உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், எங்கும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அங்கு 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

எனினும், இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று நிலையாகி வருவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்தார்.

நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 783 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில தினங்களாக கிட்டத்தட்ட இதே எண்ணிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றின் மையமாக விளங்கும் நியூயார்க்கில் 1,80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் இதில் அடங்கும்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் இத்தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளன.

எனினும், இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணங்கள் சற்று குறைந்து வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் தொற்று நோயியல் தலைவர் அந்தோனி ஃபாசி, இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 30ஆம் தேதி வரை சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதோடு, கொரோனா வைரசால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டனில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 917 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரிட்டன் மருத்துவமனைகளில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,875 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்றுவார காலமாக சரிந்து வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version