விழுப்புரம் அருகே தலித் இளைஞர் ஒருவர் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பலால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

சாலையோரம் மலம் கழிக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டதாக, புகார் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர் தம் உள்ளாடையைக் கழற்றி அங்கிருந்த பெண்களிடம் காட்டியதாக கூறுகிறார்கள்.

கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் ஓம்சக்தி நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்துவந்த காரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்( 24) தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

கடந்த செவ்வாயன்று பணிமுடிந்து வீட்டுக்குச் சென்ற அவரை, நண்பர் ஒருவர் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை எடுத்துவருமாறு கூறியதும் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

விழுப்புரம்-செஞ்சி சாலையில், சே.புதூர் கிராமத்தைக் கடக்கும்போது, சாலையோர மலைப் பகுதியில் அவர் மலம் கழிக்க முற்பட்டதாகவும் வயலில் இருந்தவர்கள் அவரைத் தாக்கியதாகவும் சக்திவேல் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் நடத்திய நபர்கள் சக்திவேலின் செல்போனில் இருந்து அவரது சகோதரி தெய்வானையிடம் பேசி சக்திவேலை அழைத்து செல்லுமாறு கூறியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

_110923772_vilupuram

 கும்பலால் தாக்கப்பட்ட சக்திவேல்

தெய்வானையிடம் பிபிசி தமிழ் பேசியபோது,”என் தம்பியை மோசமாக தாக்கிவிட்டார்கள். அவனது முகத்தில் ரத்தம் வழிந்தது.

தலித் என தெரிந்ததால், அங்கிருந்த ஆதிக்க சாதிக்காரர்கள் என் தம்பியை மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டி, வாயில் துணி வைத்து அடைத்து, மோசமாக அடித்துவிட்டார்கள்.

என்னிடம் போனில் பேசியவர்கள், சக்திவேலை கட்டிவைத்துள்ளதாக சொன்னார்கள். அங்கே சென்றபோது கை,கால்களை அசைக்கமுடியாமல் என் தம்பி கிடந்தான். அவனால் நகரகூட முடியவில்லை,”என்கிறார் கண்ணீருடன்.

பலத்த காயங்களுடன் இருந்த சக்திவேலை மோட்டார் சைக்கிளில் கூட்டிவந்ததாக கூறிய தெய்வானை, ”வீட்டில் பணம் எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்லலாம் என வந்தபோது, வண்டியில் இருந்து இறங்கும்போதே அவன் விழுந்துவிட்டான்.

மீண்டும் அவசரமாக மருத்துவமனை சென்றோம், ஆனால் சக்திவேல் அப்போதே இறந்துவிட்டான் என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்,”என்கிறார்.

ஜாமியா நூலகத்தில் போலீசார் புகுந்து தாக்கும் காணொளி – 2 மாதம் கழித்து வெளியானது
15 பேர் கூட்டு பாலியல் வல்லுறவு? 7 வயது சிறுமி பலி – பின்னணி என்ன?

சக்திவேல் தாக்கப்பட்ட பிறகு, அவர் காயங்களுடன் மயக்க நிலையில் உள்ள காட்சி வாட்ஸாப்பில் பரவிவருகிறது. இந்த வீடியோவில் அடையாளம் காணப்பட்ட நபர்கள் கைதாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் ஜெயக்குமார், ”சக்திவேல் குடும்பத்தினர் தலித் என்பதால் கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

சக்திவேலை தாக்கிய நபர்கள், சக்திவேல் தனது உள்ளாடைகளை கழற்றி வயல் பகுதியில் இருந்த பெண் ஒருவரிடம் கட்டியதால் அவரை அடித்ததாகக் கூறுகின்றனர்.

ஜாதி ரீதியாக இந்த தாக்குதல் நடந்ததா என தெளிவாக தெரியவில்லை. விசாரணை முழுமையாக முடியவில்லை.

தற்போது கொலை சம்பவத்திற்காகவும், தாழ்த்தப்பட்ட நபரை தாக்குவது, தேவையற்ற புகார் கூறுவது ஆகிய காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(2)(v),ன் கீழும், கொலைக் குற்றத்திற்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302ன் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளோம்,” என்றார்.

 கும்பலால் தாக்கப்பட்ட சக்திவேல்

சக்திவேலின் மரணம் குறித்து கேட்டபோது, ”வயலில் இருந்தவர்கள் அனைவரும் கும்பலாக மோசமாக தாக்கியுள்ளனர்.

சக்திவேல் குடும்பத்தினர் வந்தபோது, அவர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பெண்கள், நான்கு ஆண்களை கைது செய்துள்ளோம். கும்பலாகத் தாக்கப்பட்டதால், சக்திவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்,” என்கிறார்.

சக்திவேல் தாக்கப்பட்ட கிராமத்தில், நடந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறும் பெருமாள் என்பவரிடம் புதுவை செய்தியாளர் நடராஜன் சுந்தர் பேசினார்.

“சம்பவத்தன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் அருகே அந்த நபர் நிர்வாணமாக சென்று, அப்பெண்ணை பிடித்துள்ளார்.

இதனால் அந்த பெண் பயத்தில் கூச்சலிட்டதும், அவர் அங்கிருந்து ஓடத்தொடங்கினார். இதனை கண்ட சாலையில் இருந்த பொதுமக்கள் அவரை விரட்டப்பிடிக்க முயற்சித்த போது, அவர் கீழே விழுந்து வாயில் அடிபட்டது.

உடனே அவரைப் பிடித்து தாக்கினர், இதில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவரைத் தாக்கவில்லை,” என்று தெரிவித்தார் பெருமாள்.

மேலும் ”இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் அந்த நபரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் காவல்துறையிடம் விளக்கம் கொடுத்த பிறகு, அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர். அவர் இங்கிருந்து செல்லும் போது நல்லபடியாகத்தான் சென்றார்,” என்றும் கூறினார் அவர்.

Share.
Leave A Reply

Exit mobile version