கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் ஈரான் நாட்டில் 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவுக்கு உலகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஈரானில் மட்டும் இதுவரை சுமார் 1135 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் ஈரான் நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி அந்த நோயில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய அதிசயம் நடந்துள்ளது. ஈரான் நாட்டில் உள்ள செம்னான் நகரை சேர்ன்ஹா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இதை அந்த மருத்துவமனையின் தலைவரான நாவித் தனாயி தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 வயது முதியவரும் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அந்த முதியவர் கொரோனாவை தைரியமாக எதிர்த்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரின் போராட்டமும் மற்றவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!

Share.
Leave A Reply

Exit mobile version