மகனை கொலை செய்து உடல் பாகங்களை துண்டுதுண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய தாயின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தமிழகம், தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி அருகே முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆணும், பெண்ணும் இரவில் பைக்கில் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

உடனே இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த பொலிஸார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தியபோது, ஒரு சாக்குப்பையில் தலை, கை, கால்கள் இல்லாமல் உடல் மட்டும் கிடந்துள்ளது.

இதனை அடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரா காட்சிகளை ஆராய்ந்துபோது, பைக்கின் பதிவு எண்ணை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கம்பத்தைச் சேர்ந்த செல்வி (49) மற்றும் அவரது மகன் விஜயபாரத் (25) ஆகிய இருவரும் இரவில் சாக்குமூட்டையுடன் சென்றது தெரியவந்துள்ளது.

இருவருரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், மூத்தமகன் விக்னேஷ்வரனை (30) கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி வீசியதாக வாக்குமூலம் கொடுத்து அதிரவைத்துள்ளனர்.

கம்பத்தில் டீக்கடை ஒன்றை செல்வி நடத்தி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் தொழிலை விட்டுவிட்டு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார்.

பொறியியல் படித்துள்ள மூத்தமகன் விக்னேஷ்வரன், குடிபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டில் தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

அவரை திருத்தும் முயற்சி பலனளிக்காததால் தாயும், இளையமகனும் சேர்ந்து விக்னேஷ்வரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த விக்னேஷ்வரனுக்கு விஷம் கலந்த உணவு கொடுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் வீட்டில் உள்ள அரிவாள், கத்தியால் விக்னேஷ்வரன் உடலை துண்டுதுண்டாக வெட்டி உடல்பாகங்களை ஆறு, கிணறு, புதர் உள்ளிட்ட இடங்களில் வீசியுள்ளனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கம்பம் மின்சார அலுவலகத்தின் பின்புறம் உள்ள புளியந்தோப்பின் புதரில் இரண்டு கை, கால்களை பொலிஸார் மீட்டனர்.

பின்னர் கம்பம் வீரநாயக்கன்குளத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் கிணற்றுக்குள் இருந்து தலை கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தாய், மகன் இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதைக்கு அடிமையான மகனை தாயும், இளையமகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version