கிருஷ்ணகிரி அருகே, குழம்பு ருசியாக இல்லாததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் கொன்று விட்டதாக 6 மாதமாக நாடகமாடி வந்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா (60). இவருடைய மனைவி லட்சுமி (45). ஆடுகள் வளர்ப்பதுதான் இவர்களுடைய முழுநேரத் தொழில்.

அன்றாடம் காலையில் ஆடுகளை அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச்செல்லும் ராஜப்பா, மாலை நேரத்தில் வீடு திரும்புவார்.

தினமும் மதிய நேரத்தில் அவருடைய மனைவி, கணவருக்கு சாப்பாடு எடுத்துச்சென்று கொடுத்து வந்தார்.

அப்போது சிறிது நேரம் ராஜப்பா நிழலில் ஓய்வெடுக்கும்போது மட்டும் லட்சுமியும் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதியன்று, வழக்கம்போல் ராஜப்பாவுக்கு மதிய வேளையில் சூடாக உணவு சமைத்து எடுத்துச் சென்றிருந்தார் லட்சுமி.

அதன்பின், மாலையில் மேய்ச்சல் முடிந்ததும், ஆடுகளுடன் வீடு திரும்பிய ராஜப்பா, மனைவியை காணாமல் போனதை அறித்து அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் விசாரித்தார். உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கிறாரா என்ற சந்தேகத்தில் பலருக்கு போன் செய்தும், சில இடங்களில் நேரில் சென்றும் விசாரித்து வந்தார். ஆனால், தனது மனைவி சென்ற இடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான், ஊருக்கு வெளியே உள்ள ஒரு விவசாய நிலத்தில் லட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தளி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தலையில் ரத்த காயங்களுடன் லட்சுமியின் சடலம் கிடந்தது.

காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு லட்சுமியின் சடலத்தை அனுப்பி வைத்தனர்.

ஆய்வில், அவர் கொல்லப்பட்டிருப்பதும், கல் அல்லது பலமான ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை உள்கோட்ட டிஎஸ்பி சங்கீதா, தளி காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க, தனது மனைவி கொலை குறித்து தளி காவல்நிலையத்திற்கு ராஜப்பா அடிக்கடி சென்று அப்பாவிபோல விசாரித்து வந்துள்ளார்.

ஆனால், அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், லட்சுமி கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதில், திடீர் திருப்பமாக லட்சுமியை ராஜப்பாதான் கொலை செய்திருப்பதும், இத்தனை காலமாக தனக்கும் கொலைக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நாடகமாடி இருப்பதும் தெரிய வந்தது.

கொலை நடந்த அன்று சாப்பாடும், குழம்பும் ருசியாக இல்லை என்று கூறி, சாப்பிடாமல் இருந்திருக்கிறார் ராஜப்பா. அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் கடும் ஆத்திரம் ஆத்திரம் அடைந்த ராஜப்பா, கீழே கிடந்த கல்லை எடுத்து லட்சுமியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு வந்திருக்கிறார் ராஜப்பா.

கடந்த ஆறு மாதமாக நாடகமாடி வந்த அவரின் குட்டு தற்போது வெளிப்பட்டுவிட்டது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version