திருச்சியில் பாலக்கரை பகுதியின் செயலாளராக இருந்த விஜய ரகு என்பவர் இன்று காலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை காவல்துறை தேடிவருகிறது.
திருச்சி பாலக்கரை பகுதியின் பா.ஜ.க. மண்டல செயலாளராக செயல்பட்டு வந்தவர் விஜய ரகு. இன்று காலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் அவரது வீட்டிற்கு அருகில் அவரைத் தாக்கி, வெட்டினார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
Image caption விஜய ரகு
இந்த விவகாரம் தொடர்பாக மிட்டாய் பாபு என்பவரை காவல்துறை தேடி வருகிறது. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த 11ஆம் தேதிதான் சிறையிலிருந்து வெளியில் வந்த மிட்டாய் பாபுவுக்கும் விஜய ரகுவுக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே விஜய ரகுவின் உறவினர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த மிட்டாய் பாபு, தலைமறைவானார். அதற்குப் பிறகு இந்தக் கொலை நடந்துள்ளது. தற்போது மிட்டாய் பாபுவை காவல்துறை தேடி வருகிறது.
இந்தக் கொலை சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.