கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

3 வாரங்களுக்கு முன்பு அவர் பீஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு சீனரும் இந்த நாட்டில் வாழ்வதற்காக பெருமைபடும் வகையில் இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும்.

நமது நாட்டின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்க போகிறீர்கள்” என்று பேசினார்.

அதன் பிறகு அதிபர் ஜிஜின்பிங் பொது நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ளவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கருத்துக்களை வெளியிடவில்லை.

அவர் என்ன ஆனார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது.

இந்த நிலையில் அவர் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் அதிபர் ஜிஜின் பிங்குக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் லீ கெக் யாங் உள்ளார்.

அவரிடம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பொறுப்பை அதிபர் ஜிஜின் பிங் ஒப்படைத்துள்ளார்.

இதனால் புதிய வைரஸ் தொடர்பான பணிகள் அனைத்தும் லீகெக்யாங் மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் லீகெக்யாங் உகான் மாகாணத்துக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.

வைரஸ் பாதித்த சில நோயாளிகளையும் நேரில் சந்தித்து பேசினார்.

இது சீன மக்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் அதிபர் ஜிஜின்பிங் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மத்தியில் தோன்றாமல் பாதுகாப்பு இடத்துக்கு சென்று விட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஜிஜின்பிங் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரது கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே சீனாவில் 31 மாகாணங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்கு மாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் அதிபர் ஜிஜின்பிங் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் அதிபர் ஓடி ஒளிந்து கொண்டதாக கருதுகிறார்கள்.

இதனால் சீனாவில் அதிபர் ஜிஜின்பிங்குக்கு புதிய நெருக்கடி உருவாகி இருக்கிறது.

சீனாவில் தனக்கு எதிராக இருந்த அரசியல் எதிரிகள் அனைவரையும் ஜிஜின்பிங் மிக வெற்றிகரமாக ஓரம் கட்டி விட்டார்.

தற்போது அவருக்கு சவால் விடும் வகையில் சீனாவில் தலைவர்கள் யாரும் இல்லை.

கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் அனைத்தையும் தனது முழு கட்டுப்பாட்டில் அவர் வைத்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்து தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கினார்.

சீனாவின் அசுர வளர்ச்சிகாக அவர் சர்வாதிகாரி போலவே மாறி விட்டதாக வெளிநாடுகளில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் சீன மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரசுக்கு பயந்து அவர் மக்களை சந்திக்காதது மக்களிடம் அவர் மீது இதுவரை இல்லாத அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீன பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனைத்து துறைகளிலும் சீனா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வைரசையும் சமாளித்து பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் ஜிஜின்பிங் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் மத்தியிலும் வெறுப்பு ஏற்பட்டு இருப்பதால் அதை மாற்ற என்ன செய்யலாம்? என்று அவர் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version