சீனாவின் வன விலங்கு பண்ணைகளில் உருவாகி உலகின் பெரும்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் பேரழிவு காரணமாக தமது நாட்டில் உணவுக்காகப் பாம்புகள் மற்றும் வௌவால்கள் உள்ளிட்ட கவர்ச்சியான விலங்குகளை விற்பனை செய்வதைச் சீனா தடை செய்துள்ளது.
இறுதியா வெளியான தகவலின் படி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 56 பேர் உயிரிழந்ததுடன் உலகளவில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாம்புகள் அல்லது வௌவால்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்தே சீனாவின் வேளாண்மை அமைச்சு இந்த வாரத் தொடக்கத்தில் வனவிலங்குகளின் வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது.
தற்போது உலகளவில் எழுந்துள்ள அவசர நிலை காரணமாகச் சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் இணைய வர்த்தகம், வனவிலங்கு வர்த்தகம், வனவிலங்குகளைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சு தடைவிதித்துள்ளது. மேலும் இதுபோன்ற விலங்குகளை வளர்க்கும் அனைத்து இடங்களையும் தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது என்று வனத்துறை கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெரும்பாலாக மக்கள் அசாதாரண உயிரினங்களை உண்பதால் ஆண்மைக் குறைவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்புகிறார்கள்.
இதன் காரணமாக ஹுவானன் கடல் உணவு சந்தையில் பீவர் மற்றும் ரக்கூன் போன்ற உணவுகள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இந்த நகரம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட வனவிலங்கு பாதுகாப்பு சங்கம், சீனாவில் மட்டுமன்றி, எல்லா இடங்களிலும் வனவிலங்கு சந்தைகளைத் தடைசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெய்ஜிங்கில் 2002-2003 ஆண்டுகளில் SARS தொற்றுநோய் ஏற்பட்டு அந்த தொற்று 17 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்ட மக்களுக்குப் பரவியதையடுத்து அவர்களில் 800 பேர் மரணமாகினர். இது தெற்கு நகரமான குவாங்சோவில் காட்டு விலங்குகளின் நுகர்விலிருந்து பரவியதாகக் கண்டறியப்பட்டது.
இதன் பின்பும் சரியான கட்டுப்பாடுகளை விதிக்க சீனா தவறியமையால் இந்த புதிய வைரஸ் தாக்கம் உருவாகியுள்ளதாக உலகளவில் சீனா விமர்சிக்கப்பட்டுள்ளது.