கொரோனா சிகிச்சைக்காக தனக்கு அளிக்கப்பட்ட சுவாசக் கருவியை, இளைஞர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்த பாதிரியார் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது பலரையும் நெகிழ செய்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸின் மையமாக விளங்கும் இத்தாலியில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தினந்தோறும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்குள்ள மருத்துவர்கள் திணறி வருகிறார்கள்.

குறிப்பாக சுவாச கருவிகள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவற்றுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோ என்ற நகரைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், கொரோனா தொற்று ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

71 வயதான குசெப்பே பெரார்டெல்லி என்ற அந்த பாதிரியார் காஸ்னிகோ என்ற தலைமை பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சுவாசப்பிரச்சனையால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

எனவே சுவாசக்கருவி இருந்தால் மட்டுமே அவர் இயல்பாக மூச்சு விட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலி முழுவதும் சுவாசக்கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், மருத்துவர்களும் செய்வதறியாமல் இருந்துள்ளனர்.

இதனை அறிந்த பாதிரியார் குசெப்பேவின் ஆதரவாளர்கள் , அவர் பயன்படுத்துவதற்காக சுவாச கருவி ஒன்றை விலைக்கு வாங்கி அளித்துள்ளனர்.

ஆனால் தான் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சுவாச பிரச்சனையுடன் போராடி வரும் இளைஞர் ஒருவரை பார்த்த பாதிரியார் குசெப்பே, தனக்கு அளிக்கப்பட்ட சுவாசக்கருவியை அந்த இளைஞருக்கு அளித்துள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும், அந்த கருவியை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். அந்த இளைஞர் யார் என்று கூட அந்த பாதிரியாருக்கு தெரியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் பாதிரியார் குசெப்பே மரணமடைந்துள்ளார். அவரின் தியாகத்தை அறிந்த காஸ்னிகோ மக்கள், சவப்பெட்டியில் அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் போது தங்கள் வீட்டு ஜன்னல்களிலிருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது வரை இத்தாலியில் சுமார் 50 பாதிரியார்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

நாம் அதிகம் நேசிக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவர்களை கடைசியாக ஒருமுறை பார்த்து அஞ்சலி செலுத்து கனத்த மனதுடன் அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம்.

_111418627_5a5525a0-259a-4e30-957c-6ab63beca01d

ஆனால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளின் உயிர் பிரியும்போது கூட இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாத நிலைக்கு இத்தாலி நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உயிரிழப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் அதிக வலியை எதிர்கொள்கின்றனர்.

கொரோனாவால் உயிரிழப்பவர்கள் இயற்கை மரணத்தைவிட இரு மடங்கு அதிக சுமையோடு உயிரிழக்க நேரிடுகிறது, என மிலனில் உள்ள மின்மயானத்தில் வேலைப்பார்க்கும் ஆன்ட்ரியா கவலை தெரிவிக்கிறார்.

முதலில் நோய் தாக்கி உயிருடன் இருக்கும்போதே, நீங்கள் நேசிப்பவர்களை பிரிந்து தனிமைக்கு செல்ல வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பிறகு யாரும் அருகில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்களின் குடும்பத்தினரால் தங்களின் அன்பிற்குரியவர்கள் கண் முன்னே பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Share.
Leave A Reply

Exit mobile version