இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.
நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.
சில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
பல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவமானது, இன்று அதிகாலை முதல் பாரிய பரபரப்பை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவம் வதந்தி என அறிந்துகொண்ட மக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதனை கேலி செய்து பகிர்ந்து வருகின்றனர்.
நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
போலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.