இலங்கை முழுவதும் 11,842 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 72 நோயாளர்களுடன் நெருங்கிய பழகிய 11,842 பேரை தனிமைப்படுத்தப்பட்டு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இல்லாதொழித்தல்

_111379327_54d5ed21-e60c-44f0-8332-9cacb8124890கோவிட் 19 வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாடு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் சரிவர முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவிட் 19 வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டுப் பிரஜைகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்த அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஆரம்பத்தில் 2 மருத்துவ கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அது தற்போது 22 வரை நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ கண்காணிப்பு

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பு நிலையங்களின் ஊடாக 3063 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறினார்.

இலங்கையில் கோவிட் 19 வைரஸ் தொற்று பரவக்கூடிய இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ கண்காணிப்பு மத்திய நிலையங்களிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் அதனூடாக பரவும் அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து, கண்காணிப்பு மத்திய நிலையங்களுக்கு செல்லாது, நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டவர்களின் ஊடாகவும் இந்த தொற்று பரவுதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இரண்டு தரப்பினரையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பட்சத்தில், நாட்டிற்குள் கொவிட் 19 தொற்றை முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என இராணுவ தளபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையில் தொடரும் ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் கோவிட் 19 வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகின்ற பின்னணியில் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களைத் தவிர்த்து ஏனையோருக்கு வெளியில் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் அனைத்து பகுதிகளும் முழுமையாக முடங்கியுள்ளதைக் காண முடிகின்றது.

எனினும், நேற்றிரவு அரசாங்கத்தின் உத்தரவை மீறிச் செயற்பட்ட20திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளை, ஹப்புத்தளை, கட்டுநாயக்க உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் போலீஸர் குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, செயற்படுமாறு பிரதி போலீஸ் அதிபர் அஜித் ரோஹிணி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைகளை அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

சுற்றுலா மற்றும் பிற விசா பிரிவுகளின் கீழ் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து ஏனைய நாடுகளுக்கான விமானங்கள் இயக்கப்படுவதனால், இந்த ஏற்பாடுகள் இலங்கையிலிருந்து புறப்படும் வழமையான விமானங்கள் மூலமும், வாடகை விமானங்கள் மூலமும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கோவிட் 19 தொற்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த காலப் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பயணிகளுக்கு விசா முடிவுற்றாலும், அதனை நீடிப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version