கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்று தொடர்பான போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பை வாட்சப் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, ஏற்கனவே அதிகமுறை பகிரப்பட்ட ஒரு செய்தியை வாட்சப் பயனர்களால் இனி ஒருமுறை மட்டுமே பகிர முடியும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், ’ஃபார்வர்ட்’ செய்திகளை கட்டுப்பாடுகள் இன்றி பலருக்கும் பகிரும் வசதி இருந்தது. பின்னர், போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை நிறுவனம் அறிவித்திருந்தது. ஒரு மெஸேஜ் ஃபார்வட் செய்யப்பட்டது என்பதை குறிக்கும் அம்சங்களும் கொண்டுவரப்பட்டன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 4,421ஆக உயர்ந்துள்ளது என ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 114 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா குறித்த தவறான தகவல்களை பதிவிட்டால் அவர்களின் பதிவு நீக்கப்படும் என ஏற்கனவே முகநூல் மற்றும் டிவிட்டர் வலைதளங்கள் தெரிவித்திருந்த நிலையில், போலிச் செய்திகளை தடுக்க இனி ஃபார்வர்ட் செய்திகளை ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை வாட்சப் கொண்டு வந்துள்ளது.