இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்த நிலையில், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், பூரண குணமடைந்து வெளியேறிய இரண்டாவது நபராக இவர் பதிவாகியுள்ளார்.

_111395641_coronapatient-1.pngஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பெண்ணொருவர் இந்த தொற்றுக்கு முதலாவதாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி பாதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சீன பிரஜை அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பூரண குணமடைந்த கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் முறையாக நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இத்தாலியிலிருந்து வருகைத் தந்த அந்தநாட்டு பிரஜைகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய 52 வயதான ஒருவருக்கே முதல் தடவையாக இந்த தொற்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

அத்துடன், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த சுற்றுலா வழிகாட்டியுடன் இருந்த மற்றுமொரு சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை இன்று மாலை வரை 86 வரை அதிகரித்திருந்தது.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 227 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் பூரண குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு குணமடைந்தவர்களில் ஒரு வெளிநாட்டு பிரஜையும், ஒரு இலங்கையரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

எனினும், கொரோனா தொற்றுக்குள்ளான இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு சட்டம் நீடிப்பு – மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் தடை

இலங்கையின் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும், கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும் நாளை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு நாளை 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 27ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிக்கையொன்றின் ஊடாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு இன்று அதிகாலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம், பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 26ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

அதுமாத்திரமன்றி, இலங்கையின் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜைகள் அங்காங்கே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயங்களை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கம் கூறியுள்ளது.

அத்துடன், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டு செல்ல இடமளிக்குமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறியோர் கைது

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 1750திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றை இல்லாதொழிக்கும் நோக்குடன் கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா சார்க் நிதியத்திற்கு இலங்கையும் நிதியுதவி

கொரோனா தொற்றை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்படவுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்ட சார்க் நாட்டு தலைவர்களுக்கு இடையிலான காணொளி மாநாட்டின் போது இந்த நிதியம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் ஒத்துழைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 25 மில்லியன் இலங்கை ரூபா நிதியுதவியை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்தது.

இந்த நிதியுதவியை எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கத்திடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறுகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


Share.
Leave A Reply

Exit mobile version