சமூக வலைத் தளத்தில் அதிகம் பேசப்படுபவர்களில் ஒருவராக இருக்கிறார் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா.

ஹுமன்ஸ் ஆஃப் பாம்பே என்னும் வலைத்தளத்துடனான அவரது உரையாடலின்போது ரத்தன் டாடா தன் மிகவும் அந்தரங்கமான வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவருக்கு ஏற்பட்ட காதல், அந்த காதல் திருமணம் வரை சென்றது மற்றும் அவரது பெற்றோரின் மண முறிவால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் என சில விஷயங்கள் குறித்து கூறியுள்ளார்.

இத்துடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

_110894440_gettyimages-163137581தாய் தந்தை மண முறிவின் விளைவு

மூன்று பாகங்கள் கொண்ட தொடரில் முதல் பாகத்தில், “என்னுடைய குழந்தைப்பருவம் நன்றாக சென்றது.

ஆனால் என்னுடைய தாய் தந்தையின் மண முறிவுக்குப் பிறகு நானும் என்னுடைய சகோதரரும் நிறைய கஷ்டங்களை சந்தித்தோம். ஏனென்றால் அந்நாளில் விவாகரத்து என்பது இப்போதுபோல் சாதாரண விஷயமல்ல” என கூறியுள்ளார்.

”என்னுடைய பாட்டி எங்களை கவனித்து கொண்டார். என்னுடைய அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்தபோது பள்ளியில் என்னையும் என் சகோதரரையும் புண்படும்படி பேசுவார்கள்.

எங்களை கேலி செய்வார்கள். எங்களை சண்டை போடத் தூண்டுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் எங்கள் பாட்டி, எங்களை சண்டை போடக் கூடாது, அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறுவார். என்ன நடந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறுவார்” என்றார் ரத்தன் டாடா.

அதில் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் மனக்கசப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தந்தையுடனான கருத்து வேறுபாடு

“இப்போது யார் சரி? யார் தவறு? என்று கூறுவது எளிது. நான் வயலின் கற்றுகொள்ள வேண்டும் என நினைத்தேன்.

ஆனால் என் தந்தை பியானோ கற்க வேண்டும் எனக் கூறினார். நான் படிப்பதற்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்றேன்.

என் தந்தை பிரிட்டன் செல்ல வேண்டும் என்றார். நான் கட்டட வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என நினைத்தேன். ஆனால் என் தந்தை நான் பொறியாளர் ஆக வேண்டும் என எண்ணினார்.” என்றார்.

பிறகு ரத்தன் டாடா அமெரிக்கா கார்னல் பல்கலைக்கழகத்துக்கு படிக்க சென்றார். இதற்கு முழு காரணமும் தன் பாட்டிதான் எனவும் கூறினார்.

முதலில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிப்பதற்காக பதிவு செய்தார். ஆனால் கட்டட வடிவமைப்பாளர் பட்டத்தையே பெற்றார்.

பின் லாஸ் ஏஞ்சலீஸில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார்.

காதல் கதை

ரதன் டாடா

லாஸ் ஏஞ்சலீஸில் இருந்தபோது தன் மனதுக்கு பிடித்த பெண்ணைக் கண்டதாக கூறினார். “லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும்போதுதான் எனக்கு காதல் ஏற்பட்டது.

அந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இருந்தேன். ஆனால் அந்நேரத்தில் என்னுடைய பாட்டியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

அவரும் என்னுடன் திரும்புவார் என எண்ணினேன். ஆனால் 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சீனாவுடன் போர் மூண்டதால், அவருடைய தாய், தந்தை அவரை இந்தியா வர அனுமதிக்கவில்லை. இதனால் எங்கள் உறவு முறிந்தது” என்று கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version