இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையாக்க இந்திய ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வெகுவேகமாகப் பரவும் பட்சத்தில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாளுவதற்கு ஏதுவாக இந்தியா முழுவதும் பெரும் எண்ணிக்கையில் தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்க இந்திய ரயில்வே முடிவுசெய்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ரயில்வேயின் கீழ் செயல்படும் 125 மருத்துவமனைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொரோனா படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். இதுதவிர, ரயில் பெட்டிகளும் மாற்றப்பட்டு இதற்காகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.

இதன் முதற்கட்டமாக 5,000 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக பயன்படுத்த ஏதுவாக மாற்றப்பட்டுவருகின்றன. தென்னக ரயில்வே 473 ரயில் பெட்டிகளை இதுபோல வார்டுகளாக மாற்றவிருக்கிறது. இதற்கான பணிகள் பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ், திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

_111548700_gettyimages-1208550718சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பணிமனையில் இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இங்கே 110 பெட்டிகள் மருத்துவப் படுக்கைகளாக மாற்றப்படவுள்ளன. ஒரு சில பெட்டிகள் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு 2ஆம் வகுப்பு ரயில் பெட்டியிலும் 9 அறைகளும் 72 படுக்கைகளும் உள்ளன. இந்த 9 அறைகளிலும் நடுவில் உள்ள படுக்கை இதற்காக அகற்றப்படுகிறது. ஒவ்வொரு அறையையும் மறைக்கும் வகையில் திரைச் சீலைகள் போடப்படுகின்றன. கூடுதலாக மின் இணைப்புப் பெட்டிகள் பொருத்தப்படுகின்றன.

இது தவிர, ஒவ்வொரு பெட்டியிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வைப்பதற்கான வசதியும் செய்யப்படுகிறது. மொத்தமுள்ள நான்கு கழிப்பறைகளில் ஒன்று குளியலறையாக மாற்றப்படுகிறது.

மொத்தமுள்ள 9 அறைகளில் குளியலறைக்கு அடுத்து வரும் அறை மருத்துவப் பணியாளர்களுக்கான அறையாகச் செயல்படும். எல்லா ஜன்னல்களிலும் கொசுவலைகளும் அடிக்கப்பட்டுவருகின்றன.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க சென்னை பணிமனையில் திட்டமிட்டுள்ளனர். 20 ஆண்டுகள் பழமையான இரண்டாம் வகுப்புப் பெட்டிகளே இதுபோல மாற்றப்படுகின்றன.

“குறித்த காலக்கெடுவுக்குள் பெட்டிகள் தனிமைப்படுத்த வேண்டிய நோயாளிகளுக்கான வார்டாக மாறிவிடும். ஆனால், எப்படி பயன்படுத்துவது என்பதை சுகாதாரத்துறைதான் முடிவுசெய்யும்” என்கிறார் பணிமனையின் உதவி மேலாளர் கணேசன்.

இந்த ரயில் பெட்டிகள், பெரும்பாலும் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கொரோனா நோயின் தாக்கம் நீங்கிய பிறகு, தேவைப்பட்டால் இந்தப் பெட்டிகள் கிருமிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பயணத்திற்கான பெட்டிகளாக மாற்றப்படும்.

இவை தவிர, முழுமையான ஆபரேஷன் தியேட்டராகப் பயன்படக்கூடிய ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேயிடம் உண்டு. அவை விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version