புதுடெல்லியில் கடந்த 5 நாள்களாக, குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸஸ் இந்தியா ஏசியா என்ற போட்டி நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்திலிருந்து சென்னையைச் சேர்ந்த மாணவி பாஷினி பாத்திமா உட்பட 3 பேர் பங்கேற்றனர். ஸ்விம்மிங், டான்ஸ், திறனறிவு, உடல் தகுதி, யோகா என 5 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. மிஸ் இந்தியா போட்டிக்கான இறுதிச் சுற்றில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பாஷினி பாத்திமாவும் ஒருவர்.
இறுதியில், மிஸ் இந்தியாவாக சென்னை மாணவி பாஷினி பாத்திமா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வயது 19. சென்னையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவருகிறார்.
பாஷினி பாத்திமாவிடம் பேசினோம். “நான் கடந்த 4 ஆண்டுகளாக மாடலிங் செய்துவருகிறேன். சென்னையில் நடந்த மிஸ் தமிழ்நாடு, மிஸ் சென்னை ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
இதில் மிஸ் சென்னை போட்டியில் 2-வது இடம் எனக்குக் கிடைத்தது. இந்தச் சமயத்தில்தான் மிஸ் இந்தியா போட்டி டெல்லியில் நடந்தது. அதில் ஆர்வத்துடன் பங்கேற்றேன்.
கடந்த 5 நாள்களாக நடந்த போட்டிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களை அளித்தேன். அது, எனக்கு மனதிருப்தியை அளித்தது.
அதனால் நிச்சயம் பட்டம் வெல்வேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். மிஸ் இந்தியா பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என்னுடைய பெயரைக் கூறியதும் மகிழ்ச்சியின் எல்லைக்கே ஒரு நிமிடம் சென்றேன்.
நான் இந்தப் பட்டத்தை வென்றதற்கு என் குடும்பத்தினரும் நண்பர்களும் மாடலிங் துறையில் என்னை ஊக்கப்படுத்தியவர்களுமே காரணம். ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளேன். அதற்காக என்னைத் தயார்படுத்திக்கொள்ள இருக்கிறேன்.
மாடலிங் போட்டிகளில் பங்கேற்க தமிழகப் பெண்கள் தயக்கம் காட்டிவருகின்றனர். அதற்கு இந்தத் துறையின் மீது உள்ள தவறான எண்ணம்தான் காரணம்.
அந்த எண்ணம் மாற வேண்டும். தமிழகப் பெண்கள் அதிகளவில் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார் மகிழ்ச்சியுடன்.
மிஸ் சென்னை போட்டியில் என்னுடைய இரண்டாவது மகள் பங்கேற்று மிஸ் சென்னை பட்டத்தை வென்றாள். தற்போது என் மூத்த மகள் பாஷினி பாத்திமா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்” என்றார் உற்சாகத்துடன்.