திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள், பூர்வீகம் இஸ்லாம் சமயம், சிவதீட்சை பெற்ற மூன்றே மாதங்களில் லிங்காயத் மடாதிபதியாகப் பொறுப்பேற்கிறார், கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர்.

லிங்காயத் எனப்படும் வீரசைவ மரபைச் சார்ந்தவர்கள், தங்களுக்கென சிவவழிபாட்டை மட்டுமே ஏற்றுக்கொண்ட சிவனடியார்கள்.

உருவ வழிபாடு, சடங்குகள், சாதி பேதங்கள் எவற்றையும் ஏற்காத இவர்கள், இஷ்டலிங்கத்தை மட்டுமே வணங்கிவருபவர்கள். உடலில் லிங்கத்தை அணிந்து கொள்வார்கள். கர்நாடகம் தவிர பல்வேறு மாநிலங்களிலும் இந்தப் பிரிவினர் ஆங்காங்கே வசித்துவருகின்றனர்.

ரலவசயககய
சிவலிங்கம்

லிங்காயத் என்ற சமயப் பிரிவை கர்நாடகத்தைச் சேர்ந்த பசவர், 12-ம் நூற்றாண்டில் தோற்றுவித்தார். பசவர், பசவப்பா, பசவண்ணா என அழைக்கப்படுகிற இவர், சாளுக்கிய மன்னரின் ஆட்சிக்காலத்தில் அரசவை அமைச்சராக இருந்தவர்.

பசவரின் சமயப் பாடங்களைக் கேட்டும் படித்தும் வளர்ந்தவர்கள், இவர்பால் ஈர்ப்புகொண்டு இச்சமயத்தைத் தழுவத் தொடங்கினர்.

கர்நாடக மாநிலம் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லிங்காயத் மடங்கள் பெருகியுள்ளன. அப்படியொரு மடத்தில்தான், இஸ்லாமை பூர்வீக சமயமாகக்கொண்ட ஒருவர் மடாதிபதியாகப் பட்டம் ஏற்க உள்ளார்.

தீட்சை ( டைம்ஸ் ஆஃப் இந்தியா )

கர்நாடகாவின் வடக்குப் பகுதியிலுள்ள கடாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 33 வயதே ஆன இளைஞர் திவான் சாரிஃப் ரகிமான் சாப் முல்லா.

இவர், லிங்காயத் எனப்படுகிற வீரசைவ சமயத்தின் தலைமை மடங்களுள் ஒன்றுக்குத் தலைவராக, வருகிற பிப்ரவரி 26-ம் தேதியன்று பொறுப்பேற்க உள்ளார்.

மேலும், சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட பசவரின் நெறிகளால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்துவருவதாகக் கூறியுள்ளார்.

பசவர்

ஏறத்தாழ 350 ஆண்டுப் பழைமையான கோரணேஸ்வர சான்ஸ்தன் மடத்தோடு இணைக்கப்பெற்றது முருகராஜேந்திர கோரணேஸ்வர சாந்திதம்ம மடம்.

சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த முருகராஜேந்திர மடத்திற்கு மொத்தம் 361 கிளை மடங்கள் உள்ளன. இந்தக் கிளை மடங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான அடியார்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் வசித்துவருகின்றனர். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த மடத்தின் அதிபதியாகத்தான் சாரிஃப் நியமிக்கப்பட உள்ளார்.

சாரிஃபின் தந்தை ரகிமான் சாப் முல்லாவும் பசவர் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, லிங்காயத் மடாதிபதிகளிடம் சிவதீட்சை பெற்றவர்.

சமயத்தைப் பின்பற்றுவதோடன்றி, அசுதி கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தை லிங்காயத் மடத்திற்காக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தந்தை வழியிலேயே சாரிஃபும் லிங்காயத் சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதிதான் சிவதீட்சை பெற்றிருக்கிறார்.

தீட்சை பெற்ற ஓராண்டிற்குள் மடாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார், சாரிஃப். அதுமட்டுமன்றி, சாரிஃபுக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன.


‘லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடக அமைச்சரவை!

இந்த முடிவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பிவரும் இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்து ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி. சிவத்திடம் பேசினோம்

.”லிங்காயத் மடாதிபதி விஷயத்தில் எந்த விதமான பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பசவருடைய கோட்பாடுகள் எல்லாமே சாதி பேதங்கள் கடந்ததாகவும், மனித சமூகம் மலர வேண்டும் எனும் உணர்வு மேலோங்குகிற உயரிய நோக்கோடும்தான் அமைந்திருக்கிறது.

தான் நம்பிக்கையோடு வருவதாக அந்த இளைஞர் சொல்கிறார். இதில் பிழையேதும் இல்லையே. இளைஞரும் லிங்காயத்தாகத்தான் மாறியிருக்கிறார்.

இந்த மதத்தின் மரபுப் படியே, இந்தப் பட்டம் சூட்டுதலும் நடைபெற இருக்கிறது. மடாதிபதியும் உரிய முறையில்தான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எனவே, கொள்கை ரீதியிலோ சட்ட ரீதியிலோ பெரிய சிக்கல்கள் இருப்பதைப் போல எனக்குத் தோன்றவில்லை.


சுகி.சிவம்

ஆனால், ஒன்றை மட்டும் ஆழமாக யோசிக்க வேண்டியது இருக்கிறது. இவருக்கு வேறு ஏதும் புற நிர்பந்தங்கள் இருந்தனவா என்பதை ஆராய்தல் அவசியம்.

அதுபற்றி அந்த மாநில அரசும் காவல்துறையும் கவனமெடுத்துப் பார்க்க வேண்டும். இதன் பின்னணியில், கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட வேறேதும் புறக் காரணிகளில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

மற்றபடி, தார்மீகப் பற்றுதல் காரணமாக இவை நிகழுமாயின் ஒரு தவறும் இல்லை. சமயப் பற்றினால் ஈர்க்கப்பட்டு, அந்த உந்துதலினால் இது நிகழுகிறது என்றால் சரி.

இந்த மரபுகளையும் கொள்கைகளையும் அவர் மதிக்கத் தொடங்குகிறபோது, அந்த மடாதிபதியும் தன்னுடைய வாரிசாக அவரை ஏற்றுக் கொள்கிறார். இது சாத்தியம் என்றே எனக்குப் படுகிறது” என்றார்.20:24 21-02-2020

Share.
Leave A Reply

Exit mobile version