரண்டாவது இமாமின் வருகை இடம்பெறும் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். இது இயேசு வருகிறார் எனும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை பெரிதும் ஒத்துள்ளது.
பன்னிரண்டாவது இமாம் தோன்றும் காலத்தில் நீதி நிலைநாட்டப் பட்டு சமாதானம் ஏற்படும் என்பது ஷியாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அவர் “இறைவனால் வழிநடத்தப் படுபவர்” என்ற அர்த்தத்தில் முஹமத் அல் மஹ்தி என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார்.
ஈரானில் மஹ்தியின் வருகைக்காக கட்டப்பட்ட ஜம்கரன் மசூதியின் உச்சியில் ஹுசைனின் செங்கொடி பறக்கின்றது. இந்தத் தகவலை நாங்கள் ஒரு சாதாரண விடயமாக கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விட முடியாது.
உலகில் பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இது வேண்டுமென்றே தவிர்க்கப் பட்ட விடயமாக இருக்கலாம். ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு அடுத்த நாள் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்: “இந்தப் போரை நீங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் தான் அதை முடித்து வைக்கப் போகிறோம்!”
– கலையரசன் –