சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 571-ல் இருந்து 621-ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.

இதேபோல் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5-ல் இருந்து 6-ஆக இன்று அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

அவர் எந்த வெளிநாடு பயண வரலாறும் இல்லாதவர். கடந்த 20-ம் தேதி ரயிலில் திருச்சி சென்று திரும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

corona-virus-impact-in-tamil-nadu-rised-to-621-1586179476
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாசிட்டிப் உறுதிசெய்யப்பட்ட 50 நபர்களில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று சோதனை வரும் 10-ம் தேதி முதல் அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும், அது ஆள் பார்த்து வருவதில்லை என்பதால் கொரோனா தொற்று உள்ளவர்களை யாரும் வெறுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி 91,851 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 19,060 பேருக்கு 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மேலும், அரசு மருத்துவமனையில் 205 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கண்டெயின்மெண்ட் நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-ம் நிலைக்கு செல்லக்கூடாது என்பதில் சுகாதாரத்துறையும், தமிழக அரசும் மிக உறுதியாக இருப்பதாகவும், இதனால் மக்கள் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version