தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவருமே டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலரைத் தங்களால் கண்டறிய முடியவில்லையென்றும் அவர்கள் தாங்களாக முன்வந்து அரசிடம் தங்களைப் பற்றிய தகவல்களைக் கூற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் 77330 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் 81 பேர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களில் 4070 பேர் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2726 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 234 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்ட 110 பேரில் ஒருவர் பர்மாவையும் ஒருவர் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் இதுவரை நோய் உறுதிசெய்யப்பட்ட 234 பேரில் 190 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
இன்று நோய் உறுதிசெய்யப்பட்டவர்களில் 6 பேர் திருநெல்வேலியையும் 28 பேர் கோயம்புத்தூரையும் 20 பேர் தேனி மாவட்டத்தையும் 17 பேர் திண்டுக்கல் மாவட்டத்தையும் 9 பேர் மதுரை மாவட்டத்தையும் 5 பேர் சிவகங்கை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
மேலும் திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து தலா 7 பேருக்கும் ஈரோடு, தூத்துக்குடி, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேருக்கும் கரூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவருக்கும் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த 1103 பேர் வசித்துவந்த வீடுகளை தனிமைப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதாகவும் அவர்களோடு யார் யாரெல்லாம் பழகியவர்கள் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் அவர்களும் கண்காணிப்பு வளையத்தில் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதி செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தொடர்ந்து இது தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.