கொரோனா பாதிப்பால் கடுமையாக போராடிவரும் உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சரியான முறையில் விரைவாக மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.
இந்நிலையில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சரியான முறையில் உபகரணங்கள் கிடைத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் வைராலஜிஸ்ட் ஒருவர் தனது குழந்தையை பெற்றேடுக்கும் சில மணி நேரத்துக்கு முன்பு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்களை கண்டுபிடித்தார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனைக் கருவி முதல் முறையாக, கடந்த வாரம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனால் நோய் தொற்றை விரைவாக கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவர்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த கருவி கொரோனா பாதிப்பை முழுமையாக முறியடிக்க உதவும் என்றும் மருத்துவ குழுவினர் நம்புகின்றனர்.
புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி என்ற பரிசோதனை நிறுவனம் சோதனை கருவிகளை தயாரிக்கவும் விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம்.
தற்போது இந்த நிறுவனம் புனே, டெல்லி, மும்பை, கோவா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சுமார் 150 பரிசோதனை கருவிகளை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் மற்ற இடங்களுக்கும் புதிதாக தயாரிக்கப்படும் பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்படும் என அந்நிறுவனத்தின் இயக்குநர் கவுதம் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒரு பரிசோதனை கருவியை பயன்படுத்தி 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ள முடியும். இதைத் தயாரிக்க 1200 ரூபாய் செலவிடப்படுகிறது.
அடுத்த நாள் குழந்தை பெற்றெடுத்த ஆராய்ச்சியாளர்
இது குறித்து மைலாபின் ஆராய்ச்சியாளர் மினல் போஸ்லே கூறுகையில், ”வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த பரிசோதனை கருவியை வைத்து நாம் மேற்கொள்ளும் பரிசோதனையில் தொற்று குறித்து முடிவுகளை நாம் கண்டுபிடிக்க 4 மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது இரண்டரை மணிநேரத்தில் நாம் கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாக இந்த பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும். ஆனால் தற்போது ஆறு வாரங்களில் இந்த முறையான பரிசோதனை கருவியை தயாரித்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை என்கிறார் மினல்.
மேலும் மினல் வேறொரு நெருக்கடி நிலையிலும் இந்த பரிசோதனை கருவியைத் தயாரித்துள்ளார். தேசிய வைராலஜி நிறுவனத்திடம் இந்த மருத்துவ பரிசோதனை கருவியின் மதிப்பீட்டை கண்டறிவதற்கு விண்ணப்பம் சமர்ப்பித்த மறுநாள் மினலுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பிப்ரவரி மாதம் தனது பிரசவகால சிக்கல்கள் காரணமாக மினல் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு உடல்நலம் தேறி தனது நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக மினல் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறார்.
மினல் சிசேரியன் சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலையிலும், இந்தியாவின் நற்பெயருக்கு சவால் நிலவும் இந்த நேரத்தில், புதிய பரிசோதனை கருவி தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இந்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறுகிறார்.
மதிப்பீட்டிற்காக மருத்துவ கருவிகளை சமர்ப்பிக்கும் முன்பு அந்த குழுவினர் பரிசோதனை முடிவுகளை மிகவும் துல்லியமாக உறுதிப்படுத்த வேண்டும். எனவே ஒரே பரிசோதனை கருவியில் ஒரே ரத்த மாதிரியை 10 முறை பரிசோதிக்க வேண்டும். பத்து முறையும் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்தால் மட்டுமே சரியான பரிசோதனை கருவி தயாரித்ததாக ஒப்புதல் அளிக்கப்படும். அதேபோல நாங்கள் வெற்றி கண்டோம், எங்கள் பரிசோதனை கருவி சரியானது என ஒப்புதல் வழங்கப்பட்டது என்கிறார் போஸ்லே.
இந்த பரிசோதனை கருவிக்கு இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய சுகாதார அமைப்பின் குறைபாடுகள்
இந்தியா போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்று விமர்சனத்திற்குள்ளானது.
ஒரு கோடியில் வெறும் 68 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது உலகிலேயே மிகக் குறைந்த கொரோனா வைரஸ் பரிசோதனை விகிதமாக கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியது. பிறகு தீவிர சுவாச குறைப்பாடுகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவுசெய்தது.
கொரோனா: 2ம் நிலையை நோக்கி நகரும் தமிழகம், கடை திறக்க கட்டுப்பாடு
கொரோனாவால் இறக்கும் முன் திருவிழாவில் பங்கேற்ற முதியவர்: தனிமைப்படுத்தப்பட்ட 40,000 பேர்
ஆனால் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக பரவிய பின்னர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே இதுவரை மாநில அரசாங்க மருத்துவமனைகள் மட்டும் மேற்கொண்டு வந்த பரிசோதனைகளை தற்போது சில தனியார் பரிசோதனைகளும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த புதிய பரிசோதனை உபகரணங்களை விற்பனை செய்ய உரிமங்களின் அடிப்படையில் 15 தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பரிசோதனைகளும் அதிகரிக்கும் என்று மினல் கூறுகிறார்.
மிகவும் சிறிய நாடான தென் கொரியாவில், கொரோனா வைரஸுக்கு 650 ஆய்வகங்கள் உள்ளன, நம்மிடம் எத்தனை இருக்கிறது?” என்று முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் சுஜாதா ராவ் கேள்வி எழுப்புகிறார்..
இந்திய அரசின் கீழ் 118 பரிசோதனை மையங்கள் இயங்குகின்றது மேலும் 50 தனியார் ஆய்வகங்களும் அரசுடன் இணைந்து செயல்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள்தொகைக்கு, இது போதுமானதல்ல.
இந்தியா இன்னும் பல ஆய்வகங்களை அடையாளம் கண்டு அங்கு பரிசோதனைக் கருவிகளை அனுப்பி வைக்க வேண்டும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இன்னும் நிறைய காலம் ஆகும், என்கிறார் சுஜாதா.
இது மட்டுமின்றி சோதனை முடிவுகள் வர ஆரம்பித்தவுடன், ஏராளமான மக்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது இந்தியாவிற்கு மிகவும் சவாலாக அமையும்.
இந்தியாவின் மருத்துவ வசதிகள் அனைத்தும் நகரங்களிலேயே உள்ளன. கிராமப்புரங்களில் எப்படி சிகிச்சை அளிக்க முடியும். இதுவும் இந்தியாவிற்கு பெரிய சவால் என்கிறார் சுஜாதா.