கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.

திபெத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன பெருநிலப்பரப்பு முழுவதும் தற்போது இந்த வைரஸ் பரவியுள்ளது உறுதியாகிறது.

மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ”கொரோனா வைரஸ் அளிக்கும் சவால் கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் குறித்து வியாழக்கிழமையன்று நடக்கவுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் சந்திப்பில் இந்த வைரஸால் உலக அளவில் சுகாதார அவசரநிலை தோன்றியுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.

_110700652_2ce3372a-128f-4d83-a9c8-b7117ef2ae6d

ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது .

இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.

சீனாவுக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று பயணிக்கவுள்ளதாக தெரிவித்த மைக் ரயான், அங்குள்ள மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை சர்வதேச குழு அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மைக் ரயான்

”மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த வாரத்தில் சீனாவுக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ”தற்போதைய சூழலில் சீனாவுக்கு உலகின் ஆதரவு மிகவும் தேவை” என்று குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version