நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர், பெண்ணின் வீட்டாரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (26) என்பவரும் பக்கத்துக் கிராமமான ஒண்டிக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணும் 3 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஷர்மிளா வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஆற்காடு அடுத்த வாலாஜாவில் தனியாக வீடு எடுத்துக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

15 நாள்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், ஷர்மிளாவும், சுதாகரும் வாலாஜாவில் இருப்பது அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியவர அவர்களைச் சொந்த ஊருக்கே அழைத்துச் சென்று பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னைக்கு கட்டட வேலைக்குச் சென்ற சுதாகர், ஷர்மிளாவிடம் போனில் ரகசியமாகப் பேசி வந்துள்ளார். அதே சமயம் ஷர்மிளாவின் தந்தை மூர்த்திக்கு போன் செய்து, ‘ஷர்மிளாவை எனக்கு முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்றும் கேட்டு வந்துள்ளார்.

man-killed-by-wifes-father-for-inter-caste-marriageஇதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மூர்த்தி, ‘இனிமேல் எனக்கு போன் செய்யாதே’ என்று பலமுறை கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் சுதாகர் தொடர்ந்து போன் செய்துள்ளார். இதனால், கடும் கோபத்தில் மூர்த்தி இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பால் 144-தடை விதிக்கப்பட்டதும், சென்னையிலிருந்து தனது ஊரான மொரப்பந்தாங்கல் கிராமத்திற்கு சுதாகர் வந்துள்ளார். நேற்று காலை சுதாகர் தனது நண்பர் கோபியுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக மொரப்பந்தாங்கல் ஏரிக்கரைக்கு வந்துள்ளார். அப்போது மூர்த்தி, தனது அக்கா மகன் கதிரவன் என்பவரோடு ஏரிக்கரைக்கு வந்து சுதாகரை இரும்புக் கம்பியாலும் கத்தியாலும் சரமாரியாகத் தலையில் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த சுதாகரின் நண்பர் வீட்டிற்கு ஓடிச்சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள், சுதாகரைக் மூர்த்தியும், கதிரவனும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த ஆரணி தாலூகா போலீசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த சுதாகர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மூர்த்தி, கதிரவன் ஆகியோரை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து ஆரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version