உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

சுமார் 1,30,000 பேர் இத்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அங்கு இதுவரை 26,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

3 மாதங்களுக்கு முன் மத்திய சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரசால் முதல் ஒன்றரை மாதத்தில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது. தற்போது அது இரட்டிப்பாகி உள்ளது.

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 761 பேர் மரணம்

24 மணி நேரத்தில் பிரிட்டன் மருத்துவமனைகளில் புதிதாக 761 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

அங்கு இதுவரை 12,868 மரணங்கள் பதிவாகியுள்ளன.

முக்கிய நிகழ்வுகள்

உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிதியை நிறுத்த இது சரியான நேரம் அல்ல என்று ஜநா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தார். டிரம்பின் முடிவு ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 நாட்களில் இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,633ஆக உயர்ந்துள்ளது.

டென்மார்க்கில் நர்சரி மற்றும் தொடக்க நிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் நிலை என்ன?

ஏப்ரல் 18ல் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலில் வரும் என மலாவி நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கென்யா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு அபராதமோ அல்லது 6 மாத சிறை தண்டனையோ வழங்கப்படும்.

கொரோனா இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் 33,000 நபர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பரிசோதனை செய்யப்படும் என்று ஜிம்பாப்வே தெரிவித்துள்ளது. இதுவரை அங்கு 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version