வேலூர் அருகே பள்ளி மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பறை மேசையில் திடீரென மாணவி மயங்கி விழுந்ததாக கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘எங்களது மகளுக்கு வலிப்பு வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளியில் இருந்து தகவல் வந்தது.

விரைந்த சென்ற நாங்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் பாதி வழியிலேயே மகள் உயிர் பிரிந்து விட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வலிப்பு வந்து மாணவி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version